அ. குமரேசன்
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்து, ரோம் நகரில் இறையியல் பயின்று, சமயப் பணியாற்றத் தொடங்கி பின்னர் உலகெங்கும் பல்கலைக்கழகங்களின் மேடைகளில் தமிழின் சிறப்பை முழங்கியவர் தவத்திரு தனிநாயகம் அடிகள் (1913–1980). சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கேட்ட தகவல், அவரைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.
1960-களில் தனிநாயகம் அடிகள் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து அங்கிருந்த அறிஞர்கள் செய்துகொண்டிருந்த தமிழ் ஆராய்ச்சிகளை ஒருங்கிணைத்தார். அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஐரோப்பிய அறிஞர்கள் சிலர் இவ்வாறு கேட்டனர்: “செம்மொழித் தொன்மை கொண்ட செவ்விலக்கியங்கள் தமிழில் என்ன இருக்கின்றன? அவை ஏன் உலக அளவில் பெரிதும் அறியப்படவில்லை?”
சற்றும் தாமதிக்காமல் அடிகளார் அளித்த பதில்: “ஹோமர் எழுதிய காப்பியங்களும் பிளேட்டோ நிகழ்த்திய தத்துவ உரைகளும் ஐரோப்பியர்களுக்கு எப்படிப்பட்ட செவ்வியல் படைப்புகளோ, அதேபோல தமிழர்களுக்கு சங்க இலக்கியங்களும் திருக்குறளும் செவ்வியல் செல்வங்கள். அவை பிறநாட்டவரின் கண்களில் படாதவரை தமிழ் ஒரு வட்டார மொழி; ஆனால், அவை உலக அறிஞர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால் அது உலகப் பொதுமொழி எனப் புலப்படும்!”

வாய்ச் சொல்லாக இல்லாமல், பின்னாளில் செயல்கள் மூலமாகவும் இதை நிறுவிய தனிநாயகம் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நெடுநாள் விருப்பம், தற்போது யூடியூப் தளத்திற்கு வந்துள்ள ‘தனிநாயகன்’ ஆவணப்படத்தால் நிறைவேறியது. உலக அளவில் தமிழின் பெருமையைப் பரப்பவும், பன்னாட்டுத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளுக்கு வித்திடவும் அரும்பாடுபட்டவரின் வாழ்வும் பணிகளும் அக்கறையோடும் ஆதாரங்களோடும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
ஒருங்கிணைத்த மன்றம்
1964-ஆம் ஆண்டு புதுதில்லியில் உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாடு கூடியிருந்தது. அந்த மாநாட்டின் ஒரு கொடைதான் ‘அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம்’. தமிழறிஞர்கள் உள்ளிட்ட திராவிடவியல் ஆய்வாளர்களை ஒருங்கிணைத்த அந்த மன்றத்தைத் தோற்றுவிப்பதில் அடிகளார் தலையாய பங்காற்றினார்.
தமிழாய்வுகளை உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்லவும், பன்னாட்டுத் தமிழறிஞர்கள் கூடி விவாதிக்கவும் வசதியாக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘உலகத் தமிழ் மாநாடு’ நடத்தப்பட வேண்டும் என்ற திட்டமிடலைச் செய்து அதனைச் செயல் வடிவமாக்கினார்.
முதல் முன்னெடுப்பு

மலேசியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தில், அந்நாட்டு அரசின் முழு ஒத்துழைப்போடு 1966–இல் கோலாலம்பூர் நகரில் மாபெரும் விழாவாக அவர் முன்னின்று நடத்தியதுதான் முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு. உலகின் பல்வேறு நாடுகளையும் இனங்களையும் சேர்ந்த ஆய்வாளர்களை ஒரே தளத்தில் இணைத்த வரலாற்றில் முதல் பெரிய முன்னெடுப்பாக அமைந்தது அந்த மாநாடு. தமிழுக்கே உரிய பன்முகப் பரிமாணங்கள் தொடர்பாக, உணர்ச்சிகர முழக்கங்களைக் கடந்த நுட்பமான ஆராய்ச்சிகளும், விவாதங்களும், புதிய கண்டுபிடிப்புகளும் முகிழ்ப்பதற்கு அந்த மாநாடு தொடக்கப்புள்ளியை வரைந்தது.
பல நாடுகளைச் சேர்ந்த பிற மொழி அறிஞர்களையும் தமிழ் ஆய்வுகளில் ஈடுபடுத்தவும், அவர்களின் கருத்தாக்கங்களை உலகிற்கு வழங்கவும் வழிவகுத்த ஓர் ஆங்கில ஏடு ‘தமிழ் கல்ச்சர்’. தன் சிந்தனையின் வழியே அந்தக் காலாண்டு இதழைத் தொடங்கியவர் அடிகளார்தான்.
தமிழக எல்லைகளைத் தாண்டி, தமிழை ஒரு பன்னாட்டுச் செம்மொழியாக ஏற்கச் செய்யவும், உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிக்குரிய மொழியாக உலகப் பல்கலைக்கழகங்கள் கவனம் கொள்ளவும் பாதையமைத்த பெருமையிலும் அடிகளாருக்குத் தலையாய பங்கிருந்தது.
அறிவுலகச் சொத்துகள்
தமிழுக்குரிய உலகளாவிய இடத்தை நிலைப்படுத்துவதில் இப்படிப்பட்ட முயற்சிகள் மட்டுமல்லாது, தனது எழுத்தாக்கங்களாலும் முன்னணியில் அணிவகுத்தோருடன் தோள் சேர்ந்து நின்றார் தனிநாயகம் அடிகள். இவர் எழுதிய இலக்கியக் கட்டுரைகளின் முதல் தொகுப்பாக வந்தது ‘தமிழ்த்தூது’ (1952). தமிழ் இலக்கியத்தின் சிறப்புகளை எடுத்துச் சொல்லும் முக்கியமான ஆக்கம் அது. அவருடைய உலகப் பயண அனுபவங்களோடு உலகளாவிய பார்வையின் பதிவாகவும் 1966-இல் வந்தது ‘ஒன்றே உலகம்’. திருக்குறளும் ஒப்பியல் ஆய்வுகளும் குறித்து அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகளின் தொகுப்பு ‘திருவள்ளுவர்’ (1967).
ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோருக்குச் சான்றாதார நூல்கள் இன்றியமையாதவை. அவ்வகையில் வெளிநாட்டவர்களும் தமிழ் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உதவிடும் அருமையானதோர் உசாத்துணை நூலாக அவர் ஆங்கிலத்தில் தொகுத்தளித்தது ‘எ ரெஃபரன்ஸ் கய்ட் டு தமிழ் ஸ்டடீஸ்’ (தமிழ் ஆய்வுகளுக்கான ஓர் உசாத்துணை வழிகாட்டி). இவற்றுடன் தமிழ்ப் பண்பாடும் நாகரிகமும், தமிழ் மனித நேயம், வெளிநாடுகளில் தமிழ் ஆய்வுகள் என அடிகள் எழுதிய ஒவ்வொரு நூலும் அறிவுலகச் சொத்துகள்.
தமிழும் ஆங்கிலமும் தவிர ஸ்பானியம், போர்த்துக்கீசியம், பிரெஞ்சு, ரோமன் உள்ளிட்ட பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார் அவர். அந்தப் பன்மொழி அறிவைப் பயன்படுத்தி, வெளிநாட்டு நூலகங்களில், அக்கறையாளர்களின் வருகைக்காகக் காத்துக்கிடந்த தமிழியல் குறிப்புகளை மீட்டுத் தந்தார். இத்தகைய அவருடைய அர்ப்பணிப்பு மிகு உழைப்பு குறித்தெல்லாம் நமக்கு ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையில் சான்றுகளோடும் சாட்சிகளோடும் தெரிவிக்கிறது இந்த ஆவணப்படம்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன மேனாள் இயக்குநர் ஆர். பாலகிருஷ்ணன், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் ம. திருமலை, இப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இரா. காமராசு, தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரி முதல்வர் அமுதன் அடிகள், ரோம் நாட்டு இறையியல் கல்லூரிப் பேராசிரியர் டி. அருள் ஜான் போஸ்கோ உள்ளிட்ட ஆளுமைகள் தங்களின் நேர்காணல்களில் வெளிப்படுத்தியுள்ள அவதானிப்புகள் அடிகளாரின் தடங்களைக் காட்டுகின்றன. உலகத் தமிழ்த் தூதுவராக வலம் வந்தவர் பற்றிய இந்தக் காணொளித் தொகுப்பை தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பு தயாரித்துள்ளது.
தனது தொடர்ச்சியான தேடல்களின் கனியாக ஆவணப்படத்திற்கான கருத்தாக்கத்தை வழங்கியிருக்கிறார் அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க. சுபாஷினி. உணர்வார்ந்த குரலால் நம்மை உடன் பயணிக்க இட்டுச் சென்றிருக்கிறார் திரைக்கலைஞர் நாசர். நேரில் காணும் அனுபவத்தைத் தரும் நீ. இளந்தென்றல் ஒளிப்பதிவு, உணர்வூட்டும் ஜோஹன் சிவனேஷ் பின்னணி இசை, அந்த லயத்தோடு இணையும் ஏ.எஸ். லட்சுமிநாராயணன் ஒலிக்கலவை, காட்சிகளை நேர்த்தியாகக் கோர்த்துள்ள பன்னீர்செல்வம் படத்தொகுப்பு ஆகியவற்றின் கூட்டில் ஆவணப்படம் அழகிய கலைப்படைப்பாக உருவாகியிருக்கிறது.

வாழ்க்கைப் பக்கங்களில் மறைந்துவிடக்கூடிய ஒரு காலக்கட்டத்தின் உழைப்பையும் மகத்தான பங்களிப்பையும், வரலாற்றுப் பக்கங்களில் மறக்கவொண்ணாப் பதிவாக்கியிருக்கிறார் எழுதி இயக்கியுள்ள பிருந்தா சாரதி.
தனிநாயகம் அடிகளைப் பற்றி மட்டுமல்லாமல் தமிழின் உலகப் பயணம் பற்றியும் அறிந்திட, ஆராய்ந்திட முனைவோருக்குத் திறந்துவைக்கப்பட்டுள்ள தவிர்க்கவியலாத அறிவுப் பெட்டகம் இது.
கட்டுரையாளர் குறிப்பு
அ.குமரேசன் – இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஏழு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும்மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர். இவரைத் தொடர்புகொள்ள: theekathirasak@gmail.com










