தமிழ்நாட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் சுமார் ரூ.4,730 கோடி மதிப்பிலான ஆற்று மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக, திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு வரை சட்டவிரோதமாக சுமார் 23 லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டதாகவும், இதன் மூலம் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாகவும் அமலாக்கத்துறை கண்டறிந்தது. இது தொடர்பான புகார்கள் மற்றும் கூடுதல் ஆதாரங்களை ‘அறப்போர் இயக்கம்’ லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அளித்திருந்தது.
இந்த மணல் கொள்ளை மற்றும் ஊழல் விவகாரத்தில் தொழிலதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் உள்ளிட்ட பலருக்கு நெருக்கமான பலருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இவ்விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் 13-ஆம் தேதி கடிதம் அனுப்பியது. இருப்பினும், அப்போதைய திமுக ஆட்சியில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கடந்த ஜூலை 18-ஆம் தேதி அமலாக்கத்துறை மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதத்தை அனுப்பியது.
அமலாக்கத்துறை அளித்த ஆவணங்கள் மற்றும் அறப்போர் இயக்கத்தின் புகாரின் அடிப்படையில் சென்னை சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை முடித்து, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல் ஜி.டி.என் சாலையில் உள்ள பிரபல தொழிலதிபர் ரத்தினத்தின் இல்லம், அலுவலகம் மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், புதுக்கோட்டை உட்பட தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரி அதிபர்களின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










