மேக்கப் பொருட்கள், சருமப் பராமரிப்பு சாதனங்களுக்குப் பெயர்போன நைகா (Nykaa), தன்னுடைய விரைவு டெலிவரி சேவையை இன்னும் பல நகரங்களுக்குக் கொண்டுசெல்லத் தயாராகிவிட்டது. 2027 நிதியாண்டு முடிவதற்குள் 25-க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்தச் சேவையைத் தொடங்குவதுதான் இலக்கு.
ஏற்கெனவே 15 நகரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் ‘நைகா நவ்’ (Nykaa Now) சேவைக்கு வாடிக்கையாளர்களிடம் கிடைத்த வரவேற்புதான் இந்த விரிவாக்கத்துக்குக் காரணம்.
30 முதல் 60 நிமிடத்தில் டெலிவரி
பொருட்கள் ஆன்லைனில் வேகமாக வீடு வந்து சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்போது எல்லாத் துறைகளிலும் கூடிவிட்டது. அதே பாணியை அழகுசாதனப் பொருட்கள் விற்பனையிலும் நைகா கையில் எடுத்துள்ளது. நைகா நவ் மூலம் அழகுப் பொருட்கள், சருமப் பராமரிப்புப் பொருட்கள், ஆரோக்கியம் சார்ந்த பொருட்கள் 30 முதல் 60 நிமிடத்துக்குள் வாடிக்கையாளர் கைக்குப் போய்ச் சேர்கின்றன.
2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தச் சேவை வெறும் 3 நகரங்களில் மட்டுமே இருந்தது. இரண்டாவது காலாண்டில் அது 15 நகரங்களாக விரிவடைந்துவிட்டது.
1,000-க்கும் மேற்பட்ட பிராண்டுகள்
நைகா நவ் தளத்தில் 1,000-க்கும் அதிகமான முன்னணி பிராண்டுகளின் பொருட்கள் இருக்கின்றன. மற்ற விரைவு வர்த்தகத் தளங்களோடு ஒப்பிட்டால், அழகு, தனிநபர் பராமரிப்புப் பொருட்களில் தங்களிடம் இருக்கும் தேர்வு இருமடங்குக்கும் மேல் என்று நிறுவனம் சொல்கிறது. விலை உயர்ந்த பிரீமியம், ஆடம்பர அழகுப் பொருட்களுக்கும் இந்தத் தளத்தில் முக்கிய இடம் தரப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் அதிகம் செலவழிக்கிறார்களா?
நிறுவனம் தரும் தகவலின்படி, விரைவு டெலிவரி சேவையைப் பயன்படுத்துவோரின் சராசரி ஆர்டர் மதிப்பு (Average Order Value), மற்ற விரைவு வர்த்தகத் தளங்களின் அழகு, தனிநபர் பராமரிப்புப் பிரிவில் இருப்பதைவிட மூன்று மடங்கு அதிகம். நைகாவின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களோடு ஒப்பிட்டால், நைகா நவ் வாடிக்கையாளர்கள் 15 சதவீதம் அதிகமாகப் பொருட்களை வாங்குகிறார்கள்.
லாப விவரம் எங்கே?
விரைவான டெலிவரி, நிறையத் தேர்வுகள், நம்பிக்கையான பிராண்டுகள் என்ற மூன்றையும் முன்வைத்து, இந்தியாவின் அழகுசாதனச் சந்தையில் தன் பிடியை இறுக்க நைகா முயல்கிறது. ஆனால், இந்த நைகா நவ் சேவையின் தனி வருவாய், லாப விவரங்களை நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.










