ஜெரோதாவில் இனி ஒரே நாளில் ரூ.5 லட்சம் வரை உடனே பணம் எடுக்கலாம்! சனி, ஞாயிறும் உண்டு

By Minnambalam Desk

|

Published on 6 Nov 2026, 11:08 PM

பங்குச்சந்தையில் பணம் போடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. முன்னணி ஆன்லைன் பங்கு வர்த்தக நிறுவனமான ஜெரோதா (Zerodha), தன் வாடிக்கையாளர்கள் டிரேடிங் கணக்கிலிருந்து வங்கிக் கணக்குக்கு உடனடியாகப் பணம் மாற்றிக்கொள்ளும் தினசரி வரம்பை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது. அவசரத் தேவைக்குப் பணம் வேண்டுபவர்கள் இனி அதிகத் தொகையையும் காத்திருக்காமல் எடுத்துக்கொள்ளலாம்.

நிதின் காமத் சொன்னது

ADVERTISEMENT

இந்த மாற்றத்தை ஜெரோதாவின் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான நிதின் காமத் நவம்பர் 3-ம் தேதி அறிவித்தார். இதுவரை ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் மட்டுமே உடனடியாக எடுக்க முடிந்தது. இப்போது அது ரூ.5 லட்சம்.

இந்த வசதியில் குறைந்தபட்சம் ரூ.100, அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை எடுக்கலாம். இதற்கு வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

ADVERTISEMENT

வாரத்தின் ஏழு நாளும் வசதி

இன்னொரு முக்கிய மாற்றமும் இருக்கிறது. இந்த வசதி இப்போது தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். சனி, ஞாயிறு, பங்குச்சந்தை விடுமுறை நாட்களிலும் பயன்படுத்தலாம். கோரிக்கை கொடுத்த சில நிமிடங்களுக்குள், ஜெரோதா கணக்கோடு இணைக்கப்பட்ட முதன்மை வங்கிக் கணக்குக்குப் பணம் வந்துவிடும்.

ADVERTISEMENT

ஜெரோதா செயலியில் எப்படி எடுப்பது?

  • முதலில் Zerodha Kite செயலியைத் திறந்து உள்நுழையுங்கள்.
  • Funds பகுதிக்குப் போய், Withdraw என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
  • அங்கே Instant Withdrawal விருப்பத்தைத் தொட்டு, தேவையான தொகையை உள்ளிடுங்கள்.
  • வங்கிக் கணக்கு விவரங்களைச் சரிபார்த்துக் கோரிக்கையைச் சமர்ப்பியுங்கள்.

ஒரு நாளைக்கு ஒரே ஒரு முறை மட்டுமே இந்த உடனடி வித்ட்ரா கோரிக்கையைக் கொடுக்க முடியும்.

ரூ.5 லட்சத்துக்கு மேல் எடுக்கவே முடியாதா?

இங்கே ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். ரூ.5 லட்சம் என்பது உடனடியாக எடுப்பதற்கான உச்சவரம்பு மட்டுமே. அதற்கு மேல் பணம் எடுக்கவே முடியாது என்று அர்த்தம் இல்லை. வழக்கமான வித்ட்ரா வசதி மூலம் அதிகத் தொகையையும் வங்கிக் கணக்குக்கு மாற்றலாம்.

ஆனால், அன்றைய தினம் கணக்கில் செலுத்திய பணத்தை உடனே திரும்ப எடுக்க முடியாது. பங்குகளை விற்றதால் வரும் தொகைக்கும் செட்டில்மென்ட் விதிகள் பொருந்தும். இந்த வசதி 2024-ல் அறிமுகம் ஆனதிலிருந்து, சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிமாற்றங்களைக் கட்டணம் இல்லாமல் செய்துகொடுத்துள்ளதாக நிதின் காமத் தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel