2017ல் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
இந்த போராட்டத்தின் விளைவாகத்தான் அதே ஆண்டு மிருக வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டத்தை சட்டப் பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றியது.
இந்திய அரசியல் அமைப்பின் சட்டப் பிரிவு 29(1)ன் படி இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சட்டப் பிரிவு தான் இந்திய குடிமக்கள் தங்களுக்கான தனித்துவமான கலாச்சாரம், மொழி ஆகியவற்றை கொண்டிருக்க அனுமதி கொடுக்கிறது.
இதன்படி தான் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் 2017-ம் ஆண்டே வழக்கு தொடர்ந்தன.
அதே ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் இடைக்கால தடை ஏதும் விதிக்க முடியாது என கூறி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதனை அடுத்து இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்த போஸ், ரிஷிகேஷ் ராய், சிடி ரவிகுமார் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதடினார். ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியதை அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எழுத்துப்பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.அப்போது, ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பாக நடத்தப்படுவதாகவும் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்றும் இந்த விளையாட்டுக்கு தடை விதித்தால் தமிழக கலாச்சாரமே அழியும் நிலைக்கு தள்ளப்படும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியது.
இதையடுத்து வழக்கை நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி இன்று வழக்கு தொடங்கியது முதலே வாதங்கள் அனல் பறந்தன.
இந்த வழக்கில் தமிழ்நாடு, கர்நாடகா, மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகள் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளன.
இன்று நடந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி மற்றும் பீட்டா உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா ஆகியோர் வாதிட்டனர்.
அப்போது ஜல்லிக்கட்டு போட்டி என்பது ஒரு மாட்டின் மீது ஏராளமான இளைஞர்கள் விழுந்து அதனை அடக்க முயல்வது என்றும் இதனால் ஏராளமான மாடுகள் காயமடைவதாகவும் பீட்டா உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பினர் வாதிட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் மிருகவதை நடைபெறுவதாகக் கூறி புகைப்பட ஆதாரங்களையும் முன்வைத்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பு இந்த புகைப்படங்கள் தவறாக வழிநடத்தக் கூடும் என ஆட்சேபம் தெரிவித்தது. மேலும், எந்தவிதமான ஆய்வும் இல்லாமல் திடீரென புகைப்படங்களை தாக்கல் செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது எனவும் கூறப்பட்டது.
இதனை கருத்தில் கொண்ட நீதிபதிகள் இந்த புகைப்படங்கள் போட்டியில் ஒட்டுமொத்த விதிமுறைகளும் மீறப்படுகின்றன என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை என பதிலடி கொடுத்தனர். மேலும் விலங்குகளுக்கு என உரிமைகள் எதுவும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினர்.
அப்போது மிருகவதை தடுப்புச் சட்டத்தை வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா படித்துக்காட்டினார். மிருகங்களை துன்புறுத்தக் கூடாது என சட்டம் இருக்கும் போது தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்ததை அவர் கேள்விக்குள்ளாக்கினார்.
அதற்கு நீதிபதிகள், நம்மை கடிக்க வரும் கொசுவை அடித்து கொன்றால் இந்த சட்டத்தின் படி நாம் தண்டிக்கப்பட வேண்டுமா அல்லது நம்மை கொசுவிடம் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டுமா? கொசுவை விடுங்கள் அடுத்து ஒரு பாம்பு கடிக்க வந்தால் என்ன செய்வீர்கள் என கேள்வி எழுப்பினர்.
அப்போது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் குறுக்கே வரும் என்பதால் பாம்பை அடிக்காமல் ஓடுவதே நல்லது என வழக்கறிஞர் லுத்ரா கூறினார்.
மேலும், நீதிபதிகள் குதிரைப் பந்தயம் யானை பந்தயத்தில் மிருகங்கள் அதை விரும்பி செய்கின்றன என நினைக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினர்.
விலங்குகள் நல அமைப்புகள் நடத்தும் குத்துச்சண்டை, வாள்சண்டை போன்ற மனிதர்கள் ஈடுபடும் சண்டையில் ஒருவருக்கொருவர் துன்பப்படுத்துகின்றனர். சமயத்தில் இறப்பு கூட நிகழ்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினர்.
அப்போது ஜல்லிக்கட்டு போட்டி குறித்த புகைப்படங்களை சித்தார் லுத்ரா காண்பிக்க அதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
தொடர்ந்து நடந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஒரு கட்டத்தில் நீதிபதிகள் வதை தடுப்புச் சட்டம் வேண்டும் என கேட்க அதற்கு வழக்கறிஞர் லுத்ரா, வழக்கறிஞர் வதை தடுப்புச் சட்டமும் வேண்டும் என சிரிப்போடு கேட்டார்.
இதனை அடுத்து இந்த வழக்கு நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அப்துல் ராஃபிக்
வில்லியம்சன் – போக்லே : ட்ரெண்டாகும் விறுவிறு விருந்து!
அன்னவாசல்