சுந்தர சோழராக பிரகாஷ்ராஜ், ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியதேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினி ஆக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன்,
வைணவத்தின் பெருமை பேசும் ஆழ்வார்க்கடியானாக ஜெயராம்,
பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு, பெரிய வேளார் ஆக பிரபு, பாண்டிய படையின் தலைவனாக கிஷோர், மதுராந்தகன் ஆக ரகுமான், பூங்குழலி ஆக ஐஸ்வர்யா லட்சுமி, கொடும்பாளூர் இளவரசி வானதி ஆக சோபிதா துலிபாலா, சேந்தன் அமுதன் ஆக அஷ்வின் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் படம் எப்படியிருக்கிறது?
சோழப் பேரரசில் ஏற்படும் பதவி போட்டி, அதனையொட்டி எழும் வஞ்சகம், சூழ்ச்சி இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சோழ வம்சத்தை நிர்மூலமாக்க போராடும் பாண்டியர்கள் என பின்னப்பட்ட திரைக்கதைதான் பொன்னியின் செல்வன்.
கமல்ஹாசனின் கரகரத்த அறிமுகக் குரலுடன் முதல் பாகமாக திரையில் விரிகிறது.
காஞ்சியில் இருக்கும் ஆதித்த கரிகாலனுக்கு சோழ நாட்டில் சதி நடப்பது தெரியவர, தன் நண்பன் வந்தியத்தேவனிடம் இரண்டு தகவல்களை தனித் தனி ஓலைகளாக கொடுத்து அதில் ஒன்றை தனது தந்தை சுந்தர சோழனிடமும், மற்றொன்றை தங்கை குந்தவையிடமும் ஒப்படைக்குமாறு கூறுகிறார்.
ஆதித்த கரிகாலனின் ஆணையை ஏற்று சோழநாடு செல்லும் வந்தியத்தேவன் அங்கு நடக்கும் சூழ்ச்சியை அறிந்துகொண்டு, அரசனிடமும், இளவரசியிடமும் உண்மையைச் சொல்ல இறுதியில் எதிராளிகளின் சூழ்ச்சி கைகூடியதா, இல்லையா என்பதுடன் வந்தியத்தேவனின் பயணத்தில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் ‘பொன்னியின் செல்வன் 1’
‘பொன்னியின் செல்வன்‘ நாவலுக்கு இயக்குநர் மணிரத்னம், அவருடன் இளங்கோ குமரவேலும், ஜெயமோகனும் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். வசனத்தை ஜெயமோகன் எழுதியுள்ளார் . ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
பொன்னியின் செல்வன் நாவலின் ஆகச்சிறந்த பலமே கதை தொடக்கத்தில் இருந்து முடியும்வரை அவரது எழுத்தில் உருவகப்படுத்தப்பட்ட பிரமாண்ட காட்சிகளை அதனைபடிக்கும் வாசகனை உணர வைத்து பரவசப்படுத்தியிருப்பார்.
வந்தியத்தேவனின் பாதைகளை கல்கி விவரிக்கும்போது நாமும் வந்தியத்தேவனின் பின்னால் அமர்ந்து செல்லும் உணர்வை நாவல் கொடுக்கும். அதனை திரைமொழியில் சாத்தியமாக்க முடியுமா என்கிற கேள்வி படத்தின் அறிவிப்பு வெளியானபோது பொன்னியின் செல்வன் நாவலை படித்த ரசிகர்களால் எழுப்பப்பட்டது.
கல்கியின் அந்த எழுத்துகளுக்கு திரைவடிவம் கொடுக்க முடிந்த அளவுக்கு முயற்சித்திருக்கிறார் மணிரத்னம். ஆனால் அது முழுமையடையவில்லை.
நாவலை அப்படியே படமாக்காமல், படத்தின் கால அளவிற்கேற்ப பல இடங்கள் கத்தரிக்கப்பட்டு சுருக்கப்பட்டுள்ளன.
படத்தின் பலமே அதன் தேர்ந்த நடிகர்கள் கூட்டம்தான். ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடிக்கிறார். நந்தினியை நினைத்து உருகும் காட்சிகளிலும், போர்க் களத்தில் எதிரிகளுடன் யுத்தம் செய்யும் காட்சிகளிலும் கல்கியின் ஆதித்த கரிகாலனை உணரவைக்கின்றார் விக்ரம்.
கதையை நகர்த்தி செல்லும் வந்தியதேவனாக நடித்திருக்கிறார் கார்த்தி.
நாவலில் அந்தக் கதாபாத்திரத்திடம் எப்போதுமே ஒரு குறும்பு இருக்கும். அதை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் கார்த்தி.
நந்தினியாக ஐஸ்வர்யாராயை சந்திக்கும் காட்சி, இளவரசி குந்தவை த்ரிஷாவை சந்திக்கும் காட்சி, பூங்குழலி ஐஸ்வர்ய லட்சுமியை சந்திக்கும் காட்சிகளில் உள்ள அந்த காதல் குறும்புகளில் சுவாரசியம் பொங்கி வழிகிறது.
இளமை தளும்பும், இளவரசனாக ஜெயம் ரவி இடைவேளைக்கு பின்னர் பிரம்மாண்டமான போர்க்கள காட்சியுடன் அறிமுகமாகிறார்.
ஐஸ்வர்யா ராய், த்ரிஷா இருவரும் காட்சிக்கு அழகூட்டி நாவலில் உள்ள கல்கியின் வர்ணணைகளுக்கு நியாயம் சேர்க்கின்றனர். குறிப்பாக, இரண்டு பேரும் எதிரெதிராக சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் பார்வையாளனை சில்லிட வைக்கும்.
கல்கியால் செயற்கையாக நாவலில் கட்டமைக்கப்பட்ட வைஷ்ணவர் ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரத்திற்கு ஜெயராம் உயிர் கொடுத்திருக்கிறார்.
ஆதித்த கரிகாலன் – நந்தினிக்கான குட்டி ஃப்ளாஷ்பேக் ஈர்ப்பு. இரண்டாம் பாதியில் கப்பலில் நடக்கும் சண்டைக் காட்சிகள், போர்க் காட்சிகள், தோட்டாதரணியின் கலை ஆக்கம் படத்தின் தரத்தை கூட்டுகின்றன.
ரவி வர்மனின் ஒளிப்பதிவில் பிரமாண்ட காட்சி அனுபவம் கண்களுக்கு விருந்து. குறிப்பாக விக்ரம் ஐஸ்வர்யா ராய் குறித்து சிலாகிக்கும் காட்சிகளில் ஓரிடத்தில் நிலைகொள்ளாமல் நகருகிறபோது, முகத்துக்கேற்றபடி நகரும் கேமராவும் அது உருவாக்கும் அனுபவமும் தமிழ் சினிமாவுக்கு புதுசு.
’பொன்னிநதி’, ‘சோழா சோழா’ இறுதியில் வரும் பாடல் மற்றும் பின்னணி இசையில் படத்துக்கு தேவையானதை ரஹ்மான் கொடுத்திருக்கிறார். ஆனால் எந்த பாடலும் மனதில் நிற்கவில்லை. கல்கியின் எழுத்தை போன்றே திரைக்கதையும் நிதானமாக நகர்கிறது வரலாற்றுப்படங்கள், அரசியல் படங்களில் அனல் பறக்கும் வசனங்கள் இருக்கும். அது முதல் பாகத்தில் மிக மிக குறைவு.
வந்திய தேவனுக்கும் – நந்தினிக்கும் நடக்கும் முதல் சந்திப்பில்’கருவூலத்தை பார்த்து மயங்கிட வேண்டாம்’ என ஐஸ்வர்யா ராய் சொல்லும்போது, ‘வைர சுரங்கத்தையே பார்க்கிறேன்’ என மறுமொழியுதிர்க்கும் வசனம்.
தஞ்சைக்கு நீங்கள் வந்ததால் அழகாகிறது என ஐஸ்வர்யாராய் கூறும்போது அழகே இங்கிருக்கிறது என அவரை பார்த்து த்ரிஷா கூறுகிறபோது அதுவும் கைது செய்யப்பட்டு அல்லவா இருக்கிறது என்று ஐஸ்வர்யா கூறுகிறபோது சாவி உங்களிடம்தானே இருக்கிறது என பெரிய பழுவேட்டையரையரான சரத்குமாரை பார்த்துக்கொண்டு கூறுவது,
வெட்டுனவெட்டில் பூணூல் துண்டானது என ஆழ்வார்கடியான் புலம்புவது என சில வசனங்கள் கவனத்தை ஈர்க்கிறது.
பொன்னியின் செல்வன் நாவலை முழுமையாக படித்தவர்களுக்கு படம் சற்று ஏமாற்றம்தான். அதேநேரம் நாவலை படிக்காமல் படம் பார்ப்பவர்களுக்கு முழுமையான திரைப்பட அனுபவத்தை கொடுக்கவில்லை.
–இராமானுஜம்
பொன்னியின் செல்வன் எப்படி இருக்கிறது ?: ரசிகர்களிடம் கேட்ட விக்ரம்
சிறப்புக் கட்டுரை: பொன்னியின் செல்வன்- கல்வெட்டுகளும் கல்கியின் கற்பனையும்!