நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் அனுமதியின்றி யானைகள் பயன்படுத்தியதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு‘ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் பொங்கல் கொண்டாட்டமாகத் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், சென்னை அருகில் உள்ள ஈவிபி தளத்தில் நடந்து வரும் வாரிசு படப்பிடிப்பின் போது உரிய அனுமதியின்றி 5 யானைகளை அழைத்து வந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
யானையைப் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வருவதற்கான அனுமதி கடிதம் மட்டுமே படப்பிடிப்புக் குழுவிடம் இருப்பது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
ஆனால் படப்பிடிப்பில் யானையைப் பயன்படுத்துவதற்கான அனுமதி கடிதம் தங்களிடம் இருப்பதாகக் படக்குழு கூறியுள்ளது. அந்த அனுமதி கடிதத்தை காவல்துறையினரிடம் சமர்ப்பிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், படத்தின் பூஜைக்காக மட்டுமே யானைகள் கொண்டு வரப்பட்டன. விரைவில் இதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வாரிசு படக்குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், ”ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் படப்பிடிப்புத் தளத்தில் உரிய முன் அனுமதியின்றி 5 யானைகளை பயன்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கான அனுமதி கடிதத்தை விலங்குகள் நல வாரியம் பெறவில்லை.
எனவே, இது குறித்து 7 நாட்களுக்குள் படக்குழு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில், தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பண்டிகை நாட்களில் நேரடித் தெலுங்குப் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முடிவு எடுத்திருந்தது.
அதுமட்டுமின்றி வாரிசு படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளதால், வாரிசு படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கக் கூடாது என்றும் தெரிவித்திருந்தது.
இந்த முடிவுக்குத் தமிழ் சினிமாவில் இருந்து பலரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்த நிலையில் தற்போது விலங்குகள் நல வாரியம் மூலம் வாரிசு படத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மோனிஷா
வெள்ளி விருப்ப ஓய்வு, சனி தேர்தல் ஆணையரா?: சாட்டை வீசிய உச்ச நீதிமன்றம்
அரசு கேபிள் டிவியில் காணலாம்: கால்பந்து ரசிகர்களுக்கு குட்நியூஸ்!