”மதுரை டங்ஸ்டன் திட்டம் வருவதற்கு காரணமே ஸ்டாலின் தான்” : எடப்பாடி குற்றச்சாட்டு!

Published On:

| By christopher

Stalin is the reason behind the tungsten project: Edappadi alleges!

மதுரையில் டங்ஸ்டன் திட்டம் வருவதற்கு காரணமான ஸ்டாலினே, தற்போது எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி நாடகமாடுகிறார் என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நெல்லை, குமரி, கும்பகோணம், மதுரை, திருப்பரங்குன்றத்தில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது.

சேலத்தில் கடந்த 26ஆம்தேதி களஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சேலத்தில் இன்று (நவம்பர் 29) கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், ”மதுரை மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் அப்பகுதி கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று அச்சப்படுகின்றனர்.

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஏற்கனவே இசைவு தெரிவித்த திமுக, தற்போது நாடகம் ஆடுவதற்காக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். டங்ஸ்டன் திட்டம் வருவதற்கு காரணமான ஸ்டாலினே தற்போது எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி நாடகமாடுகிறார்.

திருப்பூரில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினந்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் தொல்லை என தொடர்ந்து நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி வருகின்றேன் ஆனால் அதை தடுக்க அரசு தவறிவிட்டது. தமிழகத்தின் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது.

வணிகர்கள் பொதுமக்கள் நலன் கருதி அதிமுக ஆட்சி காலத்தில் சொத்து வரி உயர்த்தவில்லை. ஆட்சிக்கு வரும் முன்பாக தேர்தல் வாக்குறுதியில் சொத்து வரி உயர்த்தப்படாது என்று கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொண்டு ஆட்சிக்கு வந்த பிறகு அதனை மறந்து போனார்கள். இதில் எங்கள் மீது பழிபோட்டு திமுக தப்பிக்க பார்க்கிறது. ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களுக்கு சொத்து வரி உயர்வு பெரும் பாரமாக அமைந்துள்ளதால் மத்திய மாநில அரசுகள் இதனை கருத்தில் கொண்டு வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்.

மீத்தேன் ஈத்தேன் போன்ற விவசாயத்தை நாசமாக்கும் திட்டங்களுக்கும் வழி வகுத்தது திமுக தான் ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் வேளாண்மை மாநில பட்டியலில் இருந்த காரணத்தினால் டெல்டா மாவட்டங்களை சுற்றி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயத்தை காப்பாற்றினோம். நாகை மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழையால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.

அப்போது, ’அதிமுக கூட்டங்களில் சலசலப்பு ஏற்படுகிறது ஏன்? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “திமுகவை போன்று அதிமுக அடிமை கட்சி அல்ல. ஆங்காங்கே நடக்கும் கூட்டத்தில் ஆலோசனைகள் பரிமாறப்படுகிறது. ஆரோக்கியமாக ஆக்கப்பூர்வமாக கட்சியை வழிநடத்த கூட்டங்கள் நடைபெறுகிறது” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

திருப்பூர் கொடூரம் : கொலையாளிகள் எடுத்துச் சென்ற முக்கிய பொருள்!

டங்ஸ்டன் சுரங்கம் : அமைச்சர் வாக்குறுதியால் போராட்டம் வாபஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share