தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெறுகிறது, இந்த மாநாட்டில் இரண்டு லட்சம் பேரை திரட்டுவதற்கான செயல் திட்டங்களை தீட்டி வருகிறார் விஜய். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பை பாஸ் சாலையில் மாநாட்டு திடலுக்கு 85 ஏக்கர் நிலமும் வாகனங்களை நிறுத்த 90 ஏக்கர் நிலமும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
அக்டோபர் 4 ஆம் தேதி மாநாடு கால்கோள் விழா தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. அந்த விழாவில் 700 வாகனங்களில் 3,000 பேர் கூடினார்கள். குறிப்பாக மும்பை, டெல்லி போன்ற வெளி மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் பலரும் கலந்துக் கொண்டனர்.
கால்கோள் விழாவுக்கே 700 வாகனங்கள் மற்றும் 3,000 பேர் என்றால் மாநாட்டுக்கு எவ்வளவு கூட்டம் வரும் என்று காவல்துறையினர் கணக்கு போட்டு வருகின்றனர்.
மாநாடு தொடர்பாக தவெக மாநில நிர்வாகிகளிடம் நாம் பேசியபோது…
“சேலத்தில் உதயநிதி நடத்திய இளைஞரணி மாநாடு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் எடைக்கல் இளஞ்சியில் 2013-இல் விஜயகாந்த் நடத்திய மாநாடுகளை விட இரண்டு மடங்கு கூட்டத்தைக் கூட்டவேண்டும் என விஜய் தீவிரமாக ஸ்கெட்ச் போட்டு வேலை செய்து வருகிறார்.
சேலம் திமுக இளைஞர் அணி மாநாட்டில் ஒரு லட்சத்துக்கும் குறைவான கூட்டமே கூடியது. இளஞ்சியில் விஜயகாந்த் நடத்திய கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு இரண்டு லட்சம் பேரை கூட்ட வேண்டும் என்ற பணிகளில் களமிறங்கியுள்ளார் விஜய்.
தவெக நிர்வாகிகள் வொயிட் & வொயிட்டில் வர வேண்டும், மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்களின் பதிவு எண், வாகனத்தின் இன்சூரன்ஸ், ஆர்சி புக் ஜெராக்ஸ், ஓட்டுனரின் உரிமம் நகல்களை தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ட்ராபிக் ஒழுங்குபடுத்த வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் தலைமையில் டீம் போடப்பட்டுள்ளது. அவர்கள் பவுன்சர்களுக்கு உரிய அறிவுறுத்தலை வழங்க இருக்கின்றனர். மாநாட்டுக்கு போலீஸ் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள். அதனால் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திடம் இருந்து இரண்டாயிரம் செக்யூரிட்டிகள் மற்றும் பவுன்சர்களை களமிறக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
மேலும், மருத்துவ வசதிகள், குடிநீர், டாய்லெட், உணவு வசதிகள் என ஏற்பாடுகள் செய்ய பிளான் போட்டு வருகிறோம். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு சிறப்பு வழிகாட்டுதல் குழு அமைத்திருக்கிறோம்.
மாநாட்டை வெற்றி பெற வைக்க விஜய் மற்றும் கட்சியின் சீனியர்கள் பல விதமான திட்டங்களோடு செயல்பட்டு வருகிறோம்.
ஆனால் விசிக, பாமக நிர்வாகிகள் களத்தில் இறங்கி விஜய் மாநாட்டுக்கு செல்லக்கூடாது என தடைபோட்டு வருகின்றனர்
விஜய் நற்பணி மன்றத்தில் பட்டியலினத்தவர் மற்றும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள். விஜய் கட்சி ஆரம்பித்ததும் இவர்கள் தவெகவில் இணைந்தனர். இந்தநிலையில், தான் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று விஜய் கட்சியில் சேர வேண்டாம், மாநாட்டுக்கு செல்ல வேண்டாம் என்று பாமக, விசிக நிர்வாகிகள் பலரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
மாநாட்டுக்கு அனுமதி கொடுத்ததில் இழுத்தடிப்பு, விசிக, பாமகவின் தடைகள் இவை எல்லாவற்றையும் தாண்டி மாநாடு கண்டிப்பாக வெற்றி பெறும். மாநாட்டை வெற்றி பெற வைக்க ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் விஜய்க்கு பக்கபலமாக இருக்கின்றனர் ” என்கிறார்கள் தவெக நிர்வாகிகள்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’மகாராஜா ‘ நித்திலனுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு!
போதைப் பொருட்களுக்கு எதிராக நடவடிக்கை இல்லையா? – ஆளுநருக்கு ரகுபதி பதிலடி!