நானே வருவேன்: விமர்சனம்!

Published On:

| By Kavi

வி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் “நானே வருவேன்“.

தனுஷ் எழுதியுள்ள கதைக்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் அவரது அண்ணன் செல்வராகவன்.

ADVERTISEMENT

தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஒரு நாயகியாக இந்துஜாவும், இன்னொரு நாயகியாக எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகையும் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரபு, யோகி பாபு   நடித்துள்ளனர்.

பிரபு மற்றும் கதிர் என்ற இரட்டை மகன்களுடன் கோவையின் மலைப் பகுதியில் வசித்து வருகிறார்கள் சரவண சுப்பையாவும் அவரது மனைவியும். இருவரில் மூத்தவனான கதிரின் நடவடிக்கைகள் திடீர் என  சைக்கோத்தனமாய் மாறுகிறது.

ADVERTISEMENT

கதிரின் சைக்கோத்தனம் முற்றிப் போய் ஒரு கட்டத்தில் அப்பாவையே கொலை செய்துவிடுகிறான்.

இவர்களது அம்மா இருவரின் ஜாதகத்தையும் ஜோதிடரிடம் கொடுத்து பரிகாரம் கேட்க.. “கதிரை உடன் வைத்துக் கொள்ளாதே.. அவன் இன்னொரு மகனை நிச்சயம் கொன்றுவிடுவான்” என்கிறார் ஜோதிடர்.

ADVERTISEMENT

இதனால்  கதிரை அனாதையாக விட்டுவிட்டு அவனது அம்மா பிரபுவை மட்டும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்துவிடுகிறார்.

தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கும் பிரபுவுக்கு இந்துஜாவுடன் திருமணமாகி 12 வயதில் ஒரு பெண்ணும் இருக்கிறாள்.

இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள இந்துஜா ஆர்வமாக இருந்தாலும், தன் வாழ்க்கை படிப்பினையை ஒரு பாடமாக எடுத்துக் கொண்ட பிரபு, அது வேண்டாம் என்கிறார்.

இந்த நேரத்தில் திடீரென்று மகளின் நடவடிக்கைகளில் அமானுஷ்யமாக தெரிகிறது, தனது அறைக்குள் யாரோ ஒருவருடன் அவள் தனிமையில் பேசுகிறாள், அழுகிறாள்.

மன நல மருத்துவரிடம் அவளை அழைத்துச் சென்றும் பிரயோசனமில்லாமல் இருக்கிறது. கடைசியாக தன் மகளைப் பிடித்திருப்பது ஒரு பேய் என்பது பிரபுவுக்குத் தெரிய வருகிறது.

தன் மகளை விட்டு விலகுமாறு பேயுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் பிரபு.

பேயோ தான் சொல்லும் ஒருவனை கொலை செய்தால்தான் அவரது மகளைவிட்டு விலகுவேன் என்கிறது.

அந்தக் கொலை செய்யப்பட வேண்டியவன் யார் என்று தெரிகிற போது அதிர்ந்து போகிறார் பிரபு அவரின் அண்ணன் கதிர் தான் அது.

அந்தப் பேய்க்கும், கதிருக்கும் என்ன சம்பந்தம்..? கதிரை கொலை செய்ய பேய் ஏன் துடிக்கிறது..? இனி என்ன நடக்கிறது என்பது கதை.

பேய், அமானுஷ்யம், திரில்லர் கலந்த படத்தின் திரைக்கதைதான் “நானே வருவேன்”.

பிரபு, கதிர் என்று இரட்டை வேடத்தில் படம் முழுவதையும் ஒற்றை மனிதராக சுமக்கிறார் தனுஷ்.

ஒரு பக்கம் ஒரு சாதுவான குடும்பத் தலைவனாக, பாசமிக்க அப்பாவாக, அன்பான கணவனாக, அமைதியின் அடையாளமாக‘பிரபு’ என்ற கதாபாத்திரத்திலும்,

சைக்கோத்தனம் கலந்த கொடூர வில்லனாகவும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தை நடிப்பில் காட்டியிருக்கிறார் தனுஷ்.

யோகிபாபுவிடம் அப்பாவியாக பேயைப் பற்றி விசாரிப்பதும், தன்னிரக்கம் கொண்டு கவலைப்படுவதும், மகளிடம் பாந்தமாகப் பேசி உண்மையை சொல்ல வைக்கும் இடத்திலும் தனுஷ் என்கிற நடிகர் தெரியவில்லை பிரபுதான் தெரிகிறார்.

இதேபோல் பிரபுவை போலவே தொடக்கத்தில் அமைதியான குணத்தைக் காட்டிவிட்டு, பின்பு இன்னொரு சந்தர்ப்பத்தில் “எனக்கு இன்னொரு முகம் இருக்கு” என்ற ரீதியில் காட்டும் கொடூர வில்லத்தனமும், மனைவி, மகன்களிடத்தில் பாசமாக இருந்தாலும் தன்னைப் பற்றிய உண்மை தெரிந்தவுடன் முழுக்க, முழுக்க சைக்கோவாக மாறி நடித்திருப்பதிலும் கதிர்தான் தெரிகிறார்.

தனுஷின் மகளாக நடித்திருக்கும் ஹியா டேவி தனுஷ்க்கு போட்டியாக படம் நெடுக நடித்திருக்கிறார்.

பேயிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் காட்சியிலும், பேய் சொல்வதைக் கேட்டுக் கேட்டு அப்பாவிடம் சொல்லும் காட்சியிலும், பேய் தன் உடம்பில் ஏறியவுடன் காட்டும் திமிரும், அலட்சிய சிரிப்புமாய் ஒரு தேர்ந்த நடிகையின் நடிப்பை திரையில் கொண்டுவந்திருக்கிறார்.

இந்துஜா, எல்லி அவரம் இருவருமே பாவமான மனைவிகளாக நடித்துள்ளனர். இந்துஜா இந்தக் கேரக்டருக்கு மிகவும் பொருத்தமானவராகவே இருக்கிறார்.

கையறு நிலையில் இருக்கும் அம்மா, மனைவி கேரக்டரை நிறைவாகவே செய்திருக்கிறார் இந்துஜா.

படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே நடித்து கவனம் பெற்றுள்ளார் இயக்குநர் செல்வராகவன். தனுஷின் மகன்களாக வரும் பிரபவ், பிரணவ் இரட்டையர்களின் நடிப்பும் அபாரம்.

தனுஷ் செய்த கொலைகளை நேரில் பார்க்கும் மூத்த மகன் தனது பயம், பரிதவிப்பு, இயலாமை, என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளை திரையில் பார்க்கும்போது பதட்டம், பரிதவிப்பு பார்வையாளனை தொற்றிக்கொள்ளும்.

சென்னையில் வீட்டுக்குள் நடக்கும் மர்ம சம்பவங்களை படம் பிடித்திருக்கும்விதம் பரபரப்பை கூட்டியிருக்கிறது.

இதேபோல் கதிரைத் தேடி பிரபு செல்லும் காட்சியில் அந்தக் காட்டுப் பகுதி நம் மனதைவிட்டுப் பிரிய முடியாத அளவுக்குப் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் மற்றுமொரு கதாநாயகன்  இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாதான். கதிரின் ஆர்ப்பாட்டமான அறிமுகக் காட்சியில் ஒலிக்கும் ‘வீரா சூரா’ பாடலும், பின்னணி இசையுமே அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி உயர்த்துகிறது.

மிகச் சரியாக 2 மணி நேரத்தில் முடியும் அளவுக்கு தேவையற்ற காட்சிகள் இல்லாமல் படத் தொகுப்பு செய்திருக்கிறார் படத் தொகுப்பாளர் புவன் சீனிவாசன்.

ஒட்டு மொத்தமாய் பார்க்கப் போனால் படத்தின் முதல் பாதியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. இடைவேளைக்கு பின் படத்தை முடிக்க திரைக்கதை அலை பாய்கிறது என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியாது.

கிளைமாக்ஸ் காட்சியை மர்மமாகவே முடித்துள்ளார். பிழைத்திருப்பது கதிரா, பிரபுவா என்பதை பார்வையாளன் முடிவுக்கே விட்டுவிட்டார்.

கதிரின் சைக்கோத்தனத்திற்கான ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணத்தை சொல்லாதது.. என்று பல கேள்விகள் இந்தப் படத்தில் கேட்கப்பட வேண்டியவைகள் என்றாலும், இது அத்தனையையும் புறந்தள்ளிவிட்டு ஒரு சுவையான திரில்லிங் அனுபவத்தைத் தரும் படம் “நானே வருவேன்”.

எழுத்து, இயக்கம்: செல்வராகவன், 

கதை: தனுஷ்

தயாரிப்பு: கலைப்புலி எஸ்.தாணு

இசை: யுவன் சங்கர் ராஜா,

ஒளிப்பதிவு :ஓம் பிரகாஷ், 

படத் தொகுப்பு: புவன் சீனிவாசன்,

நடனம்:  கல்யாண், சதீஷ், 

ஸ்டண்ட் : சுப்பராயன், ஸ்டன் சிவா,

பாடல்கள்: யுகபாரதி, மதன் கார்க்கி, செல்வராகவன், தனுஷ்.

இராமானுஜம்

பொன்னியின் செல்வன்: விமர்சனம்!

கிச்சன் கீர்த்தனா : சாமை – பச்சைப்பயறு – நல்லெண்ணெய் சாதம்!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share