திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்து, அதன் மூலம் கிடைத்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகக் கூறி, 2023 செப்டம்பர் 12ஆம் தேதி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தியது.
புதுக்கோட்டையில் மணல் குவாரி தொழிலதிபரான எஸ்.ஆர் எனப்படும் ராமச்சந்திரன் கார்ப்பரேட் அலுவலகம், திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம், சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார், ரத்தினத்தின் உறவினர் கோவிந்தன், கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றிய ஓய்வுபெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது.
இந்தநிலையில் சென்னை, அமலாக்கத்துறை இயக்குநரகம் மற்றும் தமிழ்செல்வன் மற்றும் அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன் ஆகியோர்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறை தமிழகத்தில் 34 இடங்களில் சோதனை மேற்கொண்டது.
இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், ”ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் தலைமையகக் குற்ற எண்.08/2026 ன் படி முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரை முருகன், ஏ.முத்தையா, முதன்மை தலைமை பொறியாளர் (ஓய்வு), ராமமூர்த்தி, முதன்மை தலைமை பொறியாளர் (ஓய்வு) மற்றும் நீர்வளத் துறையைச் சேர்ந்த 14 அரசு ஊழியர்கள், 10 தனியார் நபர்கள்/நிறுவனங்கள் மற்றும் பல நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2021 முதல் 2024 வரையிலான இடைப்பட்ட காலகட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள 28 குவாரிகளில் ஆற்று மணல் எடுக்கும் பணிகளில் ஊழலும் முறைகேடுகளும் நடைபெற்றுள்ளதாகவும், பணிகளில் வெளிப்படையான டெண்டர் முறைக்கு பதிலாக வரையறுக்கப்பட்ட டெண்டர் மூலம் ஒப்பந்தங்களை வழங்கி, கனிம திட்டத்தின் வரைமுறைகளுக்கு அப்பாற்பட்டு, மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் கூடுதலாக சட்ட விரோதமாக ஆற்று மணல் எடுத்தும், அனுமதிச் சீட்டு என்ற பெயரில் பற்றுச் சீட்டுகளை போலியாக தயாரித்து அவற்றை உண்மையானவை போல பயன்படுத்தி, மொத்தம் உள்ள 28 குவாரிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட 4 குவாரிகளில் ஆற்று மணலை கொள்ளையடித்து, அதன்மூலம் அரசுக்கு ரூ.1427,34,23,059/- வருவாய் இழப்பினை ஏற்படுத்தியதாக புகார்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விசாரணையின் ஒரு பகுதியாக, இன்று சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், வேலூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 34 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய 825 குற்றத்தை நிரூபிக்கும் ஆவணங்களும், 11 மின்னணு சாதனங்களும் மற்றும் 3 வங்கி லாக்கர் சாவிகள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.










