கனா, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் போன்ற பல படங்களை தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தனது SK புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் குரங்கு பெடல் என்ற படத்தை தயாரித்து இருக்கிறார்.
குரங்கு பெடல் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், சந்தோஷ் வேல்முருகன், ரத்தீஷ், சாய் கணேஷ், ஜென்சன் திவாகர் உட்பட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “கொண்டாட்டம்” என்ற பாடல் வீடியோ இன்று (ஏப்ரல் 26 ஆம் தேதி) மாலை 5 மணிக்கு வெளியானது.
இந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பை முன்னிட்டு குரங்கு படத்தின் ஒரு புரோமோவை பட குழு வெளியிட்டது. அந்த புரோமோ வீடியோவில், “லீவ் விட்டாச்சுன்னு ஊர் சுத்தாம வீட்டோட இருக்கணும்னு” பள்ளி வாத்தியார் மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுக்க, உடனே அந்த சிறுவர்கள் “இந்த லீவுல ராத்திரி தூங்குறதுக்கு மட்டும் தான் டா வீட்டுக்கு போகணும்” என்று சபதம் எடுத்துக்கொண்டு தங்களது கிராமம் முழுக்க சுற்றி திரிந்து, விளையாடிக் கொண்டிருப்பது போன்ற காட்சிகள் புரோமோவில் இடம்பெற்றிருந்தது.
மேலும் கொண்டாட்டம் பாடல் வீடியோவில், சிறுவர்கள் குளங்களில் குதித்து குளிப்பது, கோழி விளையாடுவது, பனைமரம் ஏறுவது, சிலம்பம் சுற்றுவது என நமது கிராமத்து வாழ்க்கையையும், சிறுவயது அனுபவங்களையும் ஞாபகப்படுத்தும் வகையில் இந்த பாடல் படமாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பாடலுக்கு இயக்குநர் பிரம்மா வரிகள் எழுதி இருக்கிறார்.
சைக்கிள் வாங்க ஆசைப்படும் ஒரு சிறுவன், அவனது குடும்ப சூழ்நிலை, சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள அந்த சிறுவன் எடுக்கும் முயற்சிகள் என கிராமத்து பின்னணியில் இந்த படத்தை இயக்குநர் கமலக்கண்ணன் உருவாக்கி இருக்கிறார்.
வரும் மே 3 ஆம் தேதி குரங்கு பெடல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பாவ் பாஜி தோசை ரோல்
டிஜிட்டல் திண்ணை: அமைச்சரவை மாற்றம்… ஸ்டாலின் மனசில் இருப்பது என்ன?