பெரியார் அறிவுலகத்திற்கான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை தொடங்கபட்டுள்ளது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
கோவையில் தொடங்கப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்திற்கு, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் புத்தகங்களை வாங்குவதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எழுந்தாளர் பெருமாள் முருகன் சிந்தை தளத்தில் எழுதிய கட்டுரையில், யாரும் அறியாத ‘அகல் விளக்கு’ என்ற பதிப்பகத்தின் பெயரில் அச்சிடப்பட்ட 1,800 புத்தகங்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும், நாலடியார் நூல்களை மற்ற பதிப்பகங்கள் ரூ. 350-க்கு விற்கும் நிலையில், சூர்யா பாலு என்ற பெயரில் எழுதப்பட்ட ’நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ என்னும் முந்நூறு பக்க நூலை ரூ. 1,445 வாங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
இது குறித்துச் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “பெரியார் அறிவுலகம் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குப் புத்தகங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதனைப் படிக்கும் போது ஒரு பக்கம் வேதனையாகவும், மறுபக்கம் சிரிப்பாகவும் இருக்கிறது.
நானும் ஒரு வாசகன்தான். ஆனால் பெரியார் அறிவுலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களின் பெயர்களை எல்லாம் என் வாழ்நாளிலேயே நான் கேள்விப்பட்டதே இல்லை. ஒரே பதிப்பகத்தில் 1,500-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கியுள்ளனர். அப்படி ஒரு பதிப்பகம் செவ்வாய் கிரகத்தில் கூட இல்லை. கடந்த ஆட்சியில் பிப்ரவரி மாதமே அவசர அவசரமாகப் புத்தகங்களை வாங்கியுள்ளனர். இது கடந்த ஆட்சியில் நடைபெற்ற மெகா ஊழலுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். தந்தை பெரியார் பெயரிலேயே இப்படி ஊழல் செய்தது வெட்கக்கேடானது” எனக் கடுமையாகச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், “யாரென்றே தெரியாத ஒரு எழுத்தாளரின் பெயரில் கீழடி குறித்த ஒரு புத்தகம் இடம்பெற்றுள்ளது. அதில் ‘கீழடியில் எடுக்கப்பட்ட சிலை’ என்று கூகுளில் இருந்து ஒரு படத்தை எடுத்துப் போட்டுள்ளனர். ஆனால், அப்படி ஒரு சிலையே கீழடியில் கண்டெடுக்கப்படவில்லை! அதேபோல ‘பாரதியாரின் கதைகள்’ என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளனர். நல்லவேளை, அந்த கதைகளை எல்லாம் படிக்காமல் பாரதியார் முன்பே இறந்துவிட்டார்; பத்தாம் வகுப்பு மாணவர் கூட அதைவிடச் சிறப்பாக எழுதுவான்” என்று தெரிவித்தார்.
இறுதியாக, என் தலைவர் ஸ்டெயிலில் சொல்வதென்றால் தொடமாட்டோம். தொட்டவர்களையும் விடமாட்டோம். இதில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் நிச்சயமாகச் சட்டத்தின் முன் நிறுத்தி நீதி நிலை நாட்டப்படும் என்றும் உறுதியளித்தார்.










