விஜய், மாணிக்கம் தாகூர் மீது காங். செல்வப்பெருந்தகை சரமாரி தாக்கு!

By Mathi

|

Published on 14 Nov 2026, 2:15 PM

Selvaperunthagai Slams Vijay, Manickam Tagore

முதல்வர் விஜய் ஆட்சியில் பெண் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லையா எனக் கேள்வி எழுப்பிய தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்த பிரச்சனையில் விஜய் அரசு மௌனம் காக்காமல் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், விஜய்யின் 6 மாத ஆட்சியில் சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக இல்லை என்றும், திரைப்படத்தில் பேசிய வசனங்களை நிஜ வாழ்க்கையில் செயல்படுத்த முடியாது என்பதற்கு இந்த ஆட்சியே சாட்சி என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் இன்று (நவ.14) கூறியதாவது: இன்று பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 138-ஆவது பிறந்தநாளில் அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தி, புகழாரம் செலுத்துவதில் பெருமைப்படுகிறோம். நாடு சுதந்திரம் அடையும்போது ஒரு குண்டூசி தயாரிப்பதற்குக்கூட வாய்ப்பில்லாத நிலையை பிரிட்டிஷ்காரர்கள் நம்மிடம் கொடுத்தார்கள். ஆனால், ஜவஹர்லால் நேரு அவர்கள்தான் மிகப்பெரிய தேசமான இந்தியாவைக் கட்டமைத்து, நவீன இந்தியாவை உருவாக்கினார்.

ADVERTISEMENT

பஞ்சசீலக் கொள்கையாகட்டும், அணிசேரா நாடுகள் இயக்கமாகட்டும், பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி ஆகட்டும், நவரத்னா என்று இன்று பாஜகவால் சொல்லப்படுகின்ற மிகப்பெரிய தொழிற்சாலைகள், லாபம் ஈட்டும் தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தார். அப்படி மிகப்பெரிய சாதனை படைத்து நவீன இந்தியாவை உருவாக்கிய ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு இன்று நாம் இந்த நாட்டின் குடிமகனாகப் புகழாரம் சூட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த தேசத்தைத் தலைநிமிர வைத்த தலைவர் ஜவஹர்லால் நேரு அவர்கள். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

இதனைத் தொடர்ந்து செல்வப்பெருந்தகையிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அவரது பதில்களும்:

ADVERTISEMENT

விஜய்யின் 6 மாத ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது?

கேள்வி: தவெக அரசு வந்து 6 மாதங்கள் ஆகியிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு பிரச்சினை எப்படி இருக்கிறது சார்? தலைவராக இல்லாமல் சாமானியராகச் சொல்லுங்கள்.

பதில்: எங்களைவிட உங்களுக்குத்தான் பத்திரிகையாளர்களுக்குத் தெரியும். எப்படி இருக்கிறது? நீங்கள்தான் சொல்ல வேண்டும். சாமானியராகச் சொல்ல வேண்டும் என்றால், சட்டம் ஒழுங்கு இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும். திருப்தி அடையும் வகையில் இல்லை. திரைப்படத்தில் அவர் என்னென்ன வசனங்கள் சொன்னாரோ, முதலமைச்சர் அதை நிஜ வாழ்க்கையில் செயல்படுத்த முடியாது என்பதற்குப் பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. திரைப்படம் வேறு. பொது வாழ்க்கை என்பது வேறு.

ADVERTISEMENT

திரைப்படத்தில் சொன்னதை எல்லாம், செய்ததை எல்லாம் நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாது என்பதற்கு இந்த 6 மாத ஆட்சி ஒரு சாட்சி. ஆகவே, இன்னும் சட்டம் ஒழுங்கைப் பலப்படுத்த வேண்டும்.

செஞ்சியில் காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த தீபாவளியன்று நடந்த மிகப்பெரிய துயரமான சம்பவங்கள், இதையெல்லாம் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணிக்கம் தாகூர் மீது தாக்கு

கேள்வி: காங்கிரஸ் தலைவர்களை “சனியன் பிடிச்சவங்க” என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியிருக்கிறாரே?

பதில்: அப்படியென்றால் அப்போது 2009-இல் எங்களுடைய தியாகத் திருவிளக்காக, இந்த தேசத்தின் தியாகத் திருவிளக்காக இருக்கின்ற அன்னை சோனியா காந்தி தலைவராக இருந்தார். தலைவர் ராகுல் காந்தி இளைஞர் அணியைப் பார்த்துக்கொண்டிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் யாரை அந்த வார்த்தையைச் சொல்கிறார் என்பதை அவர் சொல்ல வேண்டும். பொத்தாம் பொதுவாக அப்படி ஒரு தலைவராக இருந்துகொண்டு சொல்லக்கூடாது. வருத்தம்தான்.

நேற்றுகூட என்னிடம் நிறைய பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டாம். தவிர்த்திருக்க வேண்டும்.
அப்படியென்றால் அப்போது இங்கே பொறுப்பில் இருந்தவர்கள் யார்? அகில இந்தியத் தலைவராக இருந்தது யார்? எதை வேண்டுமானாலும் பத்திரிகைக்கு முன்னால் பேசுவதா? எல்லாம் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் கட்டுப்பாட்டோடு பேசுவதுதான் நல்லது என்று நினைக்கிறேன்.

பெண் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லையா?

கேள்வி: தவெக எம்.எல்.ஏ.க்கள் மீது பல குற்றச்சாட்டுகள் வருகின்றன. தேர்தல் சமயத்தில் எல்லாத் தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர் என்று கூறப்பட்டது. இப்போது எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றச்சாட்டு வருகிறது இல்லையா?

பதில்: இரண்டு விஷயம்தான். மக்களுக்குப் பிரச்சினை என்றால் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் போய் மனு கொடுப்பார்கள். மாவட்ட ஆட்சித் தலைவருக்கே பிரச்சினை என்றால் அவர்கள் யாரிடம் போய் மனு கொடுக்க முடியும்?

அதைத்தான் நான் 2 நாட்களுக்கு முன்னால் சொன்னேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் அரசும் ஒரு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். இதில் என்ன நடந்தது? என்பதை மக்களுக்குச் சொல்ல வேண்டும். இப்போது மக்கள் எல்லாம் என்னவொரு அச்சத்தில் இருக்கிறார்கள்? மாவட்ட ஆட்சித் தலைவருக்கே ஒரு பாதுகாப்பு இல்லையா? என்ன நடந்தது என்று சொல்ல வேண்டும். தெளிவுபடுத்த வேண்டும். யார் தவறு செய்தார்கள்? எங்கே தவறு நேர்ந்திருக்கிறது? அது சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் தப்பு என்றால் தப்புதான்.

நம்முடைய தேசத்தில் ஒரு பெண்மணியாக, நம்முடைய மாநிலத்தில் வந்து பணியாற்றுபவர். அவருடைய கணவர் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர். எனக்கு இரண்டு பேரும் நன்கு அறிமுகமானவர்கள். பல கூட்டங்களில், என்னுடைய கூட்டத்திலேயே கலந்துகொண்டிருக்கிறார்கள். நான் பொதுக்கணக்குக் குழுத் தலைவராக இருக்கும்போது அறிமுகமானவர்கள். அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் கண்ணியமான பெண்மணி. அவருடைய கணவரும் ரொம்பக் கண்ணியமானவர். ஆகவே, இதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

மேகதாது அணையை அனுமதிக்கக் கூடாது

கேள்வி: மேகதாது அணை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் கூறியிருக்கிறாரே?

பதில்: கர்நாடகா அணையைப் பொறுத்தவரை, மேகதாது அணையைப் பொறுத்தவரை, உச்சநீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. தமிழ்நாட்டுடைய அனுமதி இல்லாமல் கட்டக்கூடாது என்று. அதை அனுமதிக்கக்கூடாது. நாம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இந்தப் பிரச்சினையைக் கொண்டு சேர்க்க வேண்டும். ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு வந்த பிறகு, மீண்டும் மீண்டும் கர்நாடகாவுடைய முதலமைச்சர் கட்டுவோம், கட்டுவோம் என்றால் எப்படிக் கட்ட முடியும்? தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் கட்டக்கூடாது. கட்ட முடியாது. இதுதான் அந்தத் தீர்ப்புடைய சாராம்சம்.

கேள்வி: தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செயல்படுகிறோம், கடிதம் எழுதுகிறோம், நடவடிக்கை எடுப்போம் என்று சொல்கிறார்கள். துறை அமைச்சரிடமிருந்துகூட முறையான பதில் வருவதில்லை என்ற விமர்சனம் இருக்கிறதே?

பதில்: அதுதான் சொல்கிறேன். ஏற்கெனவே கடந்த கால முதலமைச்சர்கள் எல்லாம் இதைக் கட்டிக்காத்து, ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்று நமக்குச் சாதகமாக இருக்கிறது. இதை ஒருபோதும் மீறுவதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. இதில் கண்ணும் கருத்துமாக மாண்புமிகு முதலமைச்சரும் அந்தத் துறை அமைச்சரும் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து.

மாணிக்கம் தாகூருக்கு சரமாரி கேள்விகள்

கேள்வி: ஆபாச மெசேஜ் அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ.வை மாணிக்கம் தாகூர், “பாவம்” என சொல்லி இருக்கிறாரே?

பதில்: தெரியாமல் ‘பாவம்’ என்று சொல்லிவிட்டார். விட்டுவிடுங்கள். அதையும் அரசியலாக்குகிறார்கள். அப்படியென்றால் எப்ஸ்டீனைப் பாவம் என்று சொல்ல முடியுமா? ஜெம் வீரமணியைப் பாவம் என்று சொல்ல முடியுமா? யாரைப் பாவம் என்று சொல்ல முடியும்? தவறு செய்தால் தவறுதான். என்னுடைய கவலை எல்லாம் இதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதுதான். என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்தி ஒரு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். அதை ஏன் மௌனம் காக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

இப்போது விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு அவர்கள் இது நடந்தது என்று சொன்னதாக கீர்த்திகா சீனிவாசன் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுதியிருக்கிறார். அந்த அம்மையார் கீர்த்திகா சீனிவாசன் எழுதியிருக்கிறார் என்றால், அதில் உண்மை இருந்தால், இதில் உண்மை இருக்கிறது என்று அரசு விளக்க வேண்டும். இதை எவ்வளவு நாளும் மூடி மறைக்க முடியும்? தெளிவுபடுத்த வேண்டும். தவறு என்றால் தவறு, சரி என்றால் சரி என்று சொல்ல வேண்டும். இதுவரைக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் எந்த மறுப்பும் சொல்லவில்லை. இதையெல்லாம் தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கையில்தான் இருக்கிறது. இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel