174 உயிர்களை நடுவானில் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சார்.. மோடி, டிரம்ப் புகழாரம்!

Published On:

| By Mathi

Indian-Pilot

இஸ்ரேல் சென்ற விமானத்தில் 174 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு உலக தலைவர்களின் பாராட்டுகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன.

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் ஏற்பட்ட மோதலில், இந்திய விமானி ஸ்மித் மச்சார் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்தார்.

ADVERTISEMENT

அந்த நிலையிலும் அவர் போராடி விமானிகள் அறையின் கதவை திறந்தார். இதையடுத்து பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்ளே சென்று தாக்குதல் நடத்திய துணை விமானியை மடக்கிப் பிடித்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஸ்மித் மச்சாரின் துணிச்சலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்கெனவே பாராட்டி இருந்தார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் இன்று (அக்டோபர் 1) ஸ்மித் மச்சாரை பாராட்டியுள்ளார்.

ADVERTISEMENT

பிரதமர் மோடி தமது எக்ஸ் பதிவில், “கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ. மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டபோதும், படுகாயமடைந்த நிலையிலும் மற்றவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் மிகுந்த துணிச்சலை வெளிப்படுத்தினார். அவரது வீரத்தால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டதுடன், மிகப்பெரிய விபத்தும் தவிர்க்கப்பட்டது.

கேப்டன் ஸ்மித் மச்சாரை நினைத்து இந்தியா பெருமைப்படுகிறது. அவர் விரைவில் குணமடைந்து முழு உடல்நலம் பெற பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

டிரம்ப் பாராட்டு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ஸ்மித் மச்சாரை ஹீரோ என பாராட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “விமானி படுகாயமடைந்த நிலையில் இருந்தார். அப்போதும் அவரது உடல்நிலை மோசமாகத்தான் இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் அந்த நிலையிலும் அவர் செயல்பட்ட விதம் ஆச்சரியமானது. ஒரு வகையில் அவர் ஹீரோ” என்று டிரம்ப் கூறினார்.

அத்துடன் தாக்குதல் நடத்திய துணை விமானி பயங்கரவாதியாக இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது காரணத்தால் இவ்வாறு நடந்திருக்கலாம் என்றும் டிரம்ப் கூறினார். அதேநேரம், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் இருந்து தனக்கு கிடைத்த தகவல்களையே கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய தூதரகம் சல்யூட்

இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகமும் ஸ்மித் மச்சாரை பாராட்டியுள்ளது. “FZ1073 விமானத்தின் துணிச்சலான இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு சல்யூட். காயமடைந்த நிலையிலும் துணிச்சலுடனும் நிதானத்துடனும் செயல்பட்டார். அவர் விரைவில் முழுமையாக குணமடைய பிரார்த்திக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சவுதி அரேபியாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்மித் மச்சாரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அவரது குடும்பத்தினருடனும் இந்திய அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.

யானிவை சந்தித்த நெதன்யாகு

இந்த சம்பவத்தில் விமான பயணி யானிவ் ஹயூனும் முக்கிய பங்கு வகித்தார். அதாவது ஸ்மித் மச்சார் கதவை திறந்ததும் விமானிகள் அறைக்குள் சென்ற யானிவ், தாக்குதல் நடத்தியவரை பிடித்து வெளியே இழுத்தார். அப்போது விமானம் வேகமாக கீழே சென்றுகொண்டிருந்த நிலையில், விமானத்தின் கட்டுப்பாட்டை பிடித்து அதை நிலைப்படுத்தவும் முயன்றார். பின்னர் மற்ற விமானிகள் வந்து விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் இஸ்ரேல் திரும்பிய யானிவை பென் குரியன் விமான நிலையத்தில் நெதன்யாகு நேரில் சந்தித்து பாராட்டினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share