seeman on tvk

தவெக கொள்கையும், நாதக கொள்கையும் ஒன்றா?: சீமான் பதில்!

அரசியல்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு  நேற்று(அக்டோபர் 27) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

நாம் தமிழர் கட்சித் தலைவரான சீமான் நேற்று(அக்டோபர் 27) காலை விஜய் கட்சி தொடங்கியது பற்றி மதுரையில் பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில், ” விஜய் கட்சி தொடங்குவதற்கு நடிகர் என்ற புகழ் ஒன்றே போதும். மக்களோடு மக்களாக நின்று களத்தில் நிற்க வேண்டும்.

இந்த மண்ணில் ஏற்படும் பிரச்சினைகளை எப்போது எதிர்கொள்கிறாரோ, அப்போதுதான் அவர் தன்னை நல்ல தலைவராக மாற்றிக் கொள்ள முடியும். என் தம்பியின் மாநாடு சிறப்பாக நடைபெறுவதை நான் பார்க்கிறேன்’என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு மதுரை கே.புதூர் பகுதி அருகே காந்திபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கச் சீமான் சென்றிருந்தார்.

அப்போது அங்கு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்,  “ஃபாசிஸம் என்று சொல்லி , திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை எத்தனை வருடங்களுக்கு ஏமாற்றுவீர்கள் என்று  விஜய் பேசியது பற்றி  சீமானிடம் கேட்கப்பட்டது.

“அவர் சொல்வது சரிதான். நான் 13 வருடங்களுக்கு முன் இதே கோபத்துடன்தான் வந்தேன். இப்போது விஜய் வந்திருக்கிறார்.”

மேடைக்கு மேடை ‘ஆ ஊ’ னு பேசுனா மட்டும் போதுமா என்று உங்களைச் சுட்டிக்காட்டி பேசுனது போல் இருந்ததே?

“இல்லை. அதை அப்படி எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை.”

உங்களுடைய கொள்கை கோட்பாடும், தவெகவின் கோட்பாடும் கொள்கையும் ஒத்துப்போகிறது. இதனால் 2026இல் அவருடன் கூட்டணி அமைப்பீர்களா?

“இல்லை, நீங்கள் சொல்வது போல் ஒத்துப்போகவில்லை. அவர் திராவிடமும் தமிழ்த் தேசியமும் தனது இரண்டு கண்களென்று சொல்கிறார். அது எங்கள் கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்றல்ல. அது வேறு இது வேறு. என் நாடு, என் மக்கள், இங்கு வாழ்கிற மக்களுக்கான அரசியல் தான் தமிழ் தேச அரசியல்.

தெலுங்கு தேசம் என்று முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் கட்சி ஆரம்பித்த போது, ஊடகங்கள் யாரும் அதை எதிர்த்துப் பேசவில்லை. ஆனால் நான் தமிழ்த் தேசம் என்று பெயர் வைத்தால், அதை ஃபாசிஸம், சாவினிஸம் (Chauvinism) என்று  விமர்சனம் செய்கிறீர்கள்.

எங்களுக்கு மொழி கொள்கையிலும் தவெகவுடன் முரண்பாடு இருக்கிறது. எங்களுடைய கொள்கை மொழி தாய் மொழிதான். எந்த மொழிவழி தேசிய இனத்துக்கும், அந்நிய மொழி கொள்கை மொழியாக இருக்க முடியாது.  உலக மொழிகளை, நாங்கள் தேவை என்றால் கற்போம்.

ஆனால் கொள்கை மொழி, பாட மொழி, பயிற்று மொழி போன்றவை எங்களுக்குத் தமிழ்தான். அது போல தான், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருக்க வேண்டும்.

பலபேர் ஈழத்திலிருந்து அகதிகளாக ஃபிரான்ஸுக்குச் சென்றார்கள் அங்கு போய்தான் ஃபிரன்ச் மொழி கற்றுக்கொண்டார்கள். தேவை என்றால் ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளலாம். ஆனால் அதைக் கொள்கை என்று ஏற்றுக்கொள்ளமுடியாது.” இவ்வாறு சீமான் பதிலளித்தார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

நெருங்கும் தீபாவளி : குறைந்த தங்கம் விலை!

பிக் பாஸ் 8 : வன்மத்தை கக்கிய தர்ஷா – அட்வைஸ் செய்த சேதுபதி

விமர்சனம்: ஒற்றை பனைமரம்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *