திருப்பூர் கொலை வழக்கில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தில் பண்ணை வீட்டில் வசித்து வந்த தெய்வசிகாமணி,அலமாத்தாள் மற்றும் அவர்களது மகன் செந்தில் குமார் இன்று(நவம்பர் 29) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டனர்.
அவர்கள் வீட்டில் இருந்து 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த படுகொலை நடந்த இடத்தில் மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி, டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது உயிரிழந்த செந்தில் குமாரின் மனைவி, ஆணையர் லட்சுமியிடம், “என் புள்ளைக்கு 7 வயசு…பையனுக்கு 12 வயசு… இப்பதான் ஸ்கூலுக்கு போறாங்க… நான் என்ன பண்ணுவேன் மேடம். சொல்லுங்க…
தூங்கிட்டு இருந்தவங்கள அப்படி வெட்டியிருக்காங்க மேடம்… கொல செஞ்சவங்கல இமிடியட்டா பிடிக்கணும். தண்டனை வாங்கிக் கொடுக்கணும்… ஜாமின்ல விட்டிங்கனா நான் சும்மா விடமாட்டேன்” என்று ஆத்திரத்துடன் கத்தி அழுதார்.
அவரிடம், ‘உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று ஆணையர் லட்சுமி நம்பிக்கை கொடுத்தார்.
தொடர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் உள்ளூர்வாசிகளா, மேற்கு மண்டலத்தில் ஆதாய கொலைகள் நடப்பதால், இந்த கொலையை செய்தது வெளியூர்வாசிகளா, அல்லது வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களா என அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை முதலில் பார்த்த சவரத் தொழிலாளி வலக்கூரான் கூறுகையில், “8 நாளைக்கு ஒருமுறை சவரம் செய்ய வருவேன். அதன்படி இன்று காலை 6 மணிக்கு வந்தேன். ஆத்தா… ஆத்தா என்று கத்தினேன்… எப்போதும் கூப்பிட்டால் அவர் வெளியில் வருவார். ஆனால் இன்று வரவில்லை.
கொஞ்ச தூரம் போய் பார்த்த போது பெரியவரு கீழே விழுந்து கிடந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்ததெல்லாம் உதறிபோட்டு கிடந்தன. ஆத்தாவும், அவரது மகனும் ரத்தத்தில் உறைந்து கிடந்தனர்.
அவர்கள் அருகில் போகவில்லை. உடனடியாக வெளியேவந்துவிட்டேன். போலீசாரும் என்னிடம் விசாரித்தனர். இதையேதான் சொன்னேன்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களிலும் விசாரித்து வரும் போலீசார் தெய்வசிகாமணி தோட்டத்தில் முன்னதாக வேலை செய்த பாலமுருகனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
அதோடு கொலையான செந்தில்குமாரின் செல்போன்களை கொலையாளிகள் எடுத்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த போன் தற்போது சுவிட்ச் ஆப்பில் உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி, பிரியா
டங்ஸ்டன் சுரங்கம் : அமைச்சர் வாக்குறுதியால் போராட்டம் வாபஸ்!
ஃபெங்கலா அல்லது ஃபெஞ்சலா? : புயல்களுக்கு யார் பெயரிடுகிறார்கள்?