கல்குவாரி விபத்து: உயிரிழந்தவர்களுக்கு ரூ. 15 லட்சம்!

politics

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களுக்குத் தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

நெல்லை அருகே அடைமிதிப்பான் குளம் கல்குவாரியில் கடந்த மே 14ஆம் தேதி பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 300 அடி பாறை குவியலுக்குள் 6 தொழிலாளர்கள் சிக்கினர். இதில் தற்போது வரை 4 பேர் மீட்கப்பட்டனர். இவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள ராஜேந்திரன் மற்றும் செல்வகுமார் ஆகிய இரண்டு பேரை மீட்கும் நடவடிக்கையில் மீட்புப் படையினர் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கல்குவாரி விபத்தில் அரியகுளம் கிராமம், ஆயர்குளத்தைச் சேர்ந்த பரமசிவன் என்பவரின் மகன் முருகன் (23) மற்றும் நான்குநேரி, இளையார் குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் செல்வன் (25) ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தி கிடைக்கப்பெற்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதுதவிர, தொழிலாளர் நல வாரியம் மூலமாக தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *