உதயசங்கரன் பாடகலிங்கம்
வங்கக் கடலுக்கு அப்பால் தமிழர்களின் வாழ்க்கை!
இலங்கையில் வாழும் தமிழர்களை மையமாக வைத்து எடுக்கப்படுகின்ற திரைப்படங்கள், உலகம் முழுக்கத் தமிழர்கள் வாழும் நாடுகளில் பெரிதாக வரவேற்பினைப் பெறுவதில்லை. அந்த திரைப்படங்களின் சாராம்சம் மட்டுமல்லாமல் தயாரிப்பு தரம், அதில் இடம்பெற்ற கலைஞர்களின் பங்களிப்பு போன்றவையும் அதற்குக் காரணமாக இருக்கின்றன.
இந்தச் சூழலில், 2009 போருக்குப் பிறகு அங்கு வாழ்கிற தமிழ் மக்களின் வாழ்வைப் பேசியது ‘ஒற்றை பனைமரம்’ பட ட்ரெய்லர். 2019இல் வெளியாவதாகச் சொல்லப்பட்ட இத்திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
அஸ்வமித்ரா இசையமைத்துள்ள இப்படத்தை புதியவன் ராசையா இயக்கியிருக்கிறார். ’ஒற்றை பனைமரம்’ தரும் காட்சியனுபவம் எத்தகையது?
போருக்குப் பின்..!
இலங்கையில் போர் முடிவடைந்த பிறகு, அதில் ஈடுபட்டவர்களும் சாதாரண மக்களும் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். அங்கு, ராணுவ வீரர்களின் அடக்குமுறைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் ஆளாகின்றனர்.
போர் நிகழும்போது வீடு மற்றும் உடைமைகளைத் துறந்துவிட்டு இடம்பெயர்ந்த சுந்தரம் (புதியவன் ராசையா) அதிலொருவராக இருக்கிறார். அவரது கர்ப்பிணி மனைவி குண்டுவீச்சில் பலியாகத் தனிமரமாக இருந்தவருக்கு, நிராதரவாக நின்ற பதின்ம வயதுப் பெண் ‘மகளாக’த் தெரிகிறார். அவருக்கு ‘அஜாதிகா’ (அஜாதிகா புதியவன்) என்று பெயரிடுகிறார்; தன் மகள் என்று ராணுவத்தினரிடம் தெரிவிக்கிறார்.
அதே முகாமில், போரில் ஈடுபட்ட இளம்போராளி கஸ்தூரியும் (நவயுகா) இருக்கிறார். கணவர் போரில் மடிந்தநிலையில், அவர் சரணடைந்திருக்கிறார். இலங்கை ராணுவத்தினரிடம் கஸ்தூரியைத் தனது மனைவி என்று குறிப்பிடுகிறார் சுந்தரம். பிறகு, சொந்த ஊரான கிளிநொச்சிக்கு அஜாதிகாவையும் கஸ்தூரியையும் அழைத்துச் செல்கிறார்.
பாலா எனும் நபர், சுந்தரத்திற்கு உதவிகள் செய்கிறார். தனக்குத் தெரிந்த ஒருவரது வீட்டில் அவர்களைத் தங்க வைக்கிறார். அது அக்கம்பக்கத்தினரை எரிச்சலடைய வைக்கிறது. காரணம், கஸ்தூரி மலையகத்தைச் சார்ந்தவர் என்பதே.
இதற்கு நடுவே தாங்கள் வாழுமிடத்தில் ராணுவத்தின் கெடுபிடி, சமூகவிரோதிகளின் சட்டவிரோதச் செயல்பாடுகள், அந்நிய மனிதர்களின் குடியேற்றம் போன்றவற்றைக் காண்கிறார் சுந்தரம். அதனை எதிர்கொள்ள இயலாமல் சாதீய, மத வேறுபாடுகள், எதிர்காலம் குறித்த பயம் என்று மக்கள் பல்வேறு திசைகளில் பிரிந்து கிடப்பதை உணர்கிறார்.
அதற்காக அவர் என்ன செய்தார்? அதன்பின் என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
போருக்குப் பிறகு இலங்கையில் தமிழ் மக்கள் எவ்வாறு வாழ்கின்றனர் என்பதைக் காட்டுகிறது ‘ஒற்றை பனைமரம்’. போர் நிகழ்ந்தபோது உயிரற்ற உடல்களையும், உடைமைகளையும் சில இடங்களில் அவர்கள் புதைத்துவிட்டுச் சென்றதாகச் சொல்கிறது. அதனைக் குறிப்பிடுகிறது இப்படத்தின் டைட்டில்.
நேர்த்தியான காட்சியாக்கம்!
போர் நிகழ்ந்ததைச் சொல்வது, அகதிகள் முகாமில் நடந்த அத்துமீறல்களைக் காட்டுவது, போருக்குப் பிறகும் சிலர் சாதீயத்தைத் தாங்கி நிற்பது உட்படப் பல விஷயங்கள் ‘ஒற்றை பனைமரத்’தில் உள்ளடக்கமாக விளங்குகின்றன.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் புதியவன் ராசையா, தனது பார்வையை இதில் வெளிப்படுத்தியிருக்கிறார். விருப்பு வெறுப்புகளைக் கடந்து ஒரு ஆவணமாக நோக்கும் வகையிலேயே இதன் உள்ளடக்கத்தை அமைத்திருக்கிறார். மகிந்த அபிசின்சே மற்றும் சிஜே ராஜ்குமார் இதற்கு ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர்.
தொடக்கத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளில் வண்ணக்கலவை சரியாக வெளிப்படவில்லை. அதன்பின் வரும் காட்சிகளில் அது சரி செய்யப்பட்டிருப்பதோடு, கேமிரா நகர்வுகளும் சிறப்பான இடம்பெற்றுள்ளன.
சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பு, காட்சிகள் முடிவடைவதற்கு இடம் தந்து மௌனத்தைச் சரியான அளவில் கைக்கொண்டுள்ளது. தேவையற்ற காட்சிகள் என்று எதுவும் படத்தில் இல்லை. அதையும் மீறி, திரைக்கதை மெதுவாக நகர்கிறது.
அஸ்வமித்ராவின் பின்னணி இசை இப்படத்தின் பெரும்பலம். பெரும்பாலான காட்சிகளில் மிகச்சில வாத்தியங்கள் கொண்டே அவ்விசையைத் தந்திருக்கிறார். எதிர்பார்ப்பு மிகும் இடங்களில் மட்டும் இசை பெருகி நிற்கிறது. அவ்விடங்களில் பாடல்களும் இடம்பெறச் செய்திருப்பது சிறப்பு.
’ஒற்றை பனைமரம்’ குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருப்பது சில இடங்களில் சட்டென்று தெரிய வருகிறது. நடிப்புக்கலைஞர்களின் இருப்பு குறைவாக இருப்பதும் அதற்கொரு காரணமாக இருக்கிறது.
இதில் கஸ்தூரியாக நவயுகா குமாரராஜாவும், அஜாதிகாவாக அஜாதிகா புதியவனும், சுந்தரமாக புதியவன் ராசையாவும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து பெருமாள் காசி, நூர்ஜஹான், ஜெகன் மாணிக்கம் உட்படச் சிலர் தோன்றியிருக்கின்றனர்.
புதுமுகங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் பெரிய பிரச்சனைகள் இல்லை என்ற போதும், சில இடங்களில் டப்பிங் சரிவர அமையப் பெறவில்லை. வாயசைக்காத போதும் கூடச் சில நேரங்களில் வசனங்கள் ஒலிக்கின்றன. அது போன்ற குறைகளைச் சரிப்படுத்தியிருக்கலாம்.
ஏற்கனவே செய்திகளில், கட்டுரைகளில் இடம்பெற்ற சில தகவல்கள் இத்திரைக்கதையில் காட்சிகளாக உள்ளன. அவற்றை ஆக்கியிருக்கும் விதம் எளிதாக இப்படத்தைக் காணச் செய்கிறது. அந்த நேர்த்தி தான் இப்படத்தின் பலம்.
வங்கக் கடலுக்கு அப்பால் வாழ்கிற தமிழ் மக்கள் சமகாலத்தில் எப்படிப்பட்ட சூழலில் வாழ்கின்றனர் என்கிறது இப்படம். கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றைப் பெருமைப்படுத்தும்விதமாகவோ, எதிர்மறையாக விமர்சிக்கும்விதமாகவோ இப்படம் அமையவில்லை.
‘அந்த மண்ணில் வாழ்ந்த அனுபவமுள்ள நான், ஒரு பதிவாக இப்படத்தை முன்வைக்கிறேன்’ என்பதே சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் புதியவன் ராசையா சொன்ன வார்த்தைகள். அது போலவே அங்குள்ள தமிழ் மக்களின் சமகால வாழ்வைத் திரையில் முன்வைக்கிறது இப்படம். அதுவே ‘ஒற்றை பனைமரம்’ படத்தின் யுஎஸ்பி.
தொண்ணூறுகளில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களை இடம்பெயரச் செய்தது, 2010க்குப் பிறகு அப்பகுதிகளில் சிங்கள மக்கள் குடியேறி வருவது, தமிழ் பெண்கள் மீது சில கும்பல்கள் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்துவது, அரசுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவிப்போர் மீது அடக்குமுறை ஏவப்படுவது உட்படச் சில விஷயங்களைப் பேசியிருக்கிறது இப்படம். தமிழ் மக்களில் சிலரே, தங்களில் சிலரைக் கீழ்த்தரமாக நடத்துவதாகவும் விமர்சிக்கிறது.
‘ஒற்றை பனைமரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் வாக்குவாதம் நிகழவும், அது செய்திகளில் இடம்பிடிக்கவும் இந்த உள்ளடக்கமே காரணமாக அமைந்தது. நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்ட சிலர் அதனை முன்வைத்து தமது எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.
ஆனால், ‘ஒற்றை பனைமரம்’ படம் வெளியான பிறகு, இப்படம் குறித்து எவருமே இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
நல்லதொரு திரைமொழியைக் கொண்டிருக்கிற இப்படம், ஒருவேளை ஓடிடியில் வெளியாகும்போது மீண்டும் கவனிப்பைப் பெறக்கூடும்..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்கிரவாண்டி மாநாடு : ஊர் திரும்ப முடியாமல் சாலை ஓரங்களில் உறங்கிய மக்கள்!
வேலைவாய்ப்பு : பெல் நிறுவனத்தில் பணி!
பாதாள சாக்கடையில் மூழ்கியவரைக் காப்பாற்ற சென்ற இளைஞரும் பலி!
ஹெல்த் டிப்ஸ்: உணவில் புளியை அதிகம் சேர்த்துக்கொள்வது ஆபத்தா?
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஃபைனான்சியல் அனலிஸ்ட் படிப்பு: சேருவது எப்படி?