இலங்கை அதிபர் தேர்தல் : நள்ளிரவு முதல் முடிவுகள்!

Published On:

| By Kavi

இலங்கையில் ஒன்பதாவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக போட்டியிட்ட மகேந்திர ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார்.

பின்னர் 2022ல் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக வெடித்த போராட்டத்தால் ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார்.

அவரது பதவிகாலம் முடிவடையும் நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (செப்டம்பர் 21) நடைபெற்றது.

இதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க சுயேச்சையாக போட்டியிட்டார். ஐக்கிய மக்கள் சக்தி முன்னணி சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தேசிய மக்கள் சக்தி முன்னணியின் சார்பாக அனுர குமார திசாநாயக் ஆகியோர் என  மும்முனை போட்டி நிலவுகிறது.

இவர்களோடு சேர்த்து மொத்தம் 38 பேர் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 1.71 கோடி பேர் தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 1000 கோடி ரூபாய் செலவில் இந்த தேர்தல் நடத்தப்பட்டது.

இதில், கண்டி, கம்பன்தோட்டா- 78%, களுத்துறை, குருணாகல் அனுராதபுரம், கேகாலையில் -75%, காலி, மாத்தளையில் -74%, பதுளையில்-73%, வவுனியாவில் 72%, மன்னாரில் 72%, திரிகோணமலை, மட்டக்களப்பில் 69%, முல்லைத்தீவில் 68% சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்தநிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளை பார்ப்பதற்காக பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று இலங்கை பாதுகாப்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது வரை முன்னிலை நிலவரம் வெளியாகாத நிலையில் நள்ளிரவு முதல் முடிவுகள் வெளியிடப்படும் என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ரத்நாயக்கா தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி!

தாம்பரம் – கடற்கரை ரயில்கள் ரத்து…மாற்று ஏற்பாடு என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share