குதிரை பேர குற்றச்சாட்டு: அதிமுக நிர்வாகி பி.எம். மன்னன் கைது

By Pandeeswari Gurusamy

|

Published on 6 Nov 2026, 12:20 PM

அதிமுக நிர்வாகி முஸ்தபாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரத்தில் அதிமுக நிர்வாகி பி.எம். மன்னன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தவெக ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் தொடர்ச்சியாக முயற்சித்து வருவதாக தவெக தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. முஸ்தஃபா சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும்போது, தவெக அரசை எதிர்த்து வாக்களித்தால் தனக்கு ரூ.30 கோடி வரை தருவதாக அதிமுக நிர்வாகி ஒருவர் குதிரைப் பேரத்தில் ஈடுபட்டார் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இதுகுறித்துத் தன் கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ADVERTISEMENT

அந்த அடிப்படையில், தவெக எம்எல்ஏ முஸ்தபாவின் உதவியாளர் கனிராஜா என்பவர் மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில், மதுரையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பி.எம். மன்னனிடம் இன்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், புகார் அளித்த கனிராஜாவிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, குதிரைப் பேர விவகாரத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அதிமுக நிர்வாகி பி.எம். மன்னனை தற்போது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel