வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ் அப்பில் பாஜகவின் ஓபிசி பிரிவு பொதுச்செயலாளர் திருச்சி சூர்யாவின் அதிர வைக்கும் ஆடியோக்கள் வந்து விழுந்தன. டிஜிட்டலில் கூட ஏற்ற முடியாத வார்த்தைகளைக் கொண்ட அந்த ஆடியோவை கேட்டு முடித்துவிட்டு மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
“பாஜகவின் சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சி சரண் என்ற பெண் மருத்துவரிடம் அக்கட்சியின் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா பேசிய பேச்சு பாஜகவை மட்டுமல்ல தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது.
பற்பல வருடங்களாக தமிழ்நாட்டில் பல கட்சிகளில் பல பெண்கள் ஆரோக்கியமாக அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் பாஜகவின் ஒரு பெண் நிர்வாகியை ஒரு ஆண் நிர்வாகியே இந்த அளவு தரம் தாழ்ந்து பேசுவதை சமூக தளங்களில் பல்வேறு தரப்பினரும் கண்டித்திருக்கிறார்கள்.
ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தில் எடுத்த ஆக்சன் அந்த ஆடியோவை விட அதிக சர்ச்சையாக மாறி இருக்கிறது. மிகக் கேவலமான வார்த்தைகளால் டெய்சியை விளாசிய திருச்சி சூர்யாவை ஏழு நாட்களுக்கு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தடை விதித்துள்ளார்.
அதே நேரம் டெய்சிக்கு தனது ஆறுதலையும் ஆதரவையும் ட்விட்டர் மூலமாக தெரிவித்து திருச்சி சூர்யாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்திய காயத்ரி ரகுராமை ஆறு மாதங்களுக்கு கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார் அண்ணாமலை.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த நடவடிக்கை பாஜகவின் அனைத்து தரப்பிலும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் பாதிப்பு ஏற்படுத்தியவரை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நின்றவரை அண்ணாமலை நீக்க என்ன காரணம் என்று பாஜக வட்டாரங்களில் விசாரித்த போது வேறு சில தகவல்கள் கிடைத்தன.
டெய்சி -திருச்சி சூர்யா இடையிலான இந்த உரையாடல் சுமார் பத்து நாட்களுக்கு முன்பு நடந்தது. வரம்புகளை மீறி சூர்யா பேசியதை பதிவு செய்த டெய்சி இதை அண்ணாமலைக்கும் அனுப்பி விட்டார். அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை இருவரையும் அழைத்து தனக்கு முன்பாக உட்கார வைத்து சில மணி நேரங்கள் பஞ்சாயத்து பேசியிருக்கிறார். அப்போது அண்ணாமலை கூறிய ஒரே விஷயம், ‘எக்காரணத்தை முன்னிட்டும் இந்த பதிவு வெளியே சென்று விடக்கூடாது. அப்படி சென்றால் நமது கட்சியின் இமேஜ் கடுமையாக பாதிக்கப்படும்’ என்பதுதான்.
ஆனால் அண்ணாமலை இவ்வாறு சொல்லியும் அந்த ஆடியோ வெளியிடப்பட்டு வைரலானதால் கடுமையான கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார் அண்ணாமலை.
இந்த ஆடியோ எவ்வாறு வெளியானது என்று அண்ணாமலை விசாரித்த போது தான்… ஏற்கனவே கடந்த சில நாட்களாக ட்விட்டரில் அண்ணாமலை ஆதரவாளர்களோடு வெளிப்படையாகவே கருத்து மோதல் நடத்தி வந்த காயத்ரி ரகுராம் மூலமாக இந்த ஆடியோ வெளியே சென்றிருக்கலாம் என்ற தகவல் சிலரால் அண்ணாமலைக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
இதையடுத்து காயத்ரி ரகுராமிடம் போனில் பேசியிருக்கிறார் அண்ணாமலை. அப்போது தனக்கு இதில் எந்தவிதமான ரோலும் இல்லை என்று மறுத்திருக்கிறார் காயத்ரி. ஆனால் இந்த ஆடியோவை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனுக்கு காயத்ரி ஜெயராம் அனுப்பி வைத்திருக்கிறார். வானதி சீனிவாசனுக்கு அனுப்பியவர் மற்றவர்களுக்கும் ஏன் அனுப்பி இருக்கக் கூடாது என்று கருதியிருக்கிறார் அண்ணாமலை.
இதையடுத்து தான் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் படி நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டி காயத்ரி ரகுராமை 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டார் அண்ணாமலை. அதற்கு முன்பே திருச்சி சூர்யாவை ஏழு நாட்களுக்கு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள தடை விதித்து இருக்கிறார்.

இது ஒரு பக்கம் என்றால் இந்த ஆடியோ வெளியிடப்பட்டதில் அண்ணாமலைக்கே பங்கு இருக்கலாம் என்றும் பாஜகவின் சீனியர்கள் கிசுகிசுகிறார்கள். அவர்களிடம் பேசிய போது, ‘அண்ணாமலை பாஜக தலைவரான புதிதில் அப்போது மாநில பொதுச் செயலாளராக இருந்த கே. டி. ராகவன் கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஆளுமை மிக்கவராக இருந்தார். அந்த நேரத்தில் ஒரு பத்திரிக்கையாளர் மூலமாக கே.டி. ராகவன் தொடர்பான அந்த ஆபாச வீடியோ அண்ணாமலையின் கவனத்திற்கு வந்தது.
இந்த வீடியோ வெளியானால் கட்சிக்கு களங்கம் என்று கருதி அதை தடுத்து நிறுத்தாமல் அந்த வீடியோ வெளியிடப்படுவதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை அண்ணாமலை. அந்த வீடியோ வெளியான பிறகு கே டி. ராகவனின் அரசியல் வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிட்டது. இதன் மூலம் அண்ணாமலையின் ரூட் கிளியர் ஆனது.
இப்போது டெய்ஸி -சூர்யா ஆடியோவில் பாஜகவின் அமைப்பு பொதுச்செயலாளரும் ஆர். எஸ். எஸ். சின் மூத்த நிர்வாகியுமான கேசவ விநாயகனின் பெயர் பலத்த சர்ச்சைக்கு உட்பட்டிருக்கிறது. பாஜக அமைப்பு முறையில் அமைப்புப் பொதுச் செயலாளர் பதவி வலிமையானது. அந்த பதவியில் இருக்கும் கேசவ விநாயகன் தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலையோடு இணக்கமாக இல்லை. சென்னையை ஒட்டிய ஒரு மண்டல் தலைவரை மாற்றுவதற்கு அண்ணாமலை சிபாரிசு செய்த போது அதை தடுத்து நிறுத்தி விட்டார் கேசவ விநாயகன்.
இதுபோல பல விஷயங்களில் அண்ணாமலைக்கும் கேசவ விநாயகனுக்கும் இடையே சில முரண்பாடுகள் நிலவி வந்திருக்கின்றன. இந்தப் பின்னணியில் கேசவ விநாயகனின் கேரக்டரை அசாசினேஷன் செய்யும் வகையில் இருக்கும் இந்த ஆடியோ வெளியிடப்பட்டால் கே.டி.ராகவனை போல தனக்கு இருந்த அடுத்த தடை நீங்கும் என்று அண்ணாமலை தரப்பு கணக்கிட்டு இருந்தால்… இந்த ஆடியோ வெளியீட்டுக்கு பின்னால் அண்ணாமலையே இருந்திருக்கவும் வாய்ப்புண்டு’ என்கிறார்கள் பாஜக சீனியர்கள்.
இந்த எல்லா விதமான கோணங்களும் பாஜக மேலிட பொறுப்பாளர்களுக்கு தகவல்களாகவும் புகார்களாகவும் அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் பாஜகவின் இந்த ஆபாச அதிர்ச்சி ஆடியோ அரசியல் தொடரவும் வாய்ப்பு உள்ளது என்று கவலைப்படுகிறார்கள் பாஜக நிர்வாகிகளே” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.
உதயநிதியின் புதிய டீம்: அடுத்த ஆட்டத்துக்கான ரிகர்சல்!
இதெல்லாம் பழனிசாமிக்கு மறந்துவிட்டதா?: தங்கம் தென்னரசு கேள்வி!
Sexual assault on female cadres in TN BJP Chennai office during Muruvan days totally hushed up. Annamoolai days are numbered in BJP due to his arrogant attitudes. Not a matured politician.