மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் உதவி ஆணையராக பணிபுரிந்த சுரேஷ்குமார், போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் சொத்து வரியை குறைவாக மதிப்பீடு செய்து பல நூறு கோடி ரூபாய் முறைகேடு செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மதுரை மாநகராட்சியின் பில் கலெக்டர் உட்பட 19 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் முறைகேட்டில் ஈடுபட்டதாக 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரசியல் ரீதியாக திமுகவுக்கும் இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. திமுகவைச் சேர்ந்த, மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்கள் பதவியும் பறிக்கப்பட்டது. அத்துடன் மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த், திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த வழக்கில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக கவுன்சிலரின் கணவர் கண்ணன், ஒப்பந்த பணியாளர் செந்தில் பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி உதவி ஆணையராக பணிபுரிந்த சுரேஷ்குமார் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது தூத்துக்குடி மாநகராட்சியில் உதவி ஆணயராக பணிபுரிந்து வருகிறார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 13 ஆக உயர்ந்துள்ளது.
முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?
மதுரை மாநகராட்சி ஆணையராக தினேஷ்குமார் பணியாற்றினார். அப்போது சொத்து வரி வசூல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது 2022-23-ம் ஆண்டில் சொத்து வரி வசூலில் மட்டும் ரூ150 கோடி முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மதுரை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில்,
- மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன்
- ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன்
- ஒப்பந்த பணியாளர்கள் தனசேகரன், சதீஷ், கார்த்திகேயன்
- இடைத் தரகர்கள் ஷாகா உசேன், ராஜேஷ்குமார், முகமது நூர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் வாசுகி, சரவணபுவனேசுவரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, கவிதா, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரி விதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி ஆகிய 7 பேரின் பதவிகளும் பறிக்கப்பட்டன.
இவ்வழக்கில் கைதானவர்கள் பலரின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.