செப்டம்பர் 17 கூட்ட வீடியோ கேட்ட நோயல் டாடா… கைவிரித்த டாடா சன்ஸ்!

By Minnambalam Desk

|

Published on 14 Nov 2026, 6:29 AM

டாடா குழுமத்தின் உள்ளே நிர்வாகம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் இன்னும் தணியவில்லை. டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா, செப்டம்பர் 17 அன்று நடந்த டாடா சன்ஸ் இயக்குநர் குழுக் கூட்டத்தின் ஆடியோ, வீடியோ பதிவுகளைக் கேட்டிருந்தார். அவற்றைத் தர முடியாது என்று டாடா சன்ஸ் நிறுவனம் தெளிவாகப் பதில் அனுப்பிவிட்டது. என். சந்திரசேகரனை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு டாடா சன்ஸ் தலைவராக நியமித்த கூட்டம் அதுதான்.

வீடியோ பதிவு தர வேண்டிய கட்டாயம் இல்லையாம்

ADVERTISEMENT

நோயல் டாடா, செப்டம்பர் 18, 30, அக்டோபர் 8, 26 ஆகிய தேதிகளில் கூட்டப் பதிவுகளைக் கேட்டு டாடா சன்ஸுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு நவம்பர் 9 அன்று டாடா சன்ஸ் அனுப்பிய பதில் கடிதத்தில், நேரடியாக நடக்கும் இயக்குநர் குழுக் கூட்டங்களை வீடியோ பதிவு செய்வதோ, அந்தப் பதிவுகளைப் பாதுகாத்து வைப்பதோ கட்டாயம் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது. கூட்டப் பதிவுகளை நிறுவனச் செயலாளர் கூட்டக் குறிப்புகளைத் தயாரிக்க மட்டுமே பயன்படுத்துகிறார் என்றும் நிறுவனம் விளக்கியுள்ளது.

ADVERTISEMENT

சந்திரசேகரன் மறுநியமனத்தில் எதிர்ப்பு

செப்டம்பர் 17 கூட்டத்தில் சந்திரசேகரனை மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்குத் தலைவராக்கும் தீர்மானம் வைக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட இயக்குநர்களில் நோயல் டாடா மட்டுமே எதிர்த்ததாக நிறுவனம் சொல்கிறது. பெரும்பான்மை ஆதரவோடு தீர்மானம் நிறைவேறியதாகவும் அது தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

டிவிஎஸ் மோட்டார் பற்றிய கேள்வி

சந்திரசேகரனின் குடும்பத்தோடு தொடர்புடைய ஹன்னோ ஒன் வேர்ஹவுசிங் நிறுவனத்துக்கும், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகள் குறித்தும் கேள்விகள் எழுந்தன.

இதற்குப் பதிலளித்த டாடா சன்ஸ், தாங்களோ தங்கள் குழும நிறுவனங்களோ ஹன்னோ ஒன் நிறுவனத்தோடு எந்தப் பரிவர்த்தனையும் செய்யவில்லை என்று கூறியுள்ளது. டிவிஎஸ் மோட்டாருடனும் டாடா சன்ஸுக்கு நேரடி வர்த்தகப் பரிவர்த்தனை எதுவும் இல்லை என்று அது விளக்கியுள்ளது.

இன்னும் தொடரும் சிக்கல்

இந்த விவகாரம், டாடா குழுமத்தின் நிர்வாக நடைமுறைகள், தலைமைப் பொறுப்பு, இயக்குநர்களுக்குத் தகவல் பகிர்வது ஆகியவை குறித்த விவாதத்தை மீண்டும் முன்னுக்குக் கொண்டுவந்துள்ளது. அக்டோபர் 26 அன்று நோயல் டாடா அனுப்பிய அறிவிப்புக்கும் சட்ட விதிகள், நிறுவன நடைமுறைகளின்படி பதில் தரப்படும் என்று டாடா சன்ஸ் தெரிவித்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel