தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் இன்று (செப்டம்பர் 26) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு அடுத்த மாதம் 27-ந் தேதி விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது.
இதனையடுத்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் புஸ்சி ஆனந்த் பேசுகையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு நேற்று இரவு தான் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மாநாடு தொடர்பாக சில நிபந்தனைகளையும் விதித்துள்ளனர்.
கட்சியின் முதல் மாநாட்டில் பெண்கள் தான் அதிகமாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மாநாடு வெற்றி மாநாடாக இருக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்முடைய இலக்கு 2026 தான், 2026ல் தவெக தலைவர் விஜய் தான் முதலமைச்சர்.
இந்த மாநாட்டில் காவல்துறைக்கு நாம் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தலைவர் விஜயின் அறிவுறுத்தலின் படி கண்ணியத்தோடும், கட்டுப்பாட்டோடும் மாநாடு நடைபெறும். அதற்கு உங்களது அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.
கட்சிக்காக உழைத்திருக்கிறேன் எனக்கு பதவி வேண்டும் என்று வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டால் எனக்கு கோபம் வரும். எதுவாக இருந்தாலும் என்னை நேரடியாக அணுக வேண்டும்.
தவெக நிர்வாகிகளுக்கு என்று தனி அனுமதிச் சீட்டு கிடையாது. யார் வேண்டுமானாலும் மாநாட்டில் பங்கேற்கலாம்.
மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து நிர்வாகிகளும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். முக்கிய நிர்வாகிகள் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி அணிந்து வர வேண்டும்.
மாநாட்டிற்கு இடம் கேட்டபோது, அங்குள்ள விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்றனர். அவர்கள் அனைவரையும் மாநாட்டில் விஜய் கெளரவிக்க உள்ளார்” என்று புஸ்சி ஆனந்த் பேசினார்.
தொடர்ந்து இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோருடன் மாநாடு தொடர்பாக பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டன.
குறிப்பாக மாநாட்டுக்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் எவ்வளவு பேரை அழைத்து வர வேண்டும், எப்படி அழைத்து வர வேண்டும்? மற்றும் மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்களை எங்கே நிறுத்துவது, பங்கேற்கும் தொண்டர்களுக்கு செய்யவேண்டிய அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் கொடுத்த சர்டிபிகேட் சர்ச்சை… செந்தில்பாலாஜிக்கு என்ன துறை?
ஓடும் காரை மறித்து தங்கம் கொள்ளை… கோவைக்கு வந்த வழியில் பட்டப்பகலில் துணிகரம்!
Comments are closed.