எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்- காலக்கெடுவுக்குள் முடிவெடுக்காத சபாநாயகர்- உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

By Mathi

|

Published on 5 Nov 2026, 7:56 PM

Supreme Court- MLAs

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பிரிந்த 10 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுக்கள் மீது, உரிய காலக்கெடுவுக்குள் சபாநாயகர் முடிவெடுக்காத விவகாரத்தில், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 5) உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினர், ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் தனியாகச் செயல்படத் தொடங்கினர். தங்களுக்கு 58 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், தாங்களே உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என்றும் இந்தப் பிரிவினர் கூறி வருகின்றனர். இதனிடையே ரிதப்ரதா பானர்ஜியை மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் அங்கீகரித்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் ரிதப்ரதா பானர்ஜி, அரூப் ராய், ஃபிர்ஹாத் ஹக்கீம், சந்தீபன் சாஹா, அக்ருஸ்ஸமான் அன்சாரி, ஷியூலி சாஹா, சபீனா யாஸ்மின், பிப்லப் மித்ரா, ஜாவேத் கான், ரதின் கோஷ் ஆகிய 10 எம்.எல்.ஏ.க்களையும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யக் கோரி ஜூலை 8-ந் தேதி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் இந்த மனுக்கள் மீது சபாநாயகர் முடிவெடுக்காததால் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சோவன்தேப் சட்டோபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

செப்டம்பர் 28-ந் தேதி இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, கட்சித் தாவல் தொடர்பான தகுதி நீக்க மனுக்களைச் சாதாரணமாக 3 மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்ற Keisham Meghachandra Singh v. Speaker, Manipur Legislative Assembly வழக்கின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டியது. ஜூலை 8-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு அக்டோபர் 8-ந் தேதியுடன் 3 மாதங்கள் நிறைவடைவதால், அதற்குள் சபாநாயகர் முடிவெடுக்க முயற்சிப்பார் என்று உச்சநீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்திருந்தது. ஆனால் அக்டோபர் 8-ந் தேதி தகுதி நீக்க மனுக்கள் மீது இறுதி முடிவெடுக்காமல், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

ADVERTISEMENT

இதையடுத்து சோவன்தேப் சட்டோபாத்யாய் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்ய பாக்சி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜூலை 8-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட தகுதி நீக்க மனுக்கள் மீது ஏறத்தாழ 4 மாதங்களாகியும் முடிவெடுக்கப்படவில்லை என்று வாதிட்டார். அக்டோபர் 8-ந் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருந்த நிலையிலும், சபாநாயகர் இறுதி முடிவெடுக்கவில்லை என்பதையும் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ”இந்த நிலையில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுகுவதே சரியான வழியாக இருக்கும் என்று கருதுகிறோம். உயர்நீதிமன்றத்தில் உரிய மனுவைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி அளித்து, இந்த மனுவை முடித்து வைக்கிறோம். இந்த வழக்கை இரு நீதிபதிகள் அமர்வுக்கு ஒதுக்கி, விரைவாக விசாரித்து முடிக்குமாறு கொல்கத்தா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியைக் கேட்டுக்கொள்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT

இதன் மூலம் 10 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் குறித்து உச்சநீதிமன்றம் எந்த இறுதி முடிவையும் அறிவிக்கவில்லை. சபாநாயகருக்கு புதிய காலக்கெடுவும் விதிக்கவில்லை. மாறாக, சபாநாயகர் முடிவெடுக்காததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பை வழங்கி வழக்கை முடித்து வைத்துள்ளது.

தமிழகத்தில் 2 மாத காலக்கெடு

இதேபோல தமிழகத்தில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 6 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான தகுதி நீக்க விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் முக்கியமான உத்தரவைப் பிறப்பித்திருந்தது. கடந்த அக்டோபர் 13-ந் தேதி இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, 6 பேரின் ராஜினாமாவைச் சபாநாயகர் ஏற்ற நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்தது.

அதே நேரத்தில், ராஜினாமாவை ஏற்றதால் ஏற்கெனவே நிலுவையில் உள்ள கட்சித் தாவல் தகுதி நீக்க மனுக்கள் முடிவுக்கு வந்துவிடாது என்றும் தெளிவுபடுத்தியது. இதனால் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் மீதான தகுதி நீக்க மனுக்களை 2 மாதங்களுக்குள் விசாரித்து இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு உத்தரவிட்டது. மற்ற 2 பேரான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான தகுதி நீக்க மனுக்கள் ஏற்கெனவே திரும்பப் பெறப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel