கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் நேற்று (நவம்பர் 19) வெளியிட்ட அறிக்கையில், “தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இதன்காரணமாக தமிழகத்தில் நவம்பர் 20-ஆம் தேதி (இன்று) ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் பணி!
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்… வாக்குப்பதிவு விறுவிறுப்பு!