டங்ஸ்டன் சுரங்கம் மதுரையில் அமைய அனுமதிக்கமாட்டோம் என அமைச்சர் மூர்த்தி இன்று (நவம்பர் 29) உறுதி அளித்ததை தொடர்ந்து மேலூர் பகுதி கிராம மக்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி கிராமத்தில் 7 மலைகளை உள்ளடக்கிய பகுதி பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லூயிர் தளமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலையை வெட்டி டங்ஸ்டன் எடுக்க வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மேலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50 கிராமங்களை சேர்ந்து 500க்கும் மேற்பட்டோர் அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள வெள்ளிமலையாண்டி சுவாமி திருக்கோவில் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டனர்.
அவர்கள், ’டங்ஸ்டன் எடுக்க மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். முல்லைப் பெரியாறு ஊருக்கு போக பாசன விவசாய பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், தமிழர் பாரம்பரியத்தை போற்றும் விதமாக, பல்வேறு வரலாற்றுச் சின்னங்கள் உள்ள மதுரை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட தமிழ் பண்பாட்டு தொல்லியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும்’ என வலியுறுத்தி வருகின்றனர்.
சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளலூர், கோட்டநத்தம்பட்டி, கிடாரிப்பட்டி, அ.வல்லாளப்பட்டி, நரசிங்கம்பட்டி, அரிட்டாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவித்து மேலூரில் உள்ள திரையரங்கம், மருந்தகம், உணவகம் உள்ளிட்ட கடைகளும் அடைக்கப்பட்டது.
இதற்கிடையே மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட, டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில் “சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது. இதுபோன்ற சுரங்கத் தொழிலை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் அரிட்டாப்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, டங்ஸ்டன் தொழிற்சாலை மதுரைக்கு வராது என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், ”மத்திய அரசு அனுமதி அளித்த டங்ஸ்டன் சுரங்கம் அரிட்டாப்பட்டியில் அமைப்பதற்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளிக்க கூடாது என்று எனது முன்னிலையில்கடந்த 27ஆம் தேதி நடந்த கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்த தீர்மான அறிக்கையை தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பியது.
அதன் அடிப்படையில் மத்திய அரசின் ஒப்புதலை திரும்ப பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் அனைத்துக்கட்சி சார்பாக மதுரையில் டங்ஸ்டன் தொழிற்சாலை அமையக்கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும்” என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கேட்டுக்கொண்டதை ஏற்று அரிட்டாப்பட்டியில் உண்ணாவிரத போராட்டமும், கடையடைப்பு போராட்டமும் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆர்டர்லி முறை : தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஃபெங்கலா அல்லது ஃபெஞ்சலா? : புயல்களுக்கு யார் பெயரிடுகிறார்கள்?