குதிரை பேர வழக்கில் அதிமுக நிர்வாகி மன்னன் கைதை ரத்து செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றி கழக எம்எல்ஏ முஸ்தபா, தன்னிடம் அதிமுகவினர் குதிரை பேரம் பேசினர் என்று பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.
அதாவது தமிழக வெற்றிக்கழக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்போது அதை எதிர்த்து வாக்களிக்க முதல் தவணையாக 15 கோடியும், பிறகு 15 கோடி ரூபாயும் தருவதாக பேசப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் அது யார் என்று தெரியும் என்று கூறியிருந்தார்.
இந்த சூழலில் முஸ்தபா உதவியாளர் கனிராஜா கொடுத்த புகாரின் பேரில், அதிமுக நிர்வாகி மன்னன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து இன்று அவரை கைது செய்து, விஸ்வநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதேபோன்று முஸ்தபாவின் உதவியாளர் கனிராஜாவிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதிமுக நிர்வாகி மன்னனுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து அவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஜோசப் ஜாய் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அதிமுக நிர்வாகி மன்னன் சார்பில், இந்த வழக்கில் நவம்பர் 7ஆம் தேதி தான் ஆஜராக மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மன்னனுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.
ஆனால் இன்று கைது செய்தது சட்டவிரோதம் என்று வாதிடப்பட்டது.
அரசு சார்பில் வழக்கின் முக்கியத்துவம் கருதி கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அதிமுக நிர்வாகி மன்னனை நீதிமன்ற காவலில் வைக்க மறுத்துவிட்டார்.
அவரை கைது செய்தது சட்டவிரோதம் என்று கூறிய நீதிபதி ஜோசப் ஜாய், மாவட்ட குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி அவரை விடுவித்து உத்தரவிட்டார்.










