செந்தில் பாலாஜியை சிறையில் இருந்து ஜாமினில் விடுவிக்க உத்தரவு!

Published On:

| By Kavi

செந்தில் பாலாஜியை சிறையில் இருந்து விடுவிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி  கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 26) நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

அப்போது,  “ரூ.25,00,000 தொகையில் இரண்டு பேர் உத்தரவாத பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

செந்தில் பாலாஜி எந்த காரணத்திற்காகவும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொள்ளக்கூடாது. அப்படி தொடர்புகொண்டால் அது ஜாமீனை ரத்து செய்வதற்கான காரணமாக அமையும்.

ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளி காலை 11 மணி முதல் 12 மணிக்குள் அமலாக்கத் துறை அலுவலகத்தில் துணை இயக்குநர் முன் ஆஜராக வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை விசாரணை அதிகாரிகளுக்கு முன் ஆஜராக வேண்டும்.

செந்தில் பாலாஜி தனது பாஸ்போர்ட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராக வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் வழக்கை ஒத்திவைக்க கோரினாலோ அல்லது தடைகளை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டாலோ வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படும் என 6 நிபந்தனைகளை  உச்ச நீதிமன்றம் விதித்தது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து புழல் சிறைக்கு முன் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் மேள தாளங்களுடன் குவிந்தனர்.

இந்தநிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று நிறுத்திவைத்தது.

பிற்பகலில் செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குழப்பம் இருப்பதாக தெரிவித்தார்.

எந்த நீதிமன்றத்தில் பிணை பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை என்றும் அந்த உத்தரவாத்தை விசாரணை அதிகாரியிடம் தாக்கல் செய்யுங்கள் எனவும் நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்தார்.

இந்த விசாரணையின் போது செந்தில் பாலாஜி சிறையில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

செந்தில் பாலாஜி தரப்பில், “ஜாமீன் உத்தரவாதத்தை விசாரணை அதிகாரியிடம் எப்படி தாக்கல் செய்ய முடியும். ஜாமீன் உத்தரவாதம் தொடர்பான உத்தரவில் குழப்பம் இருப்பின் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு விளக்கம் பெறுகிறோம்” என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து அமலாக்கத் துறை வழக்கறிஞர் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். இதனால் வழக்கு விசாரணை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜரானார். அவர்,  “ஜாமீன் உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று கூறினார்.

இதையடுத்து செந்தில் பாலாஜியின் உறவினர்களான சிவபிரகாசம், தியாகராஜனின் உத்தரவாத பத்திரங்களை நீதிபதி கார்த்திகேயன் ஆய்வு செய்தார். வழக்கு குறித்து முழுமையாக தெரியுமா என்று இருவரிடமும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.   நிபந்தனைகளை கடைபிடிக்காவிட்டால் உங்களது 25 லட்சம் பிடித்தம்  செய்யப்படும் என்றும் நீதிபதி கூறினார்.

தொடர்ந்து பிணை உத்தரவாதங்களை ஏற்று செந்தில் பாலாஜியை விடுவிக்க நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் சற்று நேரத்தில் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியேவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  புழல் சிறைக்கு முன் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தோனி தக்க வைக்கப்படுவாரா? குழப்பத்தில் சி.எஸ்.கே!

தவெக முதல் மாநாடு : நிர்வாகிகளுக்கு கண்டிஷன் போட்ட புஸ்சி ஆனந்த்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share