உலகம் முழுவதும் தமிழ் சினிமா ரசிகர்கள் கவனம் முழுவதும் கல்கியின் கற்பனை புதினமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மீது குவிந்திருக்கிறது.
படத்தை விளம்பரம் செய்வதற்காக மணிரத்னம் தலைமையில் இந்தியா முழுவதும் அப்படத்தில் நடித்துள்ள விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பயணம் செய்து தத்தமது ஊர் திரும்பியுள்ளனர்.
நாளை சுமார் 700 திரைகள் வரை அந்தப்படம் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், த்ரிஷா ஆகியோரது அகில இந்திய ரசிகர் மன்றங்கள் பொன்னியின் செல்வன் படத்தை வெற்றி பெற செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில்,
13 வருடங்களுக்கு பின் தனுஷ், செல்வராகவன், யுவன் சங்கர்ராஜா கூட்டணியில் “நானே வருவேன்” திரைப்படம் செப்டம்பர் 29 அன்று வெளியாகும் என ஒரு வாரத்துக்கு முன்பு அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அறிவித்தார்.
பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக ரிலீஸ் செய்து வெற்றிபெற முடியுமா, தனுஷ்க்கு வேண்டாத வேலை என கடந்த ஒரு வார காலமாக ஊடகங்கள் எழுதி வந்தன.
இந்த சூழலில் இன்று தமிழ்நாடு முழுவதும் 650 திரைகளில் தனுஷ்-செல்வராகவன் – யுவன் சங்கர்ராஜா ரசிகர்களின் ஆரவார கொண்டாட்டங்களுக்கு மத்தியில்” நானே வருவேன்” வெளியானது.
வெளிநாட்டில் தணிக்கைக்காக படம் பார்க்கும் வெளிநாட்டு சென்சார் போர்டை சேர்ந்த உமர் சந்து “நானே வருவேன்” படம் பார்த்துவிட்டு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில்,
“நானே வருவேன் திரைப்படம் 2022 ஆம் வருடத்தின் மிக சிறந்த திரில்லர்களில் ஒன்று! அனைவரையும் ஈர்க்கும் கதை மற்றும் திரைக்கதை.
தனுஷ் தன்னுடைய நடிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளையடிப்பார்.
செல்வராகவனின் ஆச்சர்யமான க்ளைமாக்ஸ் உங்கள் மனதை வருடும்” என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவர், “2022 தனுஷுக்கான வருடம் என படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளார். தனுஷ் இந்தியாவில் உள்ள மிக சிறந்த நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கதை மீது கொண்ட நம்பிக்கை காரணமாக, பின்வாங்கி செல்லாமல் “நானே வருவேன்” படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
காலையில் படம் பார்த்த ரசிகர்களும், விமர்சகர்களும் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இன்றைய தினம் தமிழகத்தில் 10 கோடி முதல் 14 கோடி வரை” நானே வருவேன்” படம் மொத்த வசூல் செய்யும் என திரையரங்கு வட்டாரத்தில் கூறுகின்றனர்.
நாளை பொன்னியின் செல்வன் வெளியானாலும்” நானே வருவேன்” திரையரங்குகளில் தனித்து நிற்கும் கலைப்புலி தாணு – தனுஷ் கூட்டணியில் வெளியான அசுரன்,கர்ணன் வரிசையில்” நானே வருவேன்” வணிகரீதியாகவும், படைப்பு ரீதியாகவும் இடம்பெறும் என்பதே தற்போதைய நிலவரம்.
இராமானுஜம்
அநாகரீகமாக பேசிய பீகார் ஐஏஎஸ்: பதிலடி கொடுத்த தமிழக ஐபிஎஸ்!
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு!