அரோகரா முட்ட விட நீங்க கொடுக்கிற முட்டு வேற லெவல் bro.. அமைச்சரை விளாசும் அதிமுக

By Pandeeswari Gurusamy

|

Published on 17 Nov 2026, 1:06 PM

அரோகரா சர்ச்சையில் தமிழக முதல்வரும் நாங்களும் புகழ் பாடல்களை விரும்புவது இல்லை என்ற அமைச்சரின் விளக்கம் குறித்து அதிமுக ஐடிவிங் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளது.

திருச்செந்தூரில் நடந்த சூரசம்ஹார விழாவில் ‘முதல்வருக்கு அரோகரா’ என்று பாடிய விவகாரத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், “இது குறித்துப் பாடகர்கள் விளக்கம் அளித்துள்ளனர். நானும் அவர்களிடம் பேசியபோது அதற்குரிய விளக்கங்களை அளித்தார்கள்; இனிவரும் காலங்களில் கவனமாகச் செயல்படுவோம் என்றனர். தமிழக முதல்வரும் நாங்களும் இது போன்ற புகழ் பாடல்களை விரும்புவது இல்லை என்று பாடகர்களிடம் தெரிவித்துள்ளோம். இனிவரும் காலங்களில் இதைக் கவனமாகக் கையாள்வோம் என்று அவர்களும் விளக்கம் அளித்துள்ளனர்.

ADVERTISEMENT

அதேசமயம், இந்த விஷயத்தை வேண்டுமென்றே பெரிதாக்குவது போல் முன்னாள் அமைச்சர் பேசியுள்ளார். குறிப்பாகப் புஷ்பவனம் குப்புசாமி, வேல்முருகன், குழந்தை தியா உள்ளிட்ட பாடகர்களை ஒட்டுமொத்தமாகச் சேர்த்து வைத்து, ‘தெருக்கூத்தாடிகளை வைத்து ஆன்மீக விழாவில் பாட வைக்கிறார்கள்’ என்று முன்னாள் அமைச்சர் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. பாடகர்களையும் கலைஞர்களையும் எப்படி மதிக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். திமுகவினரின் மனநிலையே ஒரு பண்ணையார் மனநிலை; அதில் உட்கார்ந்து கொண்டு பாடகர்களை ‘தெருக்கூத்தாடிகள்’ என்று பேசுவது எந்த வகையில் நியாயமாகும்? எத்தனை நாட்டுப்புறக் கலைஞர்கள் இருக்கிறார்கள்! அனைவரையும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்து ‘தெருக்கூத்தாடிகளை வைத்து நீங்கள் பாட வைக்கிறீர்கள்’ என்றால் இது எந்த மாதிரியான வார்த்தை? இப்படியா ஒரு வார்த்தையைப் பிரயோகம் செய்வது?

திமுக இதையேதான் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கும் செய்தது. எங்கள் தலைவர் அரசியல் கட்சியைத் தொடங்கும் போதும் இதே வார்த்தையைத்தான் பயன்படுத்தினார்கள்; அதற்கான விளக்கத்தையும் நமது முதலமைச்சர் சொல்லியுள்ளார். இப்போது பாடகர்கள் மீதும் அதே விமர்சனத்தை வைக்கிறார்கள். ஒரு பண்ணையார் மனநிலையில் இருந்து கொண்டு ஆன்மீகக் கலைஞர்கள், பாடகர்கள் எல்லோரையும் ‘தெருக்கூத்தாடிகள்’ என்று சொல்லி விமர்சிக்கிறீர்கள் என்றால், நீங்கள் என்ன மாதிரியான பண்ணையார் மனநிலை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

ADVERTISEMENT

மேலும், “நாங்கள் விதிகளை மீறிவிட்டோம் என்கிறார்களே, எந்த விதியின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஸ்ரீரங்கத்தில் 50 கோடி ரூபாய் நிலத்தைச் சொந்தக் கட்சி அலுவலகம் நடத்தப் பெயர் மாற்றம் செய்ய அனுமதித்தார்கள்? கோயிலின் நிலத்தைச் சொந்த திமுக கட்சிக்காகப் பெயர் மாற்றி, கட்சி அலுவலகம் நடந்து கொண்டிருந்தது. நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அதைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுத்து இன்று கைது செய்துள்ளோம். எந்த அடிப்படையில் கோயில் நிலத்தைத் திருட விட்டு வேடிக்கை பார்த்தீர்கள்? கோயில் நிலத்தை எல்லாம் திருடி திமுகவினர் அபகரிக்கும் போது இல்லாத அக்கறை இப்போது என்ன திடீரென வந்தது? கோயில் திருடர்களான திமுகவிற்குத் திடீரென என்ன அக்கறை வந்தது? என்ன வார்த்தை பயன்படுத்துகிறோம், என்ன பேசுகிறோம் என்பதைத் தெரிந்து பேச வேண்டும். ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை நிச்சயம் இருக்கும்.

கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் எப்படி கோயில் நிலங்களை திமுகவினர் அபகரித்துள்ளனர், கோயில் நிலத்தை லீசுக்கு எடுத்து உள்வாடகைக்கு விட்டுச் சம்பாதித்து இருக்கின்றனர் என்பதை ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வருகிறோம். அதற்கு எடுத்துக்காட்டுதான் ஸ்ரீரங்கத்தில் உள்ள 50 கோடி ரூபாய் நில விவகாரம். இப்படி எல்லாம் கோயில் சொத்துக்களையும் நிலங்களையும் திருடிவிட்டு, இப்போது விதிகள் மீதெல்லாம் அக்கறை இருப்பது போல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் விளக்கம் கேட்டுவிட்டோம்; அதற்கான விளக்கத்தை பாடகர்கள் கொடுத்துள்ளார்கள். இனிவரும் காலங்களில் கவனமாகச் செயல்படுவோம் என்று சொல்லியுள்ளனர்” என்றார்.

ADVERTISEMENT

“ஒட்டுமொத்த தமிழகத்திலும் முருக பக்தர்கள் எல்லோரும் மனது புண்பட்டுள்ளது; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அதைத்தான் சொல்கிறோம். விளக்கம் கேட்டுள்ளோம், இனிவரும் காலங்களில் கவனமாகச் செயல்படுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் நாம் ஒவ்வொரு முறையும் பாடகர்களை மாற்றித்தான் அனுமதிக்கிறோம். இது போல் இனி நடந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

மேலும், “முதல்வரைப் புகழ்வதற்காக முருகப்பெருமானை இழிவுபடுத்துவது சரியாக இருக்குமா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அதை நாங்கள் தெளிவாகச் சொல்லிவிட்டோம். அவர்களும் ‘நாங்கள் ஒப்பிட்டுப் பேசவில்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.

“என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “முதலில் என்ன தவறு செய்தார்கள், எதனால் அப்படிச் செய்தார்கள் என்று விளக்கம் கேட்டுத்தானே முடிவு செய்ய வேண்டும்? அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. விளக்கம் கேட்டால்தான் என்ன செய்வது என்று முடிவு செய்ய முடியும்” என்றார்.

“ஒரு அமைச்சராக உங்களது பார்வையில் இது சரியா, தவறா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “இது போன்ற புகழ் பாடுதல்களை நாங்களும் முதலமைச்சரும் விரும்புவது கிடையாது; இதைச் செய்யாதீர்கள் என்று தெளிவாகச் சொல்லியுள்ளோம்” என்று மீண்டும் தெரிவித்த அமைச்சர் சரியா தவறா என்ற கேள்விக்கு தெளிவாக பதில் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

அமைச்சரின் இந்த விளக்கம் குறித்து அதிமுக ஐடி விங் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளது. அதில், ““நாங்க செய்யாதீங்க ன்னு சொல்லுற மாதிரி சொல்லுவோம், அவங்க கேட்காத மாதிரி செய்வாங்க”- அப்படி தானே முறுக்கு அமைச்சரே?

பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டா பதில் சொல்ல முடியாம ஏன் பதறுறீங்க
அமைச்சர் ரமேஷ்?

உங்க தலைவர் என்னன்னா, செய்தியாளர்களுக்கு பயந்து டெல்லி நிகழ்ச்சிக்கு பின்வாசல் வழியா போறாரு…

What is this bro?
கடைசி வரை சரியா தப்பா அப்டின்ற கேள்விக்கு மட்டும் பதிலே வரலையே!

அரோகரா முட்ட விட நீங்க கொடுக்கிற முட்டு வேற லெவல் bro..!!

இருங்க…. அரோகரா கேட்குதோ? அரோகரா மட்டும் இல்ல… கோவிந்தாவும் சேர்த்து மக்கள் கொடுக்க தான் போறாங்க..!!!” என தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel