தவெக ’மாஜி’ நிர்வாகி பூபாலன் பிடிபட காரணமான ரூ.3,000 கோடி போதை பொருள் கடத்தலில் தாவூத் கும்பல்- ஆயுத கடத்தலுக்கும் சதி? ஷாக் தகவல்!

By Mathi

|

Published on 6 Nov 2026, 8:13 AM

TVK-Drug Case

தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் பிடிபடுவதற்கு காரணமான ரூ.3,000 கோடி போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் தாவூத் இப்ராஹிம் கும்பலுக்குத் தொடர்பு இருப்பதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி IANS செய்தி நிறுவனம் கூடுதல் தகவல்களை வெளியிட்டுள்ளது.

லட்சத்தீவு அருகே அரபிக்கடலில் செப்டம்பர் 25-ந் தேதி இந்திய கடலோரக் காவல்படை நடத்திய அதிரடி நடவடிக்கையில் சுமார் 526 கிலோ மெத்தாம்பெட்டமைன் மற்றும் ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.3,000 கோடி எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கடத்தலில் ஈடுபட்டதாக 5 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த ”16 நாள் ஆபரேஷன்” எப்படி நடந்தது என்பதை நமது மின்னம்பலத்தில் அக்டோபர் 31-ந் தேதி விரிவாகவே பதிவு செய்திருந்தோம். அத்துடன் ஈரான், பாகிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் தொடர்பு குறித்தும் அதில் வெளியிட்டிருந்தோம்.

ADVERTISEMENT

இந்த லட்சத்தீவு ஆபரேஷனைத் தொடர்ந்தே வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) களமிறங்கி அக்டோபர் 16, 17 தேதிகளில் நாகப்பட்டினம் கடலோரப் பகுதியில் சோதனை நடத்தியது. இதில் 137 கிலோ மெத்தாம்பெட்டமைன் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகம். இதனையடுத்துதான் தவெக முன்னாள் நிர்வாகி பூபாலன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

லட்சத்தீவு கடத்தலில் தாவூத் கும்பல்

இந்த நிலையில், லட்சத்தீவு அருகே ரூ.3,000 கோடி போதைப்பொருள் பிடிபட்ட சம்பவம் தொடர்பாக IANS செய்தி நிறுவனம் நவம்பர் 4-ந் தேதி அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அச்செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ’லட்சத்தீவு’ சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பாகிஸ்தானியர்களும் தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியான ஹாஜி சலீமின் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்குடன் தொடர்புடையவர்கள் என்று இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாவூத் இப்ராஹிமின் D-Syndicate அமைப்பின் தென்னிந்திய நடவடிக்கைகளை ஹாஜி சலீம் நிர்வகித்து வருகிறார். மத்திய பாதுகாப்பு அமைப்புகளின் அதிரடி நடவடிக்கைகளால் ஹாஜி சலீம் நெட்வொர்க்குக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மெக்சிகோ போதைப்பொருள் கும்பலுடன் கூட்டணி

மெக்சிகோவின் முக்கியமான போதைப்பொருள் கடத்தல் கும்பலான Cartel Jalisco Nueva Generación (CJNG) மற்றும் ஹாஜி சலீம் இடையே நேரடித் தொடர்பு இருப்பதற்கான தகவல் தொடர்புகளையும் இந்திய உளவுத்துறை கண்டறிந்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளின் நடவடிக்கைகளால் மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. மெத்தாம்பெட்டமைன் (Methamphetamine) என்ற செயற்கைப் போதைப்பொருளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சூடோஎபெட்ரின் (Pseudoephedrine) போன்ற மூலப்பொருட்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மியான்மரில் செயல்படும் ஆயுதக் கிளர்ச்சிக் குழுக்களுடன் மெக்சிகோ கும்பல்கள் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

மியான்மரிலிருந்து போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களைப் பெற்று, இந்தியாவின் எல்லைப் பகுதிகள் வழியாக அவற்றைக் கடத்துவதற்கு இந்தக் குழுக்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளன.

இந்தியாவையே போதைப்பொருள் உற்பத்தி மையமாக மாற்றி, இங்கிருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குக் கடத்துவதுதான் மெக்சிகோ கும்பல்களின் திட்டம்.

ஆயுதக் கடத்தலிலும் ஈடுபடத் திட்டமா?

தாவூத் கும்பலும் மெக்சிகோ போதைப் பொருள் கும்பலும் போதைப்பொருள் கடத்தலுடன் நின்றுவிடாமல் ஆயுதக் கடத்தலிலும் ஈடுபடக்கூடும்.

பாகிஸ்தானை மையமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் கிடைக்கும் பணம், இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்குச் செல்லும் அபாயம் இருப்பதாகவும் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெக்சிகோ கும்பல்களுடன் இணைவதன் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த கடத்தல் அமைப்புகளுக்கும் வடகிழக்கு கிளர்ச்சிக் குழுக்களுக்கும் அதிக வருமானம் கிடைக்கக்கூடும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கடத்தல் அமைப்புகள் ஒரே நெட்வொர்க்காக செயல்படுவது இந்திய பாதுகாப்பு அமைப்புகளுக்குப் புதிய சவாலாக அமையும். இவ்வாறு IANS செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel