நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் யார் பக்கம் நிற்க போகிறார் என்று இயக்குனர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய்யின் புதிய அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி விஜய் வெளியிட்ட அறிக்கையில், “தற்போதைய அரசியல் சூழலில் ஊழல் மலிந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு இயக்குனர் அமீர் பேட்டியளித்தபோது, விஜய்யின் அரசியல் வருகை தொடர்பாக அவரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமீர்,
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு விஜய் கட்சி ஆரம்பித்திருந்தால் அவரை யாரும் கேள்வி கேட்போவதில்லை. விஜய்யை சரியாக வழிநடத்தவில்லை என்று நான் பார்க்கிறேன்.
இந்தியாவிலேயே மக்களையும், பத்திரிகையாளர்களையும் சந்திக்காமல் கட்சி தொடங்கிய நபர் விஜய் தான். இந்த அணுகுமுறையை யார் அவருக்கு சொல்லி கொடுத்தது?
விஜய் அரசியல் வருகையை வரவேற்கிறோம். இப்போது அவருக்கு ஹனி மூன் பீரியட் தான். பொது சிவில் சட்டம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, ராமர் கோவில் போன்ற ஒவ்வொரு நிகழ்வுகளிலும் இனி விஜய் கருத்து கூற தயாராக இருக்கிறாரா?
இதற்கெல்லாம் விஜய் தயாராக இருப்பார் என்றால், நாடாளுமன்ற தேர்தலுக்கும் அவர் தயாராக இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான ஒரு காலகட்டம்.
‘இரண்டு ஆளுமைகள் இல்லாத காலக்கட்டத்தில் ஒரு நேர்மையான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. இப்போது மாற்றமில்லை என்றால் எப்போதும் மாற்றமில்லை’ என்று ரஜினிகாந்த் பேசினார். அதையே தான் விஜய்யும் சொல்கிறார்.
அரசியல் களத்தில் நமக்கு தெரிந்து கொள்ள வேண்டியது நம்முடைய நண்பன் யார்? எதிரி யார்? என்பது தான். ஒவ்வொரு தேர்தலுக்கும் அது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் விஜய் யார் பக்கம் நிற்க போகிறார் என்பது தான் மிகவும் முக்கியம்” என்று அமீர் தெரிவித்துள்ளார்.
முழு பேட்டியை காண…
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…