மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவானது இன்று (நவம்பர் 20) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆளும் மகாயுதி மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டணியான மகா விகாஸ் அகாதி இடையே கடும் போட்டியானது நிலவுகிறது. மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 81 இடங்கள், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களில் போட்டியிடுகிறது,
மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் 101, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 95, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 86 இடங்களில் போட்டியிடுகின்றன. மொத்தம் 4,136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் நவம்பர் 13-ஆம் தேதி நடைபெற்றது. இந்தநிலையில், மீதமுள்ள 38 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்தியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 43, காங்கிரஸ் 30, ராஷ்டிரிய ஜனதா தளம் 6, சிபிஐ ( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ) 4 இடங்களில் போட்டியிடுகின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக 68, ஏஜேஎஸ்யூ கட்சி 10, ஐக்கிய ஜனதா தளம் 2, லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பஸ்வான்) 1 இடங்களில் போட்டியிடுகின்றன.
ஜார்க்கண்டில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு ஹேமந்த் சோரன் முட்டி மோதி வருகிறார். அதேவேளையில், ஆட்சியை கைப்பற்றுவதற்கான தீவிரமான பணிகளில் பாஜக களமிறங்கியுள்ளது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் இரண்டு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நவம்பர் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மெட்ரோ: கோடம்பாக்கம் டூ போரூர்… அஸ்திவார தூண்கள் 100% நிறைவு!
டாப் 10 நியூஸ்: மகாராஷ்டிரா தேர்தல் வாக்குப்பதிவு முதல் திமுக உயர்நிலை குழு கூட்டம் வரை!