“சூர்யாவும் நானும் அக்கா தம்பி போல” என பாஜக சிறுபான்மைப் பிரிவு தலைவர் டெய்சி தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக சிறுபான்மைப் பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் பேசிய ஆடியோ சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியோடு, முகம் சுழிக்கவும் வைத்தது.
இந்த ஆடியோ குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கக் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டது.
அதோடு, இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை திருச்சி சூர்யா கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (நவம்பர் 24) ஆடியோ விவகாரம் தொடர்பாகத் திருப்பூர் மாவட்டம், பல்லடம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் விசாரணை நடந்தது.
பாஜக மாநில துணைத் தலைவர் கனக சபாபதி, மாநிலச் செயலாளர் மலர் கொடி ஆகியோர் டெய்சி மற்றும் சூர்யா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதன்பின் டெய்சி மற்றும் சூர்யா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.
“நாங்கள் இருவரும் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். அவரை நான் தம்பி மாதிரி நினைக்கிறேன். ஆரம்பத்தில் அவரும் என்னை அக்கா என்றுதான் அழைத்தார். திரும்பவும் அக்கா தம்பியாக இருவரும் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறோம்.
பாஜகவின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு நாங்கள் கட்சிக்குள் வந்தோம். அம்மா, அக்கா என்று கூப்பிடுவதை தவிர பெண்களை வேறு மாதிரி பார்க்காத கட்சி பாஜக. அதனால் தான் ஈர்க்கப்பட்டு வந்தோம்.
ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது என்பதற்காக எதிர்க்கட்சிகள் எல்லாம் லட்டு கிடைத்தது போல் ட்ரோல் செய்து வருகின்றன. இன்று நடைபெற்ற விசாரணையின் போது ஒருவருக்கு ஒருவர் பேசி இந்த விஷயத்தை விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். இதில் யாருடைய வற்புறுத்தலும் இல்லை.
பிரதமர் மோடியின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு பாஜகவுக்கு வந்தோம். இப்படி ஒரு பிரதமரை இனி இந்தியா பார்க்குமா என தெரியவில்லை. ஜிடிபி வளர்ச்சி எல்லாம் இந்த அளவுக்கு வந்ததற்கு அவரது சித்தாந்தம் தான் காரணம்.

ஏதோ ஒரு கண்பட்ட நிகழ்வு போல் இது நடந்துவிட்டது. மீண்டும் நானும் சூர்யாவும், இணைந்து பயணிக்க முடிவெடுத்திருக்கிறோம். இந்த விஷயத்தைப் பெரிதாக்க வேண்டாம், விட்டுவிடுங்கள்” என்றார் டெய்சி.
அவரைத் தொடர்ந்து பேசிய சூர்யா சிவா, “அக்கா சொன்னது போல், இது தனிப்பட்ட இருவருக்கும் இடையேயான உரையாடல். இன்று நடைபெற்ற விசாரணையின் போது எப்படி இந்த உரையாடல் நடந்தது என எழுத்துப்பூர்வமாகவும், நேரடியாகவும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறோம்.
எங்களுக்குள் இருக்கிற பிரச்சினையை சுமுகமாக முடித்துக்கொள்கிறோம். இந்த ஆடியோவை நானோ அக்காவோ வெளியிடவில்லை. வேற வகையில் இந்த ஆடியோ வெளியில் போயிருக்கிறது. இதனை விசாரணைக் குழு கண்டுபிடிக்கட்டும்.
இந்த ஆடியோவை வெளியிட்டு கட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று அக்காவும் விசாரணைக் குழுவிடம் சொன்னார். நானும் என்னுடைய விளக்கத்தையும் கொடுத்திருக்கிறேன்.
ஒருவேளை நான் பேசியது தவறு என்று சொல்லக் கூடிய சூழ்நிலையில் என் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் மாநில தலைவரின் முடிவுக்குக் கட்டுப்படுவேன்” என்று கூறினார்.
மேலும் அவர், “இந்த பிரச்சினைக்கு முன்னதாக அக்கா – தம்பி என்ற பிரியத்தில்தான் அடிக்கடி அவர் வீட்டுக்கு வருவார். என் மனைவியும் கிறித்துவர் என்பதால் அக்காவிடம் எப்போதும் பிரியமாகவே இருப்பார்.
ஏதோ கசப்பான சூழ்நிலை வந்துவிட்டது. இதுசம்பந்தமாக இதுவரை நான் எந்த பத்திரிகையிடம் பேசவில்லை” எனக் குறிப்பிட்டார்.
பிரியா
Comments are closed.