பின்னணி இசையின் ‘ராஜா’

Published On:

| By Kavi

உதயசங்கரன் பாடகலிங்கம்

’இந்தப் படத்துக்கு இவர்தான் இசையமைச்சிருக்கார்னு ஆஸ்கர் விருதுக்குழுவுல இருக்கறவங்களுக்கு தெரியணும். அவங்க ஓட்டு போடணும். அப்போதான் ஆஸ்கர் விருதை எட்ட முடியும்’ என்று சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் நடந்த இசைக்கலைஞர்கள் சங்கம் நடத்திய பாராட்டுவிழாவில் தெரிவித்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

ADVERTISEMENT

தனது உரையில் இளையராஜா, எம்.எஸ்.வி., கே.வி.மகாதேவன், நௌஷாத், ரோஷன், மதன்மோகன் என்று பல இசைமேதைகள் மக்களின் கைத்தட்டலே பெரிய விருது என்றிருந்ததாகக் கூறினார். அந்த பேச்சின் இடையே, வெளிநாட்டுப் படங்களுக்கு இசையமைத்து, அவற்றை ஆஸ்கர் விருது விழாவுக்கு அனுப்பியதால் மட்டுமே தனக்கு அவ்விருது கிடைத்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

அந்த விருதுக்குப் பிறகு, இளையராஜாவை இதர இசையமைப்பாளர்கள் பலருடன் ஒப்பிட்டு கடுமையாகச் சமூக வலைதளங்களில் கருத்துகளைத் தெறிக்க விட்டனர் அவரது ரசிகர்கள். ஆனால், உலகளவில் பிற மொழி ரசிகர்கள் அவரது இசையை ஈர்ப்பதற்கான முயற்சிகள் பெரியளவில் மேற்கொள்ளப்படவில்லை.

ADVERTISEMENT

உலகம் முழுக்கப் பல இசை நிகழ்ச்சிகள் நடத்தியபோதும், ‘ஹௌ டூ நேம் இட்’ போன்ற சர்வதேசக் கவனத்தைப் பெறக்கூடிய ஆல்பங்களை இளையராஜா வெளியிடவில்லை. தற்போது அதற்கான நேரம் கனிந்திருக்கிறதா என்ற கேள்விக்கான பதிலை அவர் மட்டுமே சொல்ல முடியும். ஆனால், அப்படிச் சொல்வதற்கான வாய்ப்புகள் அனேகம் என்பது போன்ற ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இளையராஜாவின் பின்னணி இசை(*https://www.youtube.com/@IlaiyaraajaBGMOfficial*)க்கென்று அதிகாரப்பூர்வமான யூடியூப் சேனலொன்று அவர் தரப்பில் தொடங்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாக, இது சர்வதேச அளவில் புதிய ரசிகர்கள் பலரை ‘ராஜ இசை’ நோக்கி இழுத்து வரும்.

ADVERTISEMENT

ஒப்பில்லா ‘இசை’!

May be a graphic of 1 person and text

‘அன்னக்கிளி’ தொடங்கி ‘ஜமா’ வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. இதர ஆல்பங்கள், பக்திப் பாடல்கள் என்று சுமார் 7,000 பாடல்கள் வரை அவர் தந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவை தவிர்த்து வெளிவராமல் போன படங்களின் பாடல்கள், பதிவு செய்யப்பட்டு இசைத்தட்டுகளாக வெளிவராமல் போனவை, வெறுமனே மெட்டுகளாக மட்டுமே அமைந்தவை என்று கணக்கிட்டால் ஆயிரத்துக்கும் மேலே தேறும்.

ஒவ்வொரு பாடலிலும் இடையிசையில் தனி ராஜாங்கம் நடத்தியிருப்பார் இளையராஜா. அவற்றை அடிப்படையாகக் கொண்டு, இன்று பல பாடல்களைச் சில இசையமைப்பாளர்கள் தந்து வருகின்றனர். அடுத்தடுத்து அந்த பாடல்களைக் கேட்டால் மட்டுமே, ‘இது அதுல்ல’ என்று வடிவேலு வாய்ஸ் நமக்குள் கேட்கும்.

அந்த வகையில், இளையராஜாவின் ஒவ்வொரு பாடலையும் அலசி ஆராய்ந்து, நிதானமாக ரசித்துச் சிலாகிக்க இன்னும் பல முறை வாழ வேண்டியிருக்கும். அந்த நுணுக்கங்களைத் தன்னிசையில் பொதித்திருப்பதே ராஜாவின் சிறப்பு. அதுவே, உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் அவரது இசையோடு பிணைக்கும் வல்லமைக்குப் பின்னிருக்கிறது.

அனைத்துக்கும் மேலே, ஒவ்வொரு படத்திலும் டைட்டில் இசை, கதைக்கருவைச் சொல்கிற தீம் இசை, கதாபாத்திரங்களின் மனவோட்டத்தையும் கதையின் நகர்வையும் பார்வையாளர்களிடத்தில் அழுத்தமாகச் சொல்கிற பின்னணி இசையின் வீச்சு பற்றிச் சொல்லியாக வேண்டும். அவ்வாறு இளையராஜா பாடல் வரிகள் இல்லாமல் அமைத்த இசை, பின்னர் பாடலாக வடிவெடுத்திருக்கிறது.

மகேந்திரன் இயக்கிய ’பூட்டாத பூட்டுக்கள்’ படம், தமிழ் சினிமா ரசிகர்களில் பலர் பார்த்தறியாதது. அந்த படத்தில் அமைந்த டைட்டில் இசை, பின்னர் இளையராஜா இசையமைத்த ‘முரட்டுக்காளை’ படத்தில் வரும் ‘மாமன் மச்சான்’ பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

மணிரத்னம் அறிமுகமான ‘பல்லவி அனுபல்லவி’ படத்தில், கணவரைப் பிரிந்து குழந்தையோடு தனியே வாழ்ந்து வரும் லட்சுமி மற்றும் திருமணமாகாத இளைஞரான அனில்கபூர் இடையேயான நட்பு காதலாக மாறுவதாக ’மாண்டேஜ்’ ஒன்று உண்டு. அதற்கு இளையராஜா அமைத்த பின்னணி இசை, சில ஆண்டுகள் கழித்து ‘வாழ்க்கை’ படத்தில் ரவீந்தர், சில்க் ஸ்மிதா ஆடும் ‘மெல்ல மெல்ல என்னைத் தொட்டு’ பாடலாக உருப்பெற்றது.

அதாகப்பட்டது, ஒரு மொழியில் குறிப்பிட்ட ரசிகர்கள் மட்டுமே அனுபவிக்க முடிந்த அல்லது பெரிதாகக் கவனிக்காமல் போன நல்லிசையை மீண்டும் ஒரு படத்தில் அடிக்கோடிட்டுக் காட்ட சில கதாசிரியர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் முயற்சித்தார்கள் என்பதற்கான உதாரணங்களே மேற்சொன்னவை.

இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றிய ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தால், இதுவரை வெளியே தெரியவராத இது போன்ற பல அனுபவங்கள் தெரிய வரலாம்.

இவை தவிர்த்து ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொருவிதமாகப் பின்னணி இசை அமைப்பதிலும் இளையராஜாவை மிஞ்சியதாக எவரையும் காட்ட இயலாது.

பிற மொழிப் படங்களில் அப்படிப்பட்ட இசைக்கோர்வைகளை நம்மால் நிச்சயம் கண்டறிய முடியும். ஆனால், அதற்காக அந்த இசையமைப்பாளர் செலவழித்த நாட்களும், ஒவ்வொரு அடுக்காக மெருகேற்றிய விதமும் வேறொரு பணியனுபவத்தைக் கொண்டிருக்கும். அவர்கள் பணியாற்றிய படங்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும்.

ஒரு வெற்றிகரமான இசையமைப்பாளராகப் பணியாற்றிய காலத்தில், மிகச்சில மணி நேரங்களில் படைத்ததும், அவை காலத்தால் அழியாதிருப்பதும் நிச்சயம் ஒப்பில்லா சாதனை.

பின்னணியில் ‘ராஜாங்கம்’!

’ஒரு திரைப்படத்தில் காட்சியின் பின்னே ஒலிக்கும் இசை, அப்படத்தின் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் வலு சேர்ப்பதாக இருக்கும். சில ஆண்டுகள் கழித்து தனியே அவ்விசையைக் கேட்டால், இன்னும் பலவிதமான உணர்வுகள் உள்ளத்திற்குள் பூக்கும். அப்படியொரு இசையைத் தர வேண்டும்’ என்று எந்த இசையமைப்பாளரிடமும் நிபந்தனையிட்டு, நம்மால் ஒரு இசைக்கோர்வையைப் பெற முடியாது.

ஆனால், அதனைச் சாத்தியப்படுத்தியவர் இளையராஜா. ‘ஆண் பாவம்’ படத்தில் சீதாவைக் காதலிப்பதாகச் சொல்லும் பாண்டியன் தன் கையிலுள்ள வாட்ச்சை அவர் வைத்திருக்கும் குடத்தில் போட்டுவிட்டுச் செல்வார். அடுத்த நாள் காலையில் அவரைச் சந்திக்கும் வரை, அந்த வாட்ச்சின் சத்தத்தோடு பின்னணி இசை ஒலிக்கும். இன்று ஒரு திரைப்படம் உருவாக்கினாலும், அதில் அவ்விசையைப் பயன்படுத்த முடியும். அந்தளவுக்கு, அது நவீனமாக இருக்கும்.

’மௌனராகம்’ படத்தில் மோகன், ரேவதிக்கு இடையேயான பிளவைச் சொல்லும் பின்னணி காட்சி, இன்றும் ‘ரீல்ஸ்’களில் பயன்படுத்தப்படுகிறது.

’முதல் மரியாதை’யில் ரஞ்சனி பாத்திரத்தின் மரணத்தைச் சொல்லும் காட்சியில் அவர் நடத்தியிருக்கும் இசை ராஜாங்கத்தைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

இன்னும் புன்னகை மன்னன், முள்ளும் மலரும், ஜானி, இதயம், புதிய வார்ப்புகள், வருஷம் 16, நாயகன், சலங்கை ஒலி, சத்ரியன், இதயத்தை திருடாதே, ஹேராம் என்று சில நூறு படங்களின் பின்னணி இசையை உதாரணம் காட்ட முடியும்.

’ரீரிக்கார்டிங் தியேட்டரில் ஒரு படத்தை ஒன்று அல்லது இரண்டு முறை ஓடவிட்டு, பின்னர் அந்தப் படம் ஓடும் வேகத்தோடு ஒரு நொடி கூடப் பிசகாத வகையில் பின்னணி இசைக்கான நோட்ஸ்களை எழுதக் கூடியவர் இளையராஜா’ என்பது அவருடன் பணியாற்றிய கலைஞர்கள் பலர், அவர் பின்னணி இசை அமைக்கும் விதம் குறித்துச் சொன்னதன் சாராம்சம். உண்மையில் இது அசாதாரணமான விஷயம்.

எண்பதுகளில் இளையராஜா இசையில் வெளியான பல படங்களில் இது போன்ற பின்னணி இசையை நம்மால் கேட்டறிய முடியும். தனியே கேட்கையில் வேறுவிதமான உணர்வைத் தருகிற அவ்விசை, படத்தின் காட்சிகளோடு பார்க்கும்போது மிகப்பொருத்தமாகத் தெரியும். அந்த மாயாஜாலத்தின் எல்லையைத் தொடத்தான் இன்று பல இசையமைப்பாளர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி இளையராஜா இசையமைத்த படங்களில் நாம் கேட்டறியாத பின்னணி இசைக்கோர்வைகளை ரசிக்க உதவியாக, புதிய யூடியூப் சேனல் வழிவகுக்கும் என்று நம்பலாம்.

‘இளையராஜா அபிஷியல்’ என்ற சேனலில் எப்படி அவர் இசையமைத்த, எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் வெளியான, இன்றைய தலைமுறை அறியாத பல பாடல்கள் நவீனப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டனவோ, அது போன்றதொரு அனுபவத்தை இத்தளமும் வழங்கும் என்று நம்பலாம்.

அனைத்துக்கு மேலே, இந்த பின்னணி இசையை ‘பிளே லிஸ்ட்’டாக ஒலிக்கவிடும் ரசிகனுக்குள் மீண்டும் ஒரு ‘ஹௌ டூ நேம் இட்’, ‘நத்திங் பட் விண்ட்’ போன்றதொரு ஆல்பத்தை இளையராஜா தர வேண்டுமென்ற ஆசை நிச்சயம் ஊற்றெடுக்கும்.

உலகின் ஏதோ ஒரு இண்டு இடுக்கில் இருந்து, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் எதையும் அறியாத ரசிகர்கள் கூட்டம் அப்படியொரு வேண்டுகோளை முன்வைக்கலாம். அதற்கான வாய்ப்பை நிச்சயம் இந்த தளம் அமைத்துத் தரலாம்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து தனக்கு ஏற்புடையவற்றைப் பூர்த்தி செய்யும் ராஜா, நிச்சயம் அவற்றுக்கும் செவி சாய்ப்பார்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விமர்சனம்: Look Back!

தவெக கொள்கையும், நாதக கொள்கையும் ஒன்றா?: சீமான் பதில்!

நெருங்கும் தீபாவளி : குறைந்த தங்கம் விலை!

பிக் பாஸ் 8 : வன்மத்தை கக்கிய தர்ஷா – அட்வைஸ் செய்த சேதுபதி

விமர்சனம்: ஒற்றை பனைமரம்!

பாஜகவின் சி டீம்… இதனால் தான் அதிமுவை பற்றி விஜய் வாய்திறக்கவில்லை : அமைச்சர் ரகுபதி பேட்டி!

Ilaiyaraaja official YouTube channel

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share