நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை பிப்ரவரி 2ஆம் தேதி அறிவித்த நிலையில்., அவர் பாஜகவின் பி டீம் ஆக செயல்படுகிறார் அவரை இயக்குவது பாஜக தான் என்று அதிமுக அதிகாரப்பூர்வமாக குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரம் சமூக வலைதளங்களில் திமுக தரப்பினரும் விஜய் பின்னணியில் பாஜகதான் என்று கூறி வருகிறார்கள்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய், ஏன் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையமும் விஜய் கட்சி விவகாரத்தில் சில சாதகங்களை செய்திருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து தேர்தல் ஆணைய நடைமுறைகள் அறிந்த சிலரிடம் பேசினோம்.
“பொதுவாகவே ஒரு கட்சியை பதிவு செய்ய வேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்தின் விண்ணப்ப படிவத்தில் உண்மையான தகவல்களை நிரப்பி தேர்தல் ஆணையத்தில் அதற்காக அமர்த்தப்பட்டு இருக்கும் அதிகாரியிடம் அளிக்க வேண்டும்.
இந்த படிவத்தை முன்பெல்லாம் தேர்தல் ஆணையத்துக்கு சென்று நேரில் தான் வாங்க வேண்டும். ஆனால் தற்போது இணையத்திலேயே டவுன்லோட் செய்து கொள்ளலாம். அந்தப் படிவத்தில் கட்சியின் பெயர் என முதன்மைப் பெயராக ஒன்றையும், மற்ற சாய்ஸ்களாக இரு பெயர்களை குறிப்பிட வேண்டும். அதில் எந்த பெயரை வேறு யாரும் பயன்படுத்தவில்லையோ அந்தப் பெயரை தேர்தல் ஆணையம் வழங்கும்.
குறைந்தது 100 இந்திய குடிமகன்கள் அந்த விண்ணப்ப படிவத்தில் முன்மொழிய வேண்டும். மேலும் கட்சியின் அடிப்படை கொள்கை என்ன சட்டதிட்டங்கள் என்ன என்பது பற்றியும் குறிப்பிட வேண்டும். இவற்றை நிரப்பி தேர்தல் ஆணையத்திடம் அளித்த பிறகு அவர்கள் அதற்கு ஒப்புகை சீட்டு வழங்குவார்கள்.
அதன் பிறகு மாநிலக் கட்சியாக இருந்தால் இந்த விண்ணப்பம் சம்பந்தப்பட்ட மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும். அங்கே சில நிர்வாக பரிசீலனைகள் நடந்த பின் குறைந்தபட்சம் ஒரு மாதம் அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்குள் தேர்தல் ஆணையத்திடமிருந்து அஞ்சல் வழியாக கட்சியை பதிவு செய்ததற்கான அதிகாரப்பூர்வ தகவல் சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பப்படும். இது வழக்கமான நடவடிக்கை.விஜய் விவகாரத்தில் இதெல்லாம் இப்போதுதான் நடக்கத் தொடங்கியிருக்கின்றன.
இப்போது இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. 2023 ஜனவரி மாத கணக்கீட்டின்படி இந்தியாவின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 95 கோடி பேர். இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான வாக்காளர்களுக்கு மத்தியிலே நடத்தப்படும் மிகப் பிரம்மாண்டமான நாடாளுமன்றத் தேர்தலை உலகமே வியந்து பார்க்கிறது.
தேர்தல் ஆணையத்தின் ஒட்டுமொத்த இயந்திரமும் உலகிலேயே பிரம்மாண்டமான இந்தியாவின் மக்களவைத் தேர்தலுக்காக முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், விஜய் தனது புதிய கட்சியின் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை பிப்ரவரி 2 ஆம் தேதி தேர்தல் ஆணைய அலுவலகம் சென்று அளித்ததும் அவர்கள் அதற்கு உடனடியாக ஒப்புகை சீட்டு வழங்கியதும் அரசியல் வட்டாரத்தில் வியப்பாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு இந்திய சரித்திரத்தில் ஒரு அரிதான நிகழ்வு நடந்தது. 1996 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜி கே மூப்பனார் விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை அவசரமாக தொடங்கினார்.
அதாவது 1996 சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பாக தான் இந்த முடிவை மூப்பனார் எடுத்தார். 91-96 ஜெயலலிதா ஆட்சியில் பல்வேறு சர்ச்சைகளின் விளைவாக 96 சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதுவரை அதிமுகவின் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி மீண்டும் அதிமுகவோடு இணைந்து தேர்தலை சந்திக்க மறுத்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இந்த உணர்வை ஜிகே மூப்பனார் டெல்லி தலைமைக்கு தெரியப்படுத்தினார். ஆனால் அவர்கள் மீண்டும் அதிமுகவோடே கூட்டணி என்ற முடிவில் இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் மூப்பனார் தலைமையில் அப்போது காங்கிரஸில் இருந்த பெரும்பாலான சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியாக பிரிந்து புதிய கட்சியை தொடங்கினார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி என்று அதற்கு பெயரிட்டார்கள்.
அந்த நேரத்தில் தேர்தல் ஆணையம் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிக்கையை வெளியிட்டு விட்டது. அப்போது தமிழ் மாநில காங்கிரஸில் முக்கிய தலைவராகவும் டெல்லியில் செல்வாக்கு மிக்கவருமான ப. சிதம்பரம் அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் டி. என். சேஷனை டெல்லியில் சென்று சந்தித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பதிவு செய்வதற்கான அவசரத்தை வலியுறுத்தினார். இதன் அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கைக்குப் பின் ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டது.
அப்போது ப. சிதம்பரம் டெல்லியில் செல்வாக்கு மிக்கவராக இருந்ததால் இது சாத்தியமானது. இப்போது பதிவு செய்த அன்றே தேர்தல் ஆணையத்தின் நிர்வாக நடைமுறைகள் பற்றி அலட்டிக் கொள்ளாமல் விஜய் தனது கட்சி பெயரை அறிவித்தது எந்த அடிப்படையில் என்றுதான் கேள்விகள் எழுப்பப்படுகின்றன” என்கிறார்கள்.
இது குறித்து விஜய் தரப்பில் விசாரித்த போது,
“தேர்தல் ஆணைய நடைமுறைகளை நாங்களும் அறிவோம். நாங்கள் சூட்ட விரும்பிய கட்சியின் பெயர் இதுவரை தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சிக்கும் இல்லை, இந்த பெயருக்காக வேறு எந்த கட்சியும் விண்ணப்பிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்டு விட்டதால்தான் நாங்கள் உடனடியாக அதை அறிவிப்பு செய்தோம்.
மேலும் அடுத்து வரும் காலங்களில் தேர்தல் ஆணையம் கட்சிகளை பதிவு செய்வதற்கான கட்டுப்பாடுகளை மிக தீவிரமாக்க கூடும் என்ற எச்சரிக்கை உணர்வும் இதற்கு ஒரு முக்கிய காரணம். தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்த பின், இவ்வாறு நாங்கள் விண்ணப்பித்துள்ளோம் என்று அறிவிப்பு மட்டுமே செய்திருக்கிறோம்., தேர்தல் ஆணையத்தின் நிர்வாக நடைமுறைகள் முடிந்த பின் நாங்கள் எங்களது கட்சிப் பணிகளை முறையாகத் தொடங்குவோம்.
இன்னும் சொல்லப் போனால் தேர்தல் ஆணையத்தில் நாங்கள் விண்ணப்பம் அளித்ததற்குப் பின்னால் எவ்வளவு பெரிய போராட்டம் நடத்தியிருக்கிறோம் என்பதை எல்லாம் பின்னால் தேவைப்பட்டால் விளக்குவோம்.
ஏதோ தேர்தல் கமிஷன் சாதகம் செய்துவிட்டது என்றும் அதற்கு பாஜக பின்னால் இருக்கிறது என்றும் விஜயின் அரசியல் வருகையை சீரணித்துக் கொள்ள முடியாதவர்கள் கிளப்பி விடுகிறவை. தேர்தல் ஆணையம் விஜய் கட்சிக்காக எந்த விதிகளையும் தளர்வு செய்யவில்லை” என்கிறார்கள்.
–வேந்தன்
நாடாளுமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டி: மதிமுக உறுதி!
திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: நடந்தது என்ன?