’சவால் விடும் காட்சி சிறப்பாக வர சரத்பாபுவே காரணம்’: ரஜினி உருக்கம்!

Published On:

| By Monisha

நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்துமாறு எனக்கு பலமுறை அன்புடன் அறிவுறுத்தியவர் மறைந்த நடிகர் சரத்பாபு என்று ரஜினிகாந்த் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று (மே 22) பிற்பகல் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த செய்தி திரைத்துறையினருக்கு பெரிய அதிர்ச்சி அளித்த நிலையில் அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே அவரது உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சரத்பாபுவின் நண்பரும், நடிகருமான ரஜினிகாந்த் காலை 10.30 மணியளவில் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

sarathbabu is my friend before an actor rajinikanth press meet

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நடிகனாவதற்கு முன்பே சரத்பாபுவை நல்ல நண்பனாக எனக்குத் தெரியும். அருமையான நண்பர், நல்ல மனிதர், எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பார். அவர் கோபமாக இருந்து நான் பார்த்ததே கிடையாது.

முள்ளும் மலரும், முத்து, அண்ணாமலை, வேலைக்காரன் என்று அவருடன் நான் சேர்ந்து நடித்த படங்கள் எல்லாமே மிகப் பெரிய ஹிட். என் மேல் அவருக்கு ரொம்பவும் அன்பு பிரியம்.

நான் சிகரெட் பிடிப்பதைப் பார்த்து வருத்தப்படுவார். ”சிகரெட்டை நிறுத்து. உடம்பை கெடுத்துக்க வேண்டாம். ரொம்ப நாள் வாழணும்” என்று சொல்வார்.

நான் சிகரெட் பிடிப்பதை பார்த்தால், அதை என்னிடம் இருந்து வாங்கி தரையில் போட்டு அணைத்து விடுவார். அதனாலேயே நான் அவருக்கு தெரியாமல் தான் சிகரெட் பிடிப்பேன்.

அண்ணாமலை படத்தில் நான் சரத்பாபுவின் வீட்டிற்கு சென்று பெரிய வசனத்தில் சவால் விடும் காட்சியை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அது 10-ல் இருந்து 15 டேக் சென்றது. ஆனாலும் அந்த எமோஷன் சரியாக வரவில்லை. சரத்பாபு முன்னாடி தான் இந்த வசனத்தை பேசணும். அப்போ அவர் ‘ரஜினி ரிலாக்ஸ்’ என்று சிகரெட் கொண்டு வர சொன்னார். அந்த சிகரெட் பிடித்த பிறகு தான் டேக் சரியாக வந்தது.

இது அவருடைய அன்பிற்காக நான் சொல்கிறேன். அப்படி என் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள சொன்ன அவர் இப்போது இல்லாமல் இருப்பது ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும்” என்று பேசினார்.

மோனிஷா

பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்: ஆர்.ஆர்.ஆர் படக்குழு அதிர்ச்சி!

சிங்கப்பூர், ஜப்பானுக்கு 9 நாட்கள் பயணம் ஏன்?: முதல்வர் விளக்கம்!

மீண்டும் 1,000 ரூபாய் நோட்டுகளா? ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share