நீதிபதியிடம் மன்றாடிய கஸ்தூரிக்கு நீதிமன்ற காவல்!

Published On:

| By christopher

தெலுங்கர்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாக கைதான நடிகை கஸ்தூரிக்கு வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி இன்று (நவம்பர் 17) உத்தரவிட்டுள்ளது.

கடந்த நவம்பர் 3-ஆம் தேதி  பிராமணர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கஸ்தூரி, மன்னர்களின் அந்தப்புரத்து மகளிருக்கு சேவை செய்தவர்கள் தான் தெலுங்கர்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இந்தநிலையில், கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து தலைமறைவான கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்தார்.

இந்தநிலையில், ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இதுதொடர்பாக குழந்தையுடன் இருந்த நடிகை கஸ்தூரி கைது என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நேற்று நாம் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில், கஸ்தூரி இன்று சென்னை அழைத்துவரப்பட்டார். அவரிடம் சிந்தாதரிப்பேட்டை காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சென்னை எழும்பூர் நீதிமன்ற குடியிருப்பு வளாகத்தில் ஐந்தாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரகுபதி ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது ”எனக்கு மாற்றுத் திறன் குழந்தை இருக்கிறான். அவனை பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே என்னை சொந்த ஜாமீனில் விடுவிக்க வேண்டும்” என நீதிபதியிடம் மன்றாடினார்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதி ரகுபதி, கஸ்தூரிக்கு நவம்பர் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து அவரை சிறைக்கு அழைத்து செல்ல போலீஸார் வந்தபோது, வேனில் ஏறுவதற்கு முன்னதாக, ”அரசியல் அராஜகம் ஒழிக… நீதி வெல்லட்டும்” என்று கஸ்தூரி உரக்க கத்தினார். தொடர்ந்து அவரை புழல் சிறையில் போலீஸார் அவரை அடைத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தன்னுடன் இருந்த குழந்தை யார்? – மனம் திறந்த கஸ்தூரி

அரை மணி நேரம் வொர்க் அவுட் ஆகலை… ஆனால்! – ‘கங்குவா’ குறித்து ஜோதிகா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share