செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன் திரைப்படம் இன்று (செப்டம்பர் 29) காலை 8 மணிக்கு உலகமெங்கும் வெளியானது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் நானே வருவேன் திரைப்படம் திரையரங்குகளில் இன்று காலை 8 மணிக்கு வெளியானது.
செல்வராகவன் இயக்கத்தில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம், மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் ’வீரா சூரா வாடா வாடா’ மற்றும் ’இரண்டு ராஜா’ ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
முன்னணி நடிகர்களின் படம் என்றாலே காலை 4 மணி காட்சிகள் வெளியாகும். ஆனால் தனுஷின் நானே வருவேன் காலை 8 மணிக்கு தான் முதல் காட்சி வெளியானது.
இது குறித்து ஒரு புரோமோஷன் நிகழ்ச்சியில் கலைப்புலி எஸ். தாணு விளக்கம் அளித்திருந்தார்.

“நானே வருவேன் படத்தைப் பொன்னியின் செல்வன் படத்துக்குப் போட்டியாக வெளியிடவில்லை.
செப்டம்பர் இறுதியில் வெளியிட வேண்டும் என்று கடந்த ஜூன் மாதமே முடிவு செய்து விட்டேன்.
அதோடு இந்த முறை 9 நாட்கள் பள்ளி விடுமுறை என்பதால் இந்த வாய்ப்பினை தவறவிட நான் விரும்பவில்லை.
இதற்கு முன்பு நான் தயாரித்த அசுரன், கர்ணன் போன்ற படங்களுக்கு அதிகாலை காட்சிகள் போடவில்லை.
காலை எட்டு மணிக்குத்தான் முதல் காட்சி திரையிட்டோம்.
காரணம் அந்த காட்சியில்தான் உலகம் முழுக்க அனைவரும் பார்க்க முடியும்.
அதனால் தான் நானே வருவேன் படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்குத் திரையிடப்பட உள்ளது” என்று கூறியுள்ளார்.
புரோமோஷனில் ஆர்வம் காட்டாத தனுஷ்
ஒரு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவித்த பிறகு, அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகப் படக்குழுவினர் புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபடுவார்கள்.
ஆனால் நானே வருவேன் படத்தின் புரோமோஷன் வேலைகளில் நடிகர் தனுஷ் அதிகளவு ஆர்வம் காட்டாமலேயே இருந்து வந்தார்.

ஆனால் நானே வருவேன் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதும், இந்த படம் சைகோ திரில்லர் படமாக இருக்கும் என்ற அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தைப் பார்ப்பதற்கான ஆர்வம் அதிகரித்தது.
படம் குறித்து ரசிகர்களின் கருத்து
படத்தின் முதல் பாதியே மிக சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் இப்படம் இயக்குநர் செல்வராகவனுக்கு ஒரு ’கம் பேக்’ ஆக இருக்கும் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

தனுஷ் இப்படத்தில், வில்லனாகவும், ஹீரோவாகவும் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதும், அவரது நடிப்பாற்றலும் சிறப்பாக உள்ளது என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மோனிஷா
காசியின் புனிதம் கலந்த காதல் கதை : ‘பனாரஸ்’!
திமுக உட்கட்சி தேர்தல் : 7 புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம்!