கோவையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு சமீபத்தில் தமிழக முதல்வர் விஜய் திறந்து வைத்த பெரியர் அறிவுலக நூலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பதிவில், கோவையில் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டு, கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் வாங்கியதில் ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கல்வி, நூலகம் சார்ந்த விஷயங்களிலும், அறிவை வளர்க்கும் நூல்களை வாங்குவதிலும் ஊழல் செய்வதை மன்னிக்கவே முடியாது.
எவராலும் அறியப்படாத ‘அகல் விளக்கு’ என்ற பதிப்பகத்தின் பெயரில் அச்சிடப்பட்ட 1,800 புத்தகங்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும், நாலடியார் நூல்களை மற்ற பதிப்பகங்கள் ரூ. 350-க்கு விற்கும் நிலையில், ’நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ என்னும் முந்நூறு பக்க நூலை ரூ. 1,445 வாங்கியிருப்பதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். அதை பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் மறுமொழிந்துள்ளார்.
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது தான் நூலகங்களின் நோக்கம். அவற்றில் மக்களுக்கு பயனுள்ள, அறிவை வளர்க்கக்கூடிய நூல்கள் தான் இடம்பெற வேண்டும். எவராலும் அறியப்படாத, யாருக்கும் பயன்படாத நூல்களை இதுவரை இல்லாத விலையைக் கொடுத்து வாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். இதன் பின்னணியில் உள்ள அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
எனவே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். ஊழலின் பின்னணி குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
அந்த அடிப்படையில், தவெக எம்எல்ஏ முஸ்தபாவின் உதவியாளர் கனிராஜா என்பவர் மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில், மதுரையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பி.எம். மன்னனிடம் இன்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், புகார் அளித்த கனிராஜாவிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, குதிரைப் பேர விவகாரத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அதிமுக நிர்வாகி பி.எம். மன்னனை தற்போது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பானர் சீமான் தனது எக்ஸ் பதிவில், ” கோவையிலுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்கள் சிந்தை இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையின் வாயிலாக சான்றுகளுடன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பேரதிர்ச்சி தருகின்றன. மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அறிவுத்தேடலுக்கான இடமான நூலகத்திலேயே, தவறான தகவல்கள் அடங்கிய போலி நூல்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு, முறைகேடு நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
ஏறத்தாழ 1,800 நூல்கள் ஒரே பதிப்பகத்தின் பெயரில் இடம் பெற்றிருப்பதாகவும், முந்நூறு பக்க நூல்களுக்கு 1,395 ரூபாய், 1,445 ரூபாய் என விலை குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியிருக்கும் அக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. இந்த நூல்களின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்தது யார்? அவற்றின் விலையை ஏற்றுக்கொண்டது யார்? கொள்முதலுக்கு ஒப்புதல் வழங்கியது யார்? நானூறு வெண்பாக்களின் தொகுப்பான நாலடியாரை ஒரு கவிஞராகச் சித்தரிப்பதும், மதுரைக்காஞ்சியை எழுதிய மாங்குடி மருதனாருக்குப் பதிலாக இல்லாத பெயர்களையும், வரலாற்றையும் முன்வைப்பதும் எத்தகைய அபத்தம்? தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றையே தவறாக எழுதி வைத்துள்ள நூல்களை மாணவர்களும், போட்டித்தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களும் படித்தால் என்ன ஆகும்? அறியாமையை அகற்ற வேண்டிய நூலகத்தில், அறியாமையையே அச்சடித்து அடுக்கி வைப்பதுதான் அரசின் சாதனையா? நூல்களின் பன்னாட்டுத் தரப் புத்தக எண்கள் போலியானவை என்றும், ஆசிரியர்களின் அடையாளங்கள் மற்றும் பதிப்பக முகவரி குறித்துச் சந்தேகங்கள் இருப்பதாகவும் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அரசு உடனடியாக விளக்கமளிக்க முன்வர வேண்டும். தவறான தகவல்களைக் கொண்டு, செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டப் போலி நூல்களைக் கொள்முதல் செய்வதில் நடைபெற்ற இம்மாபெரும் முறைகேடு ஆட்சியின் அவல நிலைக்கான சான்றாகும்.
ஒருபக்கம், பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகாலை ஆறு மணிக்கே திரையரங்குகளைத் திறக்க ஏற்பாடு செய்கிறது தவெக அரசு. மற்றொரு பக்கம், அறிவுக்கண்ணைத் திறக்க வேண்டிய நூலகத்தில், புத்தகங்களிலேயே ஊழல் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுமளவுக்கு நிர்வாகம் செய்கிறது. மக்களைப் பொழுதுபோக்கில் மூழ்கடித்துவிட்டு, அவர்களின் அறிவுத்தேடலையும் மோசடிபேர்வழிகளிடம் ஒப்படைக்க முனைவது பெரும் அவலம் இல்லையா? திரையரங்கத்தில் திரைப்படக்காட்சிகளை அதிகரிப்பதில் காட்டும் அக்கறையில் சிறிதளவையாவது நூலகங்களின் தரத்தை உறுதிசெய்வதில் காட்டியிருக்க வேண்டாமா? மக்கள் எத்தனை காட்சிகள் திரைப்படம் பார்க்க வேண்டும் எனச் சிந்திக்கும் அரசு, அவர்கள் எத்தகைய நூல்களைப் படிக்கிறார்கள் என்று சிந்திக்காதது ஏன்?
நூலகத்தின் பெருமை என்பது அதன் உயரமானக் கட்டிடத்திலும், பளபளப்பான அலமாரிகளிலும் இல்லை; அதற்குள் இருக்கும் நூல்களின் தரத்தில்தான் இருக்கிறது. தவறான தகவல்களை நூலகத்தின் வழியாக மக்களிடம் கொண்டுசேர்ப்பது, பண மோசடியையும் கடந்து ஒரு தலைமுறையின் அறிவு வளர்ச்சியையே பாதிக்கும் மாபெரும் முறைகேடாகும். முந்தைய திமுகவின் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதைக் கூறி, இன்றைய அரசு தன்னுடையப் பொறுப்பிலிருந்து விலக முடியாது. அதேபோல, திட்டத்தை உருவாக்கிய பெருமையை உரிமைகோரும் முந்தைய திமுகவின் ஆட்சியாளர்களும், கொள்முதல் குறித்த கேள்விகளுக்கு விளக்கமளிக்க முன்வர வேண்டும். எந்தக் காலக்கட்டத்தில், யாருடைய ஒப்புதலுடன் முறைகேடுகள் நடந்திருந்தாலும், அனைத்தையும் வெளிச்சத்திற்கு வர வேண்டியது பேரவசியமாகும்.
ஆகவே, பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் தொடர்பான தேர்வுக்குழு விவரங்கள், பரிந்துரைகள், வழங்கல் ஆணைகள், நூல்களின் பட்டியல், விலை மற்றும் பணப்பட்டுவாடா விவரங்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனவும், எழுத்தாளுமைகளைக் கொண்ட குழுவின் மூலம் நூல்களின் தரத்தை ஆய்வுசெய்து, தவறான தகவல்கள் கொண்ட போலி நூல்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், கொள்முதல் முறைகேடுகள் குறித்து நீதிவிசாரணையும், சிறப்புத் தணிக்கையும் நடத்தி, குற்றத்தில் தொடர்புடைய அதிகாரிகள், விநியோகிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுத்து கைதுசெய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரியார் அறிவுலகத்தின் நான்காம் தளத்தில், “அகல்விளக்கு பதிப்பகம்” வெளியிட்ட கிட்டத்தட்ட 1,800 நூல்கள் இருப்பதாகவும், இந்த பதிப்பகத்தில் முகவரி உள்ளிட்ட அனைத்தும் போலி என்றும், இந்த நூல்களை எழுதியவர்கள் அனைவரும் போலி எழுத்தாளர்கள் என்றும் மிகுந்த வேதனையுடன் எழுத்தாளர் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
300 பக்கங்களைக் கொண்ட நூல்களுக்கு, முன்னணி பதிப்பகங்கள், ரூ.300 முதல் ரூ.400 வரை மட்டுமே விலை நிர்ணயம் செய்கின்றன. வெளிநாட்டில் அச்சிடப்பட்டு, வெளியிடப்பட்ட நூல்களுக்கு கூட இந்த விலை கிடைப்பதில்லை. ஆனால், அகல்விளக்கு பதிப்பகத்தின் 300 பக்க நூல்களுக்கு ரூ. 1,400க்கு மேல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன். இந்த நூல்களில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் கட்டுக்கதைகள் என்பதையும், செயற்கை நுண்ணறிவு கொண்டு போலியாக நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும் பெருமாள் முருகன அம்பலப்படுத்தியுள்ளார். கீழடி அகழாய்வில் நந்தி கண்டறியப்பட்டதாக, படத்துடன் ஒரு புத்தகம் உள்ளது. மகாகவி பாரதியாரின் எழுத்துகள் போல போலியாக எழுதப்பட்ட நூலும் உள்ளது.
நூல் கொள்முதல் செய்வதிலேயே இந்த அளவுக்கு ஊழல் நடந்திருக்கும்போது, கட்டிடம் கட்டியதில் எந்த அளவுக்கு ஊழல் நடந்திருக்கும் என்பதை நினைக்கும்போதே அச்சமாக இருக்கிறது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பெரியார் அறிவுலகத்தில் உள்ள அனைத்து நூல்களையும் ஆய்வு செய்து, போலி நூல்களை உடனடியாக அகற்ற வேண்டும். செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி நூல்களை, மூன்று நான்கு மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கி பெரும் ஊழலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களிலும் இது போன்ற முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தோடு தொடர்புடைய நூலகத்திலும் ஊழல் செய்தவர்களை தப்ப விட்டு விடக்கூடாது.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்கு துரோகம் செய்த பெரும் கொள்ளைக்காரர்களை அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேளண்டும். தி.மு.க., திராவிடம் பேசுவதே கொள்ளையடிப்பதற்காகத் தான் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வீ த லீடர்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், “கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம் நூலகத்தில், புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.
நூலகம் என்பது வெறும் கட்டிடம் அல்ல. வீட்டில் புத்தகங்கள் வாங்கிப் படிக்கப் பொருளாதார வசதியில்லாத மாணவர்களுக்கும், TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் அறிவையும், வாய்ப்புகளையும் சமமாகப் பகிர்ந்தளிக்கும் ஓர் உன்னதமான பொதுச் சொத்து. அத்தகைய ஒரு நூலகத்திற்காக ஒதுக்கப்படும் மக்கள் வரிப்பணத்தில் முறைகேடு நடந்திருக்குமானால், அது ஒரு நிதி முறைகேடு மட்டுமல்ல அடுத்த தலைமுறையின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்குச் செய்யப்படும் துரோகம்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இந்த நூலகத்திற்குப் புத்தகங்களைப் பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்த புத்தகங்களின் முழுமையான பட்டியல் என்ன? அந்தப் பட்டியலில் இடம்பெற்ற அனைத்து புத்தகங்களும் உண்மையில் கொள்முதல் செய்யப்பட்டனவா? கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை, ISBN எண்கள், கொள்முதல் செய்யப்பட்ட தேதி, நூலகத்தை வந்தடைந்த தேதி ஆகியவற்றைச் சரிபார்த்தவர்கள் யார்? புத்தகங்களின் தரம், உள்ளடக்கம் மற்றும் விலை ஆகியவற்றை ஆய்வு செய்த நடைமுறை என்ன? இந்தக் கேள்விகளுக்கு ஆவணப்பூர்வமான பதில்கள் அளிக்கப்பட வேண்டும்.
புத்தகக் கொள்முதல் தொடர்பான பரிந்துரைக் குழுவின் அறிக்கை, பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல், கொள்முதல் ஆணைகள், விலைப்பட்டியல், விநியோக ஆவணங்கள், சரிபார்ப்புக் குழுவின் அறிக்கை என அனைத்தும் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். ஒவ்வொரு புத்தகமும் உரிய விலைக்கு வாங்கப்பட்டதா, வாங்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் நூலகத்தைச் சென்றடைந்தனவா என்பது குறித்து சுதந்திரமான, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அறிவைப் பகிர வேண்டிய நூலகத்தையே, ஊழலுக்கான கூடாரமாக மாற்றியிருந்தால், அது வெறும் மக்கள் வரிப்பணக் கொள்ளை அல்ல அறிவுக் கொள்ளை. இதற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பெருமைக்குரிய அறிவுசார் முன்னெடுப்புகளில் ஒன்றாக, கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள “பெரியார் அறிவுலகம்” முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் 2026 அக்டோபர் 16 அன்று திறந்து வைக்கப்பட்டது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில், ஏழு ஏக்கர் பரப்பளவில், ஏழு தளங்களைக் கொண்ட கட்டிடமாக இது கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எழுத்தாளர் பெருமாள் முருகன், “பெரியார் அறிவுலகத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது” என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, நூல் கொள்முதலில் மிகப்பெரிய அளவில் திட்டமிட்ட முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அவர் எடுத்துரைத்துள்ளார்.
நூலகங்களுக்கான நூல் கொள்முதலில் பின்பற்றப்பட வேண்டிய அரசு விதிமுறைகளும் வழிகாட்டுதல்களும் உள்ளன. ஆனால், பெரியார் அறிவுலக நூலகத்திற்கான நூல் கொள்முதலில் இத்தகைய விதிமுறைகளும் வழிகாட்டுதல்களும் முறையாகப் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. அரசுப் பணத்தைத் திட்டமிட்டுச் சூறையாடும் நோக்கில், முறையற்ற வழிகளில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலை அளிக்கின்றன.
ஒருபுறம் பொதுமக்களின் வரிப்பணம் சூறையாடப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மறுபுறம் அறிவுக்கு ஒவ்வாத உள்ளடக்கங்களைக் கொண்ட நூல்கள் தயாரிக்கப்பட்டு, அவை நூலகத்தில் இடம்பெற்றுள்ளதன் மூலம் அறிவுத் தளத்திலும் மோசடி அரங்கேறியுள்ளதாகத் தெரிகிறது.
தமிழ்ச் சமூகத்தை அறிவார்ந்த திசையில் வழிநடத்த வேண்டிய நூலகத்திலேயே இத்தகைய அறிவு மோசடி நடைபெற்றிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.
எனவே, பெரியார் அறிவுலக நூலகத்திற்கான நூல்களைத் தேர்வு செய்யப் பரிந்துரைத்த குழுவில் இடம்பெற்றவர்கள் யார் ? இத்தகைய தரமற்ற, போலியான நூல்களை வாங்குவதற்கு அவர்கள் எவ்வாறு ஒப்புதல் அளித்தனர்? இந்த முறைகேடுகளுக்குத் துணைபோனவர்கள் யார் ? எப்போது டெண்டர் விடப்பட்டது? எப்போது கொள்முதல் செய்யப்பட்டது ? உள்ளிட்ட கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு மக்கள் மன்றத்தில் வெளிப்படையாகப் பதிலளிப்பதே பொருத்தமானது.
அரசு உடனடியாக தமிழ் அறிஞர்கள் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும், நூலகத்தில் இடம்பெற்றுள்ள நூல்கள் அனைத்தையும் ஆராய்ந்து போலியானவை என உறுதிப்படுத்தப்படும் நூல்களை உடனடியாக நீக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறப்பு புலன் விசாரணைக்குழு ஒன்றை அமைத்து முறைகேடுகள்,மோசடிகளை கண்டறிந்து அவற்றிற்கு காரணமான அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
மேலும், அரசு நூலகங்களில் நூல்கள் கொள்முதல் செய்யும்போது அரசின் விதிமுறைகளும், வழிகாட்டுதல்களும் முறையாகப் பின்பற்றப்படுவதைத் தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்துவதுடன், அதனைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. ” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.










