Sவிமர்சனம்: தனுசு ராசி நேயர்களே!

public

-சுமி கிருஷ்ணா.

மூட நம்பிக்கையில் ஊறிப்போன ஒருவனுக்கும், முற்போக்குச் சிந்தனையால் முன்னேறத் துடிக்கும் ஒரு பெண்ணிற்கும் இடையே காதல் வந்தால் என்ன ஆகும் என்பது தான் தனுசு ராசி நேயர்களே படம் பார்வையாளர்களுக்குக் கூறப் போகும் ராசிபலன்.

சிறுவயதில் அப்பாவை இழந்து அம்மா விதவை கோலத்திற்கு மாற்றப்படுவதைப் பார்க்கும் அர்ஜுனிடம்(ஹரீஷ் கல்யாண்), அப்பாவின் மரணத்திற்கு ஜாதக தோஷமும், அதற்குப் பரிகாரம் தேடாமல் திருமணம் செய்து கொண்டதும் தான் காரணம் என்று தாத்தா சொல்லி விடுகிறார். இது அவனது மனதில் ஜாதக நம்பிக்கைக்கான அடிக்கல்லை நாட்டிவிட, தினசரி நாள்காட்டியின் ராசி பலன் ஒரு நாள் பலித்துப்போய் அவனது மனதில் மூட நம்பிக்கையின் ஒரு கருங்கல் மாளிகையே கட்டிவிடுகிறது. உண்பதற்கும், உடுப்பதற்கும் நேரம் காலம் பார்க்கும் அவனிடம் வேற்று மொழி பேசும் கன்னி ராசிப் பெண்ணைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று அப்பாய்ன்ட்மென்ட் கிடைக்காத அளவுக்கு பிசியான ஜோதிடர் ஒருவர் சொல்லி விடுகிறார்.

அதையும் நம்பி கண்ணிற்கு அழகான பெண்களிடம் எல்லாம் கன்னி ராசியா? என்று அர்ஜுன் கேட்கத் தொடங்கிவிடுகிறார். ஏற்கனவே சிம்ம ராசி காதலியைப் பிரிந்து அவளது கல்யாணத்திற்கும் சென்று நொந்து போயிருக்கும் அவன் முன்னால் போதையாக வந்து போதை ஏற்றுகிறார் கே.ஆர்.விஜயா(டிகங்கனா சூர்யவன்ஷி).

செவ்வாய் கிரகத்திற்குச் செல்லத் தேர்வாகிக் காத்திருக்கும் அவர், ஹரீஷைக் கண்களாலும், கவர்ச்சியாலும் கைது செய்கிறார். போதை ஒரு கட்டத்தில் பாதையை மாற்றி கட்டில் வரைக்கும் அழைத்துச் சென்று விடுகிறது. அதன் பின்னர் தான் காதலிக்கலாமா வேண்டாமா என்னும் யோசனைக்குள் இருவரும் சென்று, முடிவில் காதலும் வந்து விடுகிறது. கன்னி ராசி கைகொடுத்ததா? செவ்வாய் கிரத்திற்குச் செல்ல விஜி ராக்கெட் ஏறினாரா? அவர்கள் காதல் என்ன ஆனது? என்பதை தனுசு ராசி நேயர்களே திரைப்படத்தின் மீதிக் கதை சொல்கிறது.

டிவி ரியாலிட்டி ஷோக்கள் நல்ல கலைஞர்களுக்கு வாய்ப்புகளைத் தேடி தரும் என்பதற்கு நல்ல உதாரணமாக இந்தத் திரைப்படம் மாறியுள்ளது. படத்தின் கதாநாயகன் ஹரீஷ், தமிழ் பிக்பாஸ் சீசன் ஒன் ஃபைனலிஸ்ட், கதாநாயகி டிகங்கனா சூர்யவன்ஷி ஹிந்தி பிக்பாஸ் சீசன் 9 மூலம் பல ரசிகர்களைப் பெற்றவர். மற்றொரு ஹீரோயின் ரெபா மோனிகா ஜான் மலையாளத்தில் ஒளிபரப்பான ‘மிடுக்கி’ என்னும் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டவர். போட்டியிட மட்டுமல்ல, போட்டிபோட்டு நடிக்கவும் தங்களுக்குத் தெரியும் என்பதை அவர்கள் உணர்த்தியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஹரீஷ் நடித்த பியார் ப்ரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படங்களில் அவரது காதலும், நெருக்கமான காதல் காட்சிகளும் உங்களை ரசிக்க வைத்திருந்தால், அதை மீண்டும் பார்க்க நீங்கள் விரும்பினால் தைரியமாக இந்தப் படத்திற்குப் போகலாம். அதிலும் கேவலமான ஒரு விஷயத்தைச் செய்து அதை அறிந்து காதலி பிரிந்து செல்லும் இடத்தில் கூட ‘இன்னைக்கு எனக்கு ராசி சரியில்லை, நாளைக்கு சொல்லி இருந்தா போயிருக்காமாட்டா’ என்று சொல்லும் இடம் எல்லாம் அறியாமல் சிரிக்க வைத்துவிடுகிறது.

ரெபா மோனிகா ஒரு பாடலிலும் சில காட்சிகளிலும் மட்டும் வந்து செல்கிறார். பிளாஷ்பேக்கை ஆரம்பித்து ஒன்லி ஃபார் சாங் என்று போட்ட இயக்குநரின் நேர்மை பிடித்திருந்தது. டிகங்கனா தனது அழகாலும் கவர்கிறார், கவர்ச்சியிலும் அழகாக இருக்கிறார். ஏழு வயதில் ஹிந்தி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தனது 17 வருட அனுபவத்தை உணர்த்தும் வகையில் இயல்பாகவே நடித்திருக்கிறார். ஹரீஷின் தாய்மாமாவாக முனீஸ்காந்த் நடித்துள்ளார். என்னைப்பார் யோகம் வரும் என்பதைப் பார்த்து தனது நாளை ஆரம்பிக்கும் ஹரீஷுடன் ஒரே வீட்டில் தங்கியிருக்கும் அவரது அறையில் ‘கடவுளை மற-மனிதனை நினை’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அத்துடன் அறை முழுவதும் மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போராடிய தலைவர்களின் புகைப்படங்களும், அவர்களது புத்தகங்களும் நிறைந்திருக்கிறது. அவர் தனது பாத்திரத்தை சரியாகக் கையாண்டுள்ளார், ஆனால் ‘ஒரே வீட்டில் குடியிருக்கும் ஒட்டாத இரு துருவங்கள்’ என்ற ஒன்லைனில் இன்னும் அதிக சுவாரஸ்யங்களைக் கொண்டு வந்திருக்க முடியும். ஜோசியராக வரும் பாண்டியராஜ் சில காட்சிகளில் மட்டும் வந்து இயல்பாக நடித்துச் செல்கிறார்.

அயன் படத்தில் சூர்யாவின் அம்மாவாக நம்மை ரசிக்க வைத்த ரேணுகா, இந்தப்படத்திலும் அதே மாதிரி நம்மை ரசிக்க வைக்கிறார். ‘ஜாதகம் பாத்து கல்யாணம் பண்ணவனும் சரி, காதலிச்சு கல்யாணம் பண்ணவனும் சரி விவாகரத்து வாங்க கோர்டில தான் நிக்கிறான். புரிஞ்சு நடந்துக்கிறதில தான் இருக்கு’ என்ற அவரது வசனத்தில் வலியைக் கடந்த ஒரு உண்மை இருக்கிறது.

சார்லி ஓரிரு காட்சிகளில் வந்து சென்றாலும் தான் டாக்டர் பட்டம் பெற்ற நடிகன் என்பதை உணர்த்தியுள்ளார். ‘யோகிபாபு கதையில் இருந்தாலே படம் ஹிட்டாகிறது, அப்படியானால் யோகிபாபுவே கதை சொன்னால் சூப்பர் ஹிட்டாகும்’ என்ற நம்பிக்கையில் அவரையே கதை சொல்ல வைத்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஜிப்ரான் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு சரியாக அமைந்திருக்கிறது. எடிட்டர் குபேந்திரன் கிளைமேக்ஸில் கொஞ்சம் அதிகமாக வெட்டி விட்டாரோ என்று தோன்ற வைக்கும்படி எதையோ மிஸ் செய்வதைப் போன்ற எண்ணம் இறுதி காட்சி முடிந்தும் ஏற்படுகிறது.

தனுசு ராசி நேயர்களே, எடுத்த காரியத்தில் சில தடங்கல்கள் ஏற்பட்டாலும் இருக்கும் வரை வாழ்க்கை இனிமையாகவே கழியும்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *