தன்னுடன் இருந்த குழந்தை யார்? – மனம் திறந்த கஸ்தூரி

Published On:

| By Selvam

ஹைதராபாத்தில் நேற்று (நவம்பர் 16) கஸ்தூரியை போலீசார் கைது செய்தபோது, தனது 12 வயது மகனை விட்டு பிரிந்து வர முடியாமல், சிலமணி நேரம் பாசப்போராட்டம் நடத்தியுள்ளார்.

கடந்த நவம்பர் 3-ஆம் தேதி பிராமணர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், “மன்னர்களின் அந்தப்புரத்து மகளிருக்கு சேவை செய்தவர்கள் தான் தெலுங்கர்கள்” என்று கஸ்தூரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

கஸ்தூரியின் இந்த பேச்சுக்கு பல தரப்பிலும் கண்டனங்கள் குவிந்தது. கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தெலுங்கு சம்மேளனம் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து தலைமறைவான கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்தார்.

இந்தநிலையில், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் டாக்டர் கண்ணன் ஐபிஎஸ் தலைமையில் மூன்று தனிப்படை அமைத்து கஸ்தூரியை தேடி வந்தனர்.

அதில் எழும்பூர் காவல் ஆய்வாளர் மோகன் ராஜ் தலைமையிலான தனிப்படை டீம் கஸ்தூரி தங்கியிருந்த ஹைதராபாத் வீட்டுக்கு சென்றனர்.

தங்களை சென்னை போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டதும், “எனக்கு உடல்நிலை சரியில்லை. நிறைய மாத்திரைகள் எடுத்து வருகிறேன். என்னுடைய குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும். நானே நீதிமன்றத்தில் ஆஜராகிறேன். ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க” என்று போலீசாரிடம் கெஞ்சி அழுதிருக்கிறார் கஸ்தூரி. இதுகுறித்து, குழந்தையுடன் கஸ்தூரி கைது என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நேற்று (நவம்பர் 16) நாம் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

அப்போது இன்ஸ்பெக்டர் மோகன், “யார் இந்த குழந்தை?” என்று கஸ்தூரியிடம் கேட்டிருக்கிறார்.

“இது என்னுடைய 12 வயது ஆண் மகன். கருத்து வேறுபாட்டால் எனது கணவரும் நானும் சட்டப்பூர்வமாக பிரிந்துவிட்டோம். அவர் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். என் குழந்தையை வெளியில் காட்டாமல் வளர்த்து வந்தேன். குழந்தைக்கும் உடல்நிலை சரியில்லை. நான் அவனை எப்படி பிரிந்து வருவது?” என்று மிகவும் எமோஷனலாக பேசியிருக்கிறார் கஸ்தூரி.

இதனையடுத்து கூடுதல் ஆணையர் கண்ணனைத் தொடர்புகொண்ட மோகன் ராஜ், “குழந்தையை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று காலதாமதம் பண்றாங்க சார். என்ன பண்ணலாம்” என்று ஆலோசனை கேட்டிருக்கிறார்.

“அவரது உறவினர் அல்லது தெரிந்தவர்களிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு அழைத்து வாருங்கள் அல்லது குழந்தையோடு அழைத்து வாருங்கள். சட்டப்பூர்வமாக பார்த்துக்கொள்ள வழி இருக்கிறது. நீதிமன்ற வழிகாட்டுதலின் படி நாம செயல்படலாம்” என்று இன்ஸ்பெக்டருக்கு கூடுதல் ஆணையர் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறார்.

இதை கஸ்தூரியிடம் சொன்னபோது, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்திருக்கிறார். பின்னர், “சார் கொஞ்சம் டைம் கொடுங்க” என்று கேட்டிருக்கிறார். போலீசாரும் சிறிது நேரம் டைம் கொடுத்திருக்கிறார்கள்.

அப்போது கஸ்தூரி தனது நண்பரான பாமக மாநில துணை செயலாளரும் toni & guy ஹேர்டிரெஸ்ஸிங் மற்றும் புதுச்சேரியில் கல்லூரி நடத்தி வரும் சாம்பால் மனைவியை தொடர்புகொண்டு நேரில் அழைத்தார்.

அவரிடம் தனது 12 வயது மகனை ஒப்படைத்துவிட்டு சிறையில் இருந்து வரும்வரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று, தனது இரண்டு கையால் மகனின் கன்னத்தை வருடி உச்சியில் முத்தமிட்டு கண்ணீரோடு போலீஸ் வாகனமான பொலிரோ காரில் ஏறினார் கஸ்தூரி.

ஹைதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டது பொலிரோ கார். அலுங்காமல் குலுங்காமல் சொகுசு காரில் பயணித்து வந்த கஸ்தூரி, போலீஸ் வாகனமான பொலிரோ காரில் வசதியாக காலை நீட்டி மடக்க முடியாமல் பின் இருக்கையில் அமர்ந்து இரவு நேரத்தில் பயணித்தபோது உறக்கமில்லாமல் உடல் சோர்ந்து தளர்ந்து காணப்பட்டார்.

இரவு முழுவதும் களைப்புடன் காரில் பயணித்த கஸ்தூரி இன்று காலையில் தமிழக எல்லைக்கு வந்தபோது, “சார் மாத்திரை போடணும். ஏதாவது ஒரு ஹோட்டல்ல கொஞ்சம் நிறுத்துங்க” என்று போலீசாரிடம் கேட்டிருக்கிறார்.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் பாதுகாப்பு நலன் கருதி ஒரு ஹோட்டலில் ஜீப்பை நிறுத்தினார். அப்போது கஸ்தூரி அந்த ஹோட்டலில் ஃபிரெஷ் அப் செய்துகொண்டார். பின்னர் டிபன் மற்றும் காபி சாப்பிட்டுவிட்டு மாத்திரை போட்டுக்கொண்டு மீண்டும் அதே பொலிரோ காரில் ஏறி அமர்ந்தார்.

12 மணி நேர பயணத்திற்கு பிறகு சென்னை சிந்தாதிரிப்பேட்டை மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி. காவல்நிலையத்தில் ரிமாண்ட்டுக்கு அனுப்புவதற்கான ஃபார்மாலிட்டிக்களை முடித்துவிட்டு சென்னை எழும்பூர் நீதிமன்ற குடியிருப்பு வளாகத்தில் ஐந்தாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரகுபதி ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். கஸ்தூரிக்கு நவம்பர் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி

அரை மணி நேரம் வொர்க் அவுட் ஆகலை… ஆனால்! – ‘கங்குவா’ குறித்து ஜோதிகா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share