குழந்தைகள் தினத்தை கேக்கோடு கொண்டாட வேண்டுமா?

By நா.மணி

|

Published on 14 Nov 2026, 10:30 AM

நா.மணி

ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14, ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பள்ளிகளில் இந்நாள் வழக்கமான உற்சாகத்துடனும் கொண்டாட்டங்களுடனும் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தைகள் தினம் ஆண்டுக்கு ஆண்டு கூடுதல் முக்கியத்துவம் பெற்று வருகிறது. குழந்தைகள் தினத்தன்று குழந்தைகளுக்காகப் பேசுகிறோம். அவர்களுக்குப் பரிசுகள் வழங்குகிறோம். விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடத்துகிறோம். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், குழந்தைகளுக்கு உண்மையில் என்ன தேவை? அவர்களுடைய விருப்பங்கள் என்ன? அவர்களுடைய மகிழ்ச்சிக்கு நாம் என்ன செய்கிறோம்? அவர்களுடைய குழந்தைப் பருவத்தை எவ்வளவு தூரம் புரிந்துகொண்டிருக்கிறோம்?

ADVERTISEMENT

குழந்தைகள் தினத்தில் நினைவில் கொள்ள வேண்டிய பணிகள்

குழந்தைகளுக்கான இலக்கியம், குழந்தைகளின் உளவியல், அவர்களுடைய கனவுகள், ஏக்கங்கள், ஆசைகள், சமூகப் பொருளாதாரச் சூழல் எனப் பலவற்றைப் பற்றியும் குழந்தைகள் தினத்தில் ஆழமாகச் சிந்திக்கலாம். ஆனால், அத்தகைய விவாதங்கள் மிகக் குறைவாகவே நடைபெறுகின்றன. பல நேரங்களில் குழந்தைகள் தினம் என்பது ஒரு கொண்டாட்ட நாளாக மட்டுமே கடந்து செல்கிறது.

2026 குழந்தைகள் தினம்

ADVERTISEMENT

2026ஆம் ஆண்டின் குழந்தைகள் தினம் எனக்குள் ஒரு புதிய சிந்தனையையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள, முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு வெற்றிக் கழக அரசு, இந்த ஆண்டு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்குக் கேக் வழங்கிக் கொண்டாடியிருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு சாதாரண நிகழ்வாகத் தோன்றலாம். குழந்தைகளுக்குக் கேக் கொடுப்பதில் என்ன பெரிய சிறப்பு இருக்கிறது என்றும் கேட்கலாம். ஆனால், அந்த ஒரு துண்டு கேக்குக்குப் பின்னால் எத்தனை குழந்தைகளின் நிறைவேறாத ஆசைகள் இருக்கின்றன என்பதைச் சற்றே ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், இந்தக் கொண்டாட்டத்தின் சமூகப் பொருள் நமக்குப் புரியத் தொடங்கும்.

‘பாவனை’களுக்குள் புதைந்திருக்கும் வறுமை

கடந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனின் ‘பாவனைகள்’ என்ற சிறுகதை இப்போது நினைவுக்கு வருகிறது. ஒரு காலத்தில் கிராமங்களுக்குள் மாலை நேரங்களில் தின்பண்டங்கள் விற்கும் தள்ளுவண்டிகள் வருவதுண்டு. எங்கள் கிராமத்திலும் எங்கள் குழந்தைப் பருவத்தில் அப்படியான வண்டிகளைப் பார்த்திருக்கிறோம். வண்டிக்குள் கண்ணாடிக் கூண்டு. அதற்குள் பலவிதமான இனிப்பு, கார வகைகள். இரவு நேரங்களில் அந்தக் கூண்டுக்குள் எரியும் விளக்கு. வண்டி ஊருக்குள் நுழையும்போது ஒலிக்கும் மணி. அந்த மணியோசை கேட்டதும் குழந்தைகளிடம் ஏற்படும் உற்சாகத்திற்கு அளவே இருக்காது. எங்கிருந்தாலும் ஓடிவந்து அந்த வண்டியைச் சூழ்ந்துகொள்வார்கள். வண்டியின் பின்னால் ஒரு குழந்தைகள் கூட்டமே ஓடிக்கொண்டிருக்கும். ஆனால், அந்தக் குழந்தைகள் பலரிடம் காசு இருக்காது. தங்களுக்குப் பிடித்த தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிடும் வசதி பெரும்பாலான குழந்தைகளுக்கு இருக்காது .

ADVERTISEMENT

கண்ணாடிக் கூண்டுக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தின்பண்டங்களை ஆசையோடு பார்த்துக்கொண்டே செல்வார்கள் குழந்தைகள். தங்களுக்குப் பிடித்தமான ஒரு தின்பண்டத்தைத் தேர்ந்தெடுத்து, அதை எடுத்து வாயில் வைத்து ருசித்துச் சாப்பிடுவதைப் போலக் கையால் பாவனை செய்வார்கள். அந்தப் பாவனையில் எவ்வளவு ஏக்கம்! எவ்வளவு ஆசை! வாங்கிச் சாப்பிட முடியாத ஒரு தின்பண்டத்தை, சாப்பிடுவதைப் போலப் பாவனை செய்து தங்களுடைய ஆசையைத் தாங்களே நிறைவேற்றிக்கொள்ளும் அந்தக் குழந்தைகளின் மனநிலை? அந்தக் காட்சியின் பின்னால் இருந்த வறுமையின் ஆழம் குழந்தைகளுக்கு புரிந்திருக்காது.

ஆனால், பின்னாளில் தமிழ்ச்செல்வனின் சிறுகதையை வாசித்த பிறகுதான் அந்தக் காட்சியின் சமூகப் பொருளைப் புரிந்துகொள்ள முடிந்தது. வலியை வேதனையை உணர முடிந்தது.

அந்தக் கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்த தின்பண்டங்கள் வெறும் உணவுப் பொருள்கள் அல்ல. அவற்றை வாங்க முடியாத குழந்தைகளின் ஏக்கங்களின் குறியீடுகள். வறுமையைப் பற்றி நேரடியாகப் பேசாமலேயே, ஒரு குழந்தையின் சிறிய பாவனைக்குள் கொடிய வறுமையையும் பொருளாதார ஏற்றத்தாழ்வையும் பசியையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்திவிடுகிறார் தமிழ்ச்செல்வன். அன்று‌ ஒன்றும் தெரியவில்லை. இப்போது மனம் கனக்கிறது.எவ்வளவோ தின்பண்டங்கள் உற்பத்தியாகின்றன. எத்தனையோ வகையான உணவுப் பொருள்கள் சந்தையில் குவிகின்றன. ஆனால், அவற்றை வாங்கி அனுபவிக்கும் வாய்ப்பு எல்லாக் குழந்தைகளுக்கும் சமமாகக் கிடைப்பதில்லை.

இந்த ஆண்டு குழந்தைகள் தினம் எப்படி இருந்தது?

இந்த ஆண்டின் குழந்தைகள் தின கொண்டாட்டம் எத்தகைய மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்பதை அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. நண்பர்களின் உதவியுடன் வெவ்வேறு வகுப்புகளில் படிக்கும் மாணவர்களிடம் உரையாடினோம்.

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் அவர்களுடைய அனுபவங்களையும் கருத்துகளையும் கேட்டறிந்தோம். கிடைத்த பதில்கள் வெறும் மகிழ்ச்சியின் வெளிப்பாடுகளாக மட்டும் இல்லை. அவை நமது சமூகத்தின் பொருளாதார நிலைமையைப் புரிந்துகொள்வதற்கான சிறிய சாளரங்களாகவும் இருந்தன.

பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள், அதாவது சுமார் 17 வயதுடைய வளரிளம் பருவத்தினர். அடிக்கடி கேக் சாப்பிடுவீர்களா என்று கேட்டோம். அவர்கள் அளித்த பதில்,‌பொதுவாக ‘இல்லை’ என்பதுதான். 25 மாணவர்கள் கொண்ட அந்த வகுப்பில், அடிக்கடி கேக் சாப்பிடும் வாய்ப்புப் பெற்றவர்கள் வெறும் ஆறு பேர்தான். பொதுவாகப் பெற்றோர்கள் வாங்கிக் கொடுக்கும் தின்பண்டங்கள் என்றால் பிஸ்கட், பப்ஸ், அதிகபட்சமாக ஐஸ்கிரீம் போன்றவையாக இருக்கின்றன. கேக் என்பது அடிக்கடி கிடைக்கும் உணவுப் பொருளாக அவர்களுடைய குடும்பங்களில் இல்லை. ‘கேக் வாங்கித் தாருங்கள்’ என்று நீங்கள் கேட்டும் பெற்றோர்கள் வாங்கித் தராமல் இருந்திருக்கிறார்களா என்று கேட்டோம். ஆம் என்றார்கள்.

ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் 53 மாணவர்களிடம் உரையாடினோம். இதேபோன்ற அனுபவங்களே வெளிப்பட்டன. கேக் வாங்கித் தர இயலாத பெற்றோர்களின் குடும்பச் சூழலைச் சில குழந்தைகள் பகிர்ந்துகொண்டனர். ஏழாம் வகுப்பில் 39 மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களிடம் கேட்டபோது, 27 குழந்தைகள் இதற்கு முன்பு கேக் சாப்பிட்டதே இல்லை என்பது தெரியவந்தது. இது நடுத்தர வர்க்கத்திற்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் உண்மை. ‌ பன்னிரண்டு வயதை எட்டியிருந்த அந்தக் குழந்தைகளில் பெரும்பாலானோர் முதல்முறையாகத்தான் கேக்கின் சுவையை அறிந்து கொண்டிருக்கிறார்கள். ஒன்பதாம் வகுப்பில் 53 மாணவர்களில் 17 பேர் முதல் முறையாகக் கேக் சாப்பிட்டிருக்கிறார்கள். இந்தத் தகவல்களைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியவில்லை.

உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. நுகர்வுக் கலாச்சாரம் பெருகிவிட்டது. நகரங்களிலும் கிராமங்களிலும் விதவிதமான உணவகங்களும் பேக்கரிகளும் பெருகிவிட்டன. எல்லோருடைய கைகளிலும் பணம் புரள்கிறது என்ற தோற்றமும் உருவாகியிருக்கிறது. ஆனால், ஒரு பள்ளி வகுப்பறையில் பன்னிரண்டு வயதுக் குழந்தைகளில் 27 பேர் இதுவரை கேக் சாப்பிட்டதில்லை என்ற உண்மை நம் நெஞ்சை சுடுகிறது . இது கேக் பற்றிய செய்தி மட்டுமல்ல. குழந்தைகளின் குடும்பப் பொருளாதார நிலைமையைப் பற்றிய செய்தி.

ஒரு துண்டு கேக் தந்த மகிழ்ச்சி

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு வழங்கிய கேக்கைச் சாப்பிட்ட அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்டோம்.
குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சி. பதில்களில் உற்சாகம்.’ரொம்பச் சந்தோஷமாக இருந்தது.’
‘சூப்பராக இருந்தது.’ ‘இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கேக் கொடுத்திருந்தாலும் நன்றாக இருந்திருக்கும்!’ ‘கேக் பெட்டியில் இருக்கும் சைசில் ஒரு ரோல் போல இருக்கும் என்று நினைத்தோம்’ என்றார்கள். எல்லா குழந்தைகளுக்கும் சாக்லேட் கேக் மிகவும் பிடித்தமானதாக இல்லை. அதிலும் ஐந்தாம் வகுப்பு அதற்கு கீழே படிக்கும் மாணவர்களில் சிலருக்கு சாக்லேட் கிரீம் கேக் கொஞ்சம் பிடிக்கவில்லை என்றார்கள்.
‌
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களிலும் இதுபோன்ற கேக் இனிப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற ஆசையையும் தெரிவித்தார்கள். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களிடம், ‘அரசாங்கம் பள்ளிக் குழந்தைகளுக்குக் கேக் வாங்கிக் கொடுப்பது சரியா? இதற்காக அரசாங்கம் செலவு செய்ய வேண்டுமா?’ என்று கேட்டோம்.

அவர்கள் அளித்த பதில்… ‘நல்லதுதானே! எங்களுக்குச் சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து கொடுக்கலாம்!’
அரசாங்கத்தின் செலவு குறித்து அவர்களிடம் கவலை இல்லை. தங்களுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள். அதைவிட முக்கியமாக, இனி பள்ளிக்கு வரப்போகும் அடுத்தடுத்த தலைமுறைக் குழந்தைகளும் இதே மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும். எனவே, இந்தக் கொண்டாட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றார்கள்.
அந்தக் கோரிக்கையில் குழந்தைகளின் சமூகப் பொறுப்பு இருந்தது.

பிறந்தநாளில்கூட எட்டாத ஒரு கனவு

மாணவர்களுடன் உரையாடியபோது மேலும் சில தகவல்கள் கிடைத்தன. ஏழாம் வகுப்பில் படிக்கும் 39 மாணவர்களில் வெறும் ஐந்து பேரால் மட்டுமே தங்களுடைய பிறந்த நாளைக் கேக் வெட்டி கொண்டாட முடிகிறது.ஒன்பதாம் வகுப்பில் 53 மாணவர்களில் ஒன்பது பேருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பத்தாம் வகுப்பில் 47 மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் எட்டு பேரால் மட்டுமே கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாட முடிகிறது.இதர குழந்தைகளுக்குத் தங்களுடைய பிறந்த நாளில் கேக் வெட்டுவது என்பது இன்னும் நிறைவேறாத ஆசையாக நீடிக்கிறது. நாம் பொதுவாகக் கேக் வெட்டும் பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஒரு சாதாரணமான குடும்ப நிகழ்வாகப் பார்க்கிறோம். ஆனால், வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அது கூட எளிதில் கிடைக்காத ஒன்றாக இருக்கிறது.

அவர்களுக்குக் கேக் என்பது ஒரு தின்பண்டம் மட்டுமல்ல. தங்களுடைய பிறந்த நாளில் கிடைக்க வேண்டும் என்று விரும்பும் ஓர் அனுபவம். மற்ற குழந்தைகள் அனுபவிப்பதைத் தாங்களும் அனுபவிக்க வேண்டும் என்ற இயல்பான ஆசை.இந்த ஆசையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை இந்தக் குழந்தைகள் தினம் ஏற்படுத்தியிருக்கிறது.

கூட்டாக உண்ணும் மகிழ்ச்சிக்கு ஈடில்லை

இந்தக் கொண்டாட்டத்தில் என்னை மிகவும் கவர்ந்தது, குழந்தைகள் கேக் சாப்பிட்ட விதம்தான்.
ஒவ்வொரு குழந்தையும் தனித்தனியாகத் தங்களுக்குக் கிடைத்த கேக்கைச் சாப்பிடுவதைக் காட்டிலும், நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து, பகிர்ந்துகொண்டு சாப்பிடுவதில் அவர்களுக்கு தனி மகிழ்ச்சி இருந்தது. அவர்களுடைய முகங்களில் தெரிந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அந்த முகங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலத் தோன்றியது.
குழந்தைகள் ஒன்றாகச் சாப்பிடுவது நட்பு, சமத்துவம், தோழமை, பகிர்ந்துண்ணுதல், கூட்டாக மகிழ்தல் ஆகியவற்றை இயல்பாகக் கற்றுக்கொடுக்கும் ஒரு சமூகப் பாடம். ஒரு வகுப்பறையில் எல்லாக் குழந்தைகளும் ஒன்றாக அமர்ந்து ஒரே உணவைப் பகிர்ந்துகொள்ளும்போது, அவர்களுக்கிடையில் இருக்கும் வேறுபாடுகளை மறந்து அமர்ந்து உள்ளனர்

கொண்டாட்டம் ஒரு நாளோடு நின்றுவிடக் கூடாது

ச. தமிழ்ச்செல்வன் எழுதிய ‘பாவனைகள்’ சிறுகதையில் வரும் குழந்தைகளைப் போன்ற குழந்தைகள் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தங்களுக்குப் பிடித்தமான தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிட முடியாமல், அவற்றை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். தங்களுடைய ஆசைகளைச் சொல்லாமல் மனதிற்குள் புதைத்துக்கொள்ளும் குழந்தைகள் இருக்கிறார்கள்.அவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றுவதற்கும், அவர்களுக்குச் சமமான மகிழ்ச்சியை வழங்குவதற்கும் அரசு முன்னெடுக்கும் சிறிய முயற்சிகள்கூடப் பெரிய சமூகப் பொருளைக் கொண்டிருக்கின்றன.

அரசு வழங்கிய இந்த ஒரு துண்டு கேக், பல குழந்தைகளுக்கு முதல் அனுபவமாக இருந்திருக்கிறது. சிலருக்கு அது நீண்டகாலமாக நிறைவேறாமல் இருந்த ஆசையை நிறைவேற்றியிருக்கிறது. இன்னும் சிலருக்கு நண்பர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஓர் இனிய நினைவாக மாறியிருக்கிறது.

இத்தகைய மகிழ்ச்சியான அனுபவங்கள் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும்.
குழந்தைகள் விரும்பும் உணவுகளைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பைத் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களிலும் ஏற்படுத்தலாம். பள்ளிகளில் அவ்வப்போது இத்தகைய கூட்டுக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யலாம். அவை ஆடம்பரமான நிகழ்ச்சிகளாக இருக்க வேண்டியதில்லை. தமிழ்ச்செல்வனின் ‘பாவனைகள்’ சிறுகதையில் கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்த தின்பண்டங்களைப் பார்த்தபடி, அவற்றைச் சாப்பிடுவதைப் போலப் பாவனை செய்த குழந்தைகளின் நினைவுகள் இன்றும் நம்மைத் துரத்துகின்றன. அந்தப் பாவனைகளுக்குப் பின்னால் இருந்த ஏக்கங்கள் அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கும் தொடர்ந்துவிடக் கூடாது.

எல்லாக் குழந்தைகளுக்கும் தங்களுக்குப் பிடித்தமான உணவை விரும்பியபோது சாப்பிடும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். தங்களுடைய பிறந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் சூழல் உருவாக வேண்டும். மற்ற குழந்தைகள் அனுபவிக்கும் மகிழ்ச்சிகள் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கத்தோடு எந்தக் குழந்தையும் வாழ வேண்டிய நிலை இருக்கக் கூடாது.குழந்தைகளின் முகத்தில் மலரும் மகிழ்ச்சிதான் ஒரு சமூகத்தின் உண்மையான முன்னேற்றத்திற்கான அடையாளம்.

கேக் தீர்ந்துபோயிருக்கலாம். ஆனால், அந்தக் குழந்தைகளின் முகங்களில் மலர்ந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும். இனி எந்தக் குழந்தையும் ஒரு தின்பண்டத்தைச் சாப்பிடுவதைப் போலப் பாவனை செய்து தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலை வர‌ வேண்டும்.

கட்டுரையாளர்:

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

நா.மணி

நா.மணி, பேராசிரியர், மேனாள் தலைவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel