சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கேண்டீன் பலகாரங்களில் எலி புகுந்து விளையாடியதை கண்டு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையின் மிக முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றான ஸ்டான்லி அரசு மருத்துவமனை வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு தரப்படும் தரமான சிகிச்சையினால் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இருந்து மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் மருத்துவமனை வளாகத்தில் அமைந்திருக்கும் தனியார் கேண்டீனில் பலகாரங்களை எலி சாப்பிட்டு செல்லும் வீடியோ பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. வீடியோவில் பலகாரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் கண்ணாடி பெட்டிக்குள் புகுந்த எலி அங்குள்ள வடை, பஜ்ஜி அயிட்டங்களை தின்று விட்டு செல்கிறது.
இதைக்கண்ட மக்கள் எலி சாப்பிட்ட பலகாரங்களை விற்பனை செய்கிறீர்களா? என கேள்வி எழுப்பி கேண்டீன் நடத்துபவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இவை விற்பனைக்கு அல்ல என பதிலளித்து பலகாரங்கள் அனைத்தும் ஒரு பையில் போட்டு எடுத்து செல்லப்பட்டன.
இந்த விவகாரம் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரான பாலாஜியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அந்த கேண்டீனை மூடும்படி பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா









