ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை ஓபிசி அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த டெய்சி சரணை, சூர்யா சிவா ஆபாசமாக பேசிய ஆடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் சூர்யா சிவாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்தது.
இந்தநிலையில், சூர்யா சிவா உரையாடல் குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு 7நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் திருமதி டெய்சி சரண் அவர்களுக்கும்,
ஓபிசி அணியின் மாநில பொது செயலாளர் திரு.சூர்யா சிவா அவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று இன்று காலை என் கவனத்திற்கு வந்தது.

இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த 7நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான திரு.கனகசபாபதி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை ஓபிசி அணியின் மாநில பொது செயலாளர் திரு.சூர்யா சிவா அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மிகக்கடுமையான ஆபாசமான வார்த்தையில் பேசிய திருச்சி சூர்யா மீது கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்று குறைந்தபட்ச கட்டுப்பாட்டை மட்டுமே விதித்திருக்கும் அண்ணாமலை…
சூர்யாவை தட்டிக்கேட்ட காய்த்ரி ரகுராமை பழைய பகையை வைத்துக்கொண்டு ஆறு மாதங்கள் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்” என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள் சிலரே.
பெண்களை ஆபாசமாக அவதூறு செய்யும் சென்சிட்டிவான பிரச்சனையில் அண்ணாமலையின் இந்த இரட்டை அளவுகோல் பாஜகவுக்குள்ளேயே கடுமையான சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்