{பாகிஸ்தான்: இன்று தேர்வாகிறார் புதிய பிரதமர்!

politics

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து இன்று (ஏப்ரல் 11) புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்றம் கூடுகிறது.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான் கான் ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 28ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.

இதனால் பாகிஸ்தானில் அரசியல் பரபரப்பு நிலவி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இம்ரான்கான் தோல்வியுற்று, பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பாகிஸ்தான் பாராளுமன்றம் இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடுகிறது. பிரதமர் வேட்பாளராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஷெபாஷ் ஷெரீஃப் நேற்று மனு தாக்கல் செய்தார்.

அதுபோன்று புதிய பிரதமருக்கான போட்டியில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியும் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அக்கட்சி சார்பில் 65 வயதாகும் முன்னாள் நிதி அமைச்சர் ஷா முகமது குரேஷி முன்மொழியப்பட்டுள்ளார்.

இதனிடையே இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “1947இல் பாகிஸ்தான் சுதந்திர நாடானது. ஆனால் மீண்டும் மற்றொரு சுதந்திரப் போராட்டம் தொடங்கியுள்ளது. இந்தப் போராட்டம் பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய வெளிநாட்டு சதிக்கு எதிரானது. நாட்டு மக்கள்தான் எப்போதும் பாகிஸ்தான் இறையாண்மைக்கும் ஜனநாயகத்திற்கும் காவலர்கள்” என்று கூறியுள்ளார்.

அதுபோன்று நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீஃப், “தேசிய நல்லிணக்கம்தான் எனக்கு முதன்மையாக இருக்கும். பாகிஸ்தானின் பொருளாதாரத்தை வலுப்படுத்திய பிறகு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவுடன் அமைதியை விரும்புகிறோம் என்று தெரிவித்த அவர் காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்காமல் இது சாத்தியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *