தமிழக அரசின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.22 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மோசடி செய்யப்பட்ட பணம் 24 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றன. இந்த நிதி கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள தனியார் வங்கிக் கிளையில் பராமரிக்கப்பட்டு வந்த அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து பல கோடி ரூபாய் மோசடியாக மாற்றப்பட்டிருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தின் கணக்கில் இருந்து ரூ.14 கோடி, நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தின் கணக்கில் இருந்து ரூ.3.10 கோடி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் கணக்கில் இருந்து ரூ.5 கோடி என மொத்தம் ரூ.22 கோடிக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது.
கடந்த அக்டோபர் 12 முதல் 30-ந் தேதி வரை 46 பணப் பரிமாற்றங்கள் மூலம் இந்தத் தொகை மாற்றப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
மோசடி நடந்தது எப்படி?
அரசு நிதியைப் பரிமாற்றம் செய்யப் பயன்படுத்தப்படும் இணையதளத்தில் மர்ம நபர்கள் ஊடுருவி, அதிகாரிகளின் பயனர் பெயர்கள் மற்றும் பாஸ்வேர்டுகளை திருடி இந்த மோசடியை நடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
அதேபோல, வங்கியின் இணையதளப் பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடு இருந்ததா, அரசு அதிகாரிகள் அல்லது வங்கி ஊழியர்கள் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த மோசடியின் பின்னணியில் நைஜீரியாவைச் சேர்ந்த சைபர் குற்றக் கும்பல் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது.
7 பேர் கைது
இந்த நிலையில், மோசடி செய்யப்பட்ட பணம் 24 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்தனர். இந்தப் பணப் பரிமாற்றங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் லோகநாதன், அண்ணாதுரை, செல்லப்பாண்டியன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பணம் எவ்வாறு மாற்றப்பட்டது, இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், 24 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்ட பணம் பின்னர் வேறு கணக்குகளுக்கு அனுப்பப்பட்டதா, பணத்தை எடுத்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.










