தனுஷ், செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் தயாரான நானே வருவேன் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
இந்தப் படம் பற்றி நடிகரும்,தயாரிப்பாளரும், இயக்குநருமான பார்த்திபன் நேற்று சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சூசகமாக கிண்டலடித்தார்.
நானே வருவேன் படம் வழக்கமான செல்வராகவன் படம் போல் அல்ல என விமர்சகர்கள் படம் பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளிவரும் நாளில் வேறு படங்கள் வெளியிட கூடாது.
அப்படி வெளியிட்டால் படம் வணிக ரீதியாக தோல்வி அடையும் என்கிற பிம்பம் கடந்த பத்து ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.
இதனால் சிறு பட்ஜெட் படங்கள், புதுமுகங்கள் நடிக்கும் படங்கள் குறைந்து வருகிறது.
குறிப்பிட்ட நடிகர்கள் நடித்த படங்கள் மட்டுமே திரையரங்குகளில் ஓடும் என்கிற மனோநிலை தயாரிப்பாளர்கள் மத்தியில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதனால் பார்த்திபன் நடித்து இயக்கிய” ஒத்த செருப்பு” படமும் பாதிக்கப்பட்டது.
அந்தப் படத்திற்கு திரையரங்கு கிடைக்காமல் அவர் புலம்பியது தமிழக அரசின் தலைமை செயலகம் வரை எதிரொலித்தது.
அப்படி பாதிப்புக்குள்ளான நடிகர் பார்த்திபன் “பொன்னியின் செல்வன்” படத்தில் நடித்திருக்கிறார்.
அந்தப் படத்திற்கு போட்டியாக வேறு எந்தப்படமும் வெளிவந்துவிடக்கூடாது வந்தால் தோல்வி என்கிற பிரச்சாரம் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள 1100 திரைகளிலும் குறிப்பிட்ட படத்தை மட்டும் திரையிட முடியாது. அதற்குரிய பார்வையாளர்கள் தமிழகத்தில் எந்த நடிகருக்கும் இல்லை.
மாற்று படங்கள் வந்தால்தான் எல்லா திரைகளிலும் புதிய படங்கள் ஓடும் தியேட்டர் வணிகம் தடுமாற்றமில்லாமல் நடைபெறும்.
இந்நிலையில் பார்த்திபன்” நானே வருவேன்” படம் ரீலீஸ் ஆனதைச் சம்பந்தம் இல்லாமல் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கிண்டல் செய்ததை மேடையிலிருந்த நடிகர்களே ரசிக்கவில்லை என்கின்றனர் திரையுலகினர்.
நேற்று மாலை 3 மணிக்கு சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் பொன்னியின் செல்வன் படத்திற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின்போது பேசிய பார்த்திபன், “நானே வருவேன்” என்று சொல்லிவிட்டு அடம் பிடித்துத்தான் இன்று வந்தேன்.
இன்றைக்குப் பத்திரிகையாளர் சந்திப்பு என்றதும் என்னால் வர முடியாது என கூறிவிட்டேன்.
செப்டம்பர் 30காலை தஞ்சாவூரில் படத்தைப் பார்க்கப்போகிறேன். படத்தை பார்த்துவிட்டு தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் சென்று வணங்கிவிட்டு,
ராஜ ராஜ சோழன் சிலைக்கு மரியாதை செலுத்திட்டு வரலாம். அதுதான் என்னுடைய திட்டம் என கூறி வர இயலாது என்றேன்.
பிறகு ‘நானே வருவேன்’ என நேற்று இரவு அடம்பிடித்து இன்று காலையில் வந்துவிட்டேன்” என்று கிண்டல் செய்தார்.
அவர் பேசும் போது உடனிருந்த நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு ஆகியோர், அவர் ‘நானே வருவேன்‘ படத்தை கிண்டலடித்தபோது எந்தவித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் நின்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்